Published:Updated:

மதுரை - பருத்திப்பால் | கோயம்புத்தூர் காளான் மசாலா | ஸ்பெஷல் வடை - நம்ம ஊர் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வழக்கமான மெனுவுக்கு லீவு கொடுத்துவிட்டு, இங்கே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இந்த வார வீக் எண்டுக்கு விருந்தாக்குங்கள்... அடுத்த வாரத்துக்கான எனர்ஜி கியாரன்ட்டி...

சாம்பார், காரக்குழம்பு, வத்தக்குழம்பு, ரசம், கூட்டு, பொரியல்... இதைவிட்டா வேற என்னத்தை சமைக்கிறது எனத் தினம்தோறும் புலம்பிக்கொண்டே மெனுவை யோசிப்பவரா நீங்கள்? வழக்கமான மெனுவுக்கு லீவு கொடுத்துவிட்டு, இங்கே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இந்த வார வீக் எண்டுக்கு விருந்தாக்குங்கள்... அடுத்த வாரத்துக்கான எனர்ஜி கியாரன்ட்டி...

தேவகோட்டை மொச்சை மசால்

தேவையானவை:

உலர்ந்த மொச்சை - ஒரு கப்
பொட்டுக்கடலை - அரை கப் (பொடிக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒன்றரை கப்
தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பூண்டு - 5 பற்கள்
சோம்பு - அரை டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - அரை இன்ச் துண்டு
காய்ந்த மிளகாய் - 10
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தேவகோட்டை மொச்சை மசால்
தேவகோட்டை மொச்சை மசால்

செய்முறை:

பொட்டுக்கடலைப் பொடியுடன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். மொச்சையைக் கழுவி 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, மொச்சை ஊறவைத்த நீரை வடித்துவிடவும். குக்கரில் மொச்சையுடன், உப்பு, மொச்சை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு எடுக்கவும். வெறும் வாணலியில் சோம்பு, கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுத்து மிக்ஸியில் பொடித்தெடுக்கவும். அரை கப் வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு சேர்த்து கொரகொரப்பாகத் தண்ணீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, மீதமுள்ள வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கவும். அத்துடன் அரைத்த பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை, கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுடன் பொட்டுக்கடலை கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கவும்.

மொச்சை மசாலாவைப் பொட்டலமாகப் போட்டு மாலை நேரங்களில் தேவகோட்டையில் தெருவோரங்களில் விற்பது வழக்கம்.

மதுரை கிழங்குப் பொட்டலம்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கடலைமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்

மதுரை கிழங்குப் பொட்டலம்
மதுரை கிழங்குப் பொட்டலம்

செய்முறை:

கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிதளவு உப்பு கலந்த நீரில் வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும். பிறகு, கடலைமாவுக் கரைசல் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து அலங்கரிக்கவும்.

இந்தக் கிழங்கு மசாலாவை மாலை வேளையில் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயம்புத்தூர் காளான் மசாலா

தேவையானவை:

காளான் - 250 கிராம் (கழுவி, சிறிய துண்டுகளாக்கவும்)
மைதா மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கோயம்புத்தூர் காளான் மசாலா
கோயம்புத்தூர் காளான் மசாலா

செய்முறை:

ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசறவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.

ஸ்பெஷல் வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு - ஒரு கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பெருங்காயத்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்பெஷல் வடை
ஸ்பெஷல் வடை

செய்முறை:

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு, மிக்ஸியில் கொரகொரப்பாகத் தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய வடைகளாகத் தட்டிப் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்

மதுரை - பருத்திப்பால்

தேவையானவை:

பருத்தி விதை - ஒரு கப்
கருப்பட்டித்தூள் - அரை கப்
தேங்காய் - ஒரு மூடி (துருவி, அரைத்து பாலெடுக்கவும்)
பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்

பொடிக்க:

தோல் சீவிய சுக்கு - ஓர் அங்குல துண்டு
சித்தரத்தை - ஓர் அங்குல துண்டு
மிளகு, திப்பிலி - தலா அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்

மதுரை - பருத்திப்பால்
மதுரை - பருத்திப்பால்

செய்முறை:

பருத்தி விதையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் விதைகளை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு ஒரு சுற்று அரைக்கவும். பிறகு, அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து வடிகட்டவும். மீண்டும் சக்கையுடன் ஒரு கப் தண்ணீர்விட்டு அரைத்து பொடித்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

கருப்பட்டித் தூளுடன் ஒரு கப் தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து கரைத்து வடிகட்டவும்.

அரிசியைக் கழுவி, ஒரு மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்தெடுக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பருத்திப் பாலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கிளறிக்கொண்டே காய்ச்சவும். அதனுடன் அரிசி மாவுக் கரைசல் சேர்த்துக் கிளறவும். பிறகு, கருப்பட்டிக் கரைசல், பொடித்தவற்றைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறிக்கொண்டே நன்கு கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும். விரும்பினால் முந்திரி, திராட்சை சேர்க்கலாம்.

குறிப்பு:

பருத்திப்பாலை ஊற்றி காய்ச்ச ஆரம்பித்ததில் இருந்து இறக்கும் வரை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அடிபிடித்துக்கொள்ளும். நீரிழிவு உள்ளவர்கள் கருப்பட்டி, பனங்கற்கண்டுக்குப் பதிலாக உப்பு சேர்த்து பருகலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு