கட்டுரைகள்
Published:Updated:

தேனாக ருசிக்கும் அதிசயம்... வெள்ளியணை அதிரசம்!

அதிரசம்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிரசம்

எங்க காலத்துக்குப் பிறகும் பல தலைமுறை கடந்தும் இந்தத் தொழில் நடக்கணும்கிறதுதான் எங்க ஆசை. அது, நடக்கும்னு நம்புறோம்

திருநெல்வேலி சென்றால், அல்வா; பழனி என்றால், பஞ்சாமிர்தம்; மணப்பாறை செல்பவர்களுக்கு முறுக்கு... இப்படி ஊருக்கு ஒன்று என 'நேட்டிவ் ஸ்பெஷல்' உணவுகள் மனக்கண் முன் வந்துபோகும். அந்த வகையில், கரூருக்கு வெள்ளியணை அதிரசம்!

வெள்ளியணையைச் சுற்றியுள்ள கிராமங்கள், நகரங்கள் மட்டுமல்லாமல் அங்கிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் என வாழும் மக்களும் இந்த வெள்ளியணை அதிரசத்துக்கு ரசிகர்களாக இருக்கக் காரணம்... அச்சு வெல்லம், காவிரித் தண்ணீர் பயன்படுத்திச் செய்யப்படும் `கைப்பக்குவம்தான்' என்கிறார்கள் அதன் ருசி கண்டவர்கள். `வெள்ளியணையில் 100 வருடங்களைக் கடந்து நான்காவது தலைமுறையாக அதிரசம் தயாரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் முத்து குடும்பம் தயாரிக்கும் அதிரசத்துக்கு கொஞ்சம் மகத்துவம் அதிகம்' என்றும் சொல்கிறார்கள். முத்துவின் முதல் மகனான விஜயகுமார், `முத்து நாயுடு அதிரசக் கடை' என்று வெள்ளியணையில் கடை நடத்திவருகிறார். அதிரசத்தைச் சுட்டுக்கொண்டிருந்த அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, ``என்னோட கொள்ளுத்தாத்தா ஆரம்பிச்ச தொழில் இது. 100 வருஷத்துக்கு முன்னாடி, எங்க கொள்ளுத்தாத்தா காலத்துல விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க. திடீர்னு இந்தப் பகுதியில் மழைத்தண்ணிக்கு வழியில்லாம, வறட்சி நிலவியிருக்கு. இதனால், வாழ்க்கையை ஓட்ட, வேறு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான், எங்க கொள்ளுத்தாத்தாவின் மருமகளும் என் பாட்டியுமான ராஜம்மாளோட கைப்பக்குவத்தை நம்பி, அதிரசக் கடையை ஆரம்பித்திருக்கிறார். அதன்பிறகு, எங்க தாத்தா வேணுகோபால நாயக்கர், இந்த அதிரச விற்பனையை அதிகப்படுத்தியிருக்கிறார். கால் அணா, அரை அணான்னு விலைவச்சு விற்கப்பட்ட அதிரசத்தின் ருசிக்கு, மக்கள் அடிமையாகியிருக்காங்க.

பிறகு, எங்க அப்பா முத்துவும், அம்மா கோதையம்மாளும் இந்தத் தொழிலைத் திறம்படச் செய்ய ஆரம்பிச்சாங்க. அதுவரை, வீட்டுல வைத்து மட்டும் விற்பனை செஞ்சாங்க. எங்கப்பா அதை விரிவுபடுத்தி, அதிரசத்தை அக்கம்பக்கத்துல உள்ள திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல்னு பல மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். தன் பெயரில் வெள்ளியணையில் அதிரசம் விற்பனை செய்யும் கடையைத் தொடங்கினார் அப்பா.

அதிரச கடை
அதிரச கடை

நான், தம்பிகள் சுகுமார், கண்ணதாசன் என்று மொத்தம் மூன்று பிள்ளைகள். அப்பா இருக்கிற வரைக்கும் மூன்று பேரும் ஒண்ணா அதிரசம் தயாரித்து விற்பனை செய்தோம். அவர் மறைவுக்குப் பிறகு, மூன்று குடும்பங்களும் தனித்தனியாக அதிரசம் தயாரித்து விற்கிறோம். நாங்க, `முத்து நாயுடு அதிரசக் கடை'ங்கிற பெயர்ல விற்பனை செய்றோம். எங்க கடை அதிரசத்தை உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள பல மாவட்ட மக்கள் விரும்பிச் சாப்பிடுறாங்க. மும்பை, டெல்லி, பெங்களூரு என்று வெளியூர்களிலும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என்று வெளிநாடுகளிலும் வசிக்கும் கரூரைச் சேர்ந்தவங்க ஊருக்கு வரும்போது, கட்டாயம் எங்க கடைக்கு வந்து அதிரசத்தை வாங்கிட்டுப் போவாங்க.

எங்கப்பா, `வறுமையில் வாடிய நம் முன்னோர்களை இந்தத் தொழில்தான் கைகொடுத்து, கரைசேர்த்துச்சு. இப்போது, நம்ம குடும்பம் கடன் கப்பின்னு இல்லாம இருக்கவும் இந்தத் தொழில்தான் காரணம். அதனால், தொழிலை என் காலத்துக்குப் பிறகும் நேர்மையா, தரம் மாறாமப் பண்ணுங்க'ன்னு என்கிட்டேயும் தம்பிகள்கிட்டேயும் அடிக்கடி சொல்வார். அதை அரிச்சுவடியா மனசுக்குள்ள பதிச்சுக்கிட்டு, அதிலிருந்து கொஞ்சமும் வழுவாம இந்தத் தொழிலைச் செய்திட்டிருக்கோம்.

என் மனைவி உமாமகேஸ்வரிக்கும், எங்க பாட்டி ராஜம்மாளோட கைப்பக்குவம் அப்படியே வாய்ச்சிருப்பதால், எங்களால் இந்தத் தொழிலில் திறம்படச் செயல்பட முடிகிறது. எங்க பிள்ளைகள் கல்லூரிப் படிப்பு படிச்சாலும், `இந்தப் பாரம்பர்ய தொழிலை விட்டுடக்கூடாது'ன்னு எங்களுக்கு ஒத்தாசையாக இருக்காங்க" என்றார்.

அதிரசம்
அதிரசம்

நாம் ஓர் அதிரசத்தை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தோம். ஆஹா, என்ன ருசி, என்ன ருசி!

தொடர்ந்து பேசிய, விஐயகுமாரின் மனைவி உமாமகேஸ்வரி, ``நாங்க தயாரிக்கிற அதிரசத்தை எங்க கடையில் மட்டுமே வைத்து விற்பனை செய்கிறோம். கரூர் மாவட்டத்தில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், வீடுகளில் நடக்கிற சுபகாரியங்களிலும் எங்க கடை அதிரசம்தான் நடுநாயகமாக இருக்கும். அதேபோல், கரூர் மாவட்டத்துல பல பகுதிகளில் நடக்கும் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட விசேஷங்களுக்கு எங்க அதிரசத்தை ஆர்டர் பண்ணி வாங்கிட்டுப் போறாங்க. சாதாரண நாள்கள்ல தினமும் 2000 பீஸ் போடுவோம். தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்கள்ல 3000 பீஸ் வரை தினமும் தயாரிப்போம். எல்லா வேலைகளையும் குடும்ப ஆள்களே செய்கிறோம்.

எங்க கடை அதிரசம் சுவையாக இருக்க காரணம், அதிரசம் தயாரிக்க காவிரி ஆத்துத் தண்ணிய பயன்படுத்துவதுதான். எங்க மாமனார் காலத்துல, கல்லுமடை அரிசி ஒன்னு பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. அதை உரல்ல இடிச்சு, அதுல அதிரசம் சுட்டிருக்காங்க. நாங்களும் அந்தப் பாரம்பர்யத்தை விட்டுடாம, திண்டுக்கல்லுல இருந்து கல்லுமடை, செங்கார் அரிசி ரகங்களை வாங்குறோம். கரூர்ல தேடிப்பார்த்து நல்ல பதத்துல உள்ள அச்சுவெல்லத்தை வாங்குறோம். அதிரசம் சுட செக்குல ஆட்டிய தரமான கடலை எண்ணெய், தரமான ஏலக்காயைத்தான் வாங்குறோம்.

அதிரசம்
அதிரசம்

அரிசியை வீட்டுலேயே இருக்கிற மெஷின்ல நைசா அரைச்சுக்குவோம். வெல்லத்தைப் பதமா காய்ச்சிப் பாகாக்குவோம். மாவைக் கிளறி, அதுல இருந்து கையில தட்டி எடுத்து, அதை எண்ணெயில் போட்டு, சரியான பதத்துல அதிரசமா எடுப்போம். அதை வாயில போட்டா, அப்படி ஒரு தித்திப்பா இருக்கும்.

அதிரசத்தை ஒருவாரம் வரை வைத்து சாப்பிடலாம். தரமான கடலை எண்ணெய் பயன்படுத்தினால் மட்டுமே ஒருவாரம் வரை அதிரசம் கெடாமல் இருக்கும். தரமற்ற எண்ணெயைப் பயன்படுத்தினால், இரண்டே நாளில் காந்துனாப்புல ஆயிரும். நாங்க எதற்காகவும் தரமற்ற பொருள்களில் அதிரசம் தயாரிப்பதில்லை.

வெள்ளியணையில் அன்றாடங்காய்ச்சிகள் அதிகம் என்பதால், அவர்கள் வயல்களில் வேலை செஞ்ச களைப்பைப் போக்க, எங்க கடைக்கு வந்து இரண்டு அதிரசம் சாப்பிட்டு டீயும் குடிப்பாங்க. அதன்பிறகு, மறுபடியும் வயலுக்குப் போய், புதுத்தெம்போடு மாங்குமாங்குன்னு வேலை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க'' என்று அக்கறையோடு சொன்னவர்,

``எங்க காலத்துக்குப் பிறகும் பல தலைமுறை கடந்தும் இந்தத் தொழில் நடக்கணும்கிறதுதான் எங்க ஆசை. அது, நடக்கும்னு நம்புறோம்" என்று சொல்ல, அதை ஆமோதித்தபடியே அதிரசங்களைச் சுட்டுப்போட்டார் விஜயகுமார்.