Published:Updated:

கொழுந்து உருண்டை | புளிக் கத்திரிக்காய் | பசலைக்கீரை கட்லெட் - ஹெல்தி வீக் எண்டு ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்

அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசிய உணவுகள் சிலவற்றின் ரெசிப்பீஸ் இங்கே... தினமும் வாய்ப்பில்லை என்றாலும் வாரத்துக்கொரு நாளாவது ஆரோக்கிய சமையலுக்கு மாறலாமே....

கொழுந்து உருண்டை | புளிக் கத்திரிக்காய் | பசலைக்கீரை கட்லெட் - ஹெல்தி வீக் எண்டு ரெசிப்பீஸ்!

அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசிய உணவுகள் சிலவற்றின் ரெசிப்பீஸ் இங்கே... தினமும் வாய்ப்பில்லை என்றாலும் வாரத்துக்கொரு நாளாவது ஆரோக்கிய சமையலுக்கு மாறலாமே....

Published:Updated:
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆரோக்கியமாக வாழ்வதென்பதே இப்போதைக்கு எல்லோரின் லட்சியமாகவும் மாறிவிட்ட நிலையில், நம் உணவுப்பழக்கத்தை சற்றே மாற்ற வேண்டியது அவசியமாகியிருக்கிறது. அதன்படி அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசிய உணவுகள் சிலவற்றின் ரெசிப்பீஸ் இங்கே... தினமும் வாய்ப்பில்லை என்றாலும் வாரத்துக்கொரு நாளாவது ஆரோக்கிய சமையலுக்கு மாறலாமே....

கொழுந்து உருண்டை

தேவையானவை:

எள் - கால் கிலோ
கருப்பட்டி - கால் கிலோ (நொறுக்கிக் கொள்ளவும்)
வேப்பங்கொழுந்து - 6 இலை
பொரிகடலை - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு

கொழுந்து உருண்டை
கொழுந்து உருண்டை

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் படபடவென வெடிக்கும்வரை வறுத்து எடுத்து ஆற வைத்துக்கொள்ளவும். ஆற வைத்த எள், கருப்பட்டி, பொரிகடலை, வறுத்த வேர்க்கடலை மற்றும் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். விரல்களில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு அரைத்தவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைத்தால், கொழுந்து உருண்டை ரெடி.

வேப்பங்கொழுந்தை தனியாக சாப்பிடக் கொடுத்தால், குழந்தைகள் தயங்குவர். அதையே கருப்பட்டி சேர்த்துக் கொடுப்பதால், குழந்தைகள் எளிதாக மறுக்காமல் உண்பார்கள். இயற்கையிலேயே கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்த நோய் நிவாரணி இந்த வேப்பங்கொழுந்து. எள் மற்றும் கருப்பட்டி சேர்த்துக் கொடுப்பதால், உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். 2 வாரத்துக்கு ஒருமுறை 5 உருண்டைகள் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொல்லைகள் நீங்கும்.

புளிக் கத்திரிக்காய்

தேவையானவை:
நாட்டுக் கத்திரிக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 15
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

புளிக் கத்திரிக்காய்
புளிக் கத்திரிக்காய்

செய்முறை:

கத்திரிக்காயை கம்பியில் சொருகி தீயில் நேரடியாக காட்டி எல்லா பக்கமும் வெந்து வருவது போல சுட்டு எடுக்கவும். காய்ந்த மிளகாயையும் தீயில் சுட்டு எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் ஆறியதும் அதன் தோலை நீக்கி நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சுட்ட மிளகாயை நொறுக்கி கத்திரிக்காயில் சேர்க்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து தேவைக்கேற்ப புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளவும். சுடு சாதத்துக்கு ஏற்ற புளிக்கத்திரிக்காய்க்கு, சுட்ட அப்பளத்தைத் தொட்டுக் கொள்ளலாம்.

ஸ்வீட்ஃகார்ன் முளைப்பயறு சாலட்

தேவையானவை:

ஸ்வீட்கார்ன் - 50 கிராம் (வேகவைக்காதது)
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 100 கிராம்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன்
பெங்களூர் தக்காளி - ஒன்றில் பாதி (பொடியாய் நறுக்கியது)
பெரிய வெங்காயம் - ஒன்றில் பாதி (பொடியாக நறுக்கியது)
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
புரொக்கோலி - 30 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

ஸ்வீட்ஃகார்ன் முளைப்பயறு சாலட்
ஸ்வீட்ஃகார்ன் முளைப்பயறு சாலட்

செய்முறை:

புரொக்கோலி மற்றும் ஸ்வீட் கார்னை தனியே வேகவைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய கேரட் மற்றும் வெள்ளரியைச் சேர்க்கவும். இவற்றுடன் வேக வைத்த புரொக்கோலி மற்றும் ஸ்வீட்கார்னையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் முளைக்கட்டிய பச்சைப்பயறைச் சேர்த்துப் புரட்டி இறக்கிப் பரிமாறவும்.

பசலைக்கீரை கட்லெட்

தேவையானவை:
பசலைக்கீரை - 5 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வேக வைத்து மசித்த
உருளைக்கிழங்கு - ஒன்று
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 3
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பிரெட் கிரம்ப்ஸ் - தேவையான அளவு

பசலைக்கீரை கட்லெட்
பசலைக்கீரை கட்லெட்

செய்முறை:

கீரையை தண்டு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் சிறிது தண்ணீர் தெளித்து பொடியாக நறுக்கிய கேரட், கீரை, பீன்ஸைச் சேர்த்து நன்கு வதக்கவும். இடை இடையே சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகுத்தூள் தூவி நன்கு புரட்டவும். சூடு ஆறியதும், இந்தக் கலவையை நன்கு பிசைந்து, கட்லெட் வடிவத்தில் உருண்டையாகவோ அல்லது நீளமாகவோ தட்டிக்கொள்ளவும். இதை பிரெட் கிரம்ப்ஸில் நன்கு புரட்டிக்கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கட்லெட்களை சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.