Published:Updated:

மாம்பழ ஃபலூடா | மாம்பழ குல்ஃபி | மாம்பழக் குழம்பு - மாம்பழ ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

விதம் விதமான வெரைட்டிகளில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கி, விதம் விதமான ரெசிப்பீஸ் செய்து சாப்பிட உங்களுக்காக ஸ்பெஷல் அயிட்டங்கள் இங்கே...

பழமாக, ஜூஸாக, ஐஸ்கிரீமாக... இன்னும் எப்படிச் சாப்பிட்டாலும் அலுக்காதது மாம்பழம். போனா வராது, பொழுதுபோனால் கிடைக்காது என்கிற மாதிரி இந்த சம்மர் சீஸனை தவறவிட்டால் இன்னும் ஒரு வருடத்துக்கு மாம்பழம் சாப்பிட வாய்ப்பு கிடைக்காது. விதம் விதமான வெரைட்டிகளில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கி, விதம் விதமான ரெசிப்பீஸ் செய்து சாப்பிட உங்களுக்காக ஸ்பெஷல் அயிட்டங்கள் இங்கே...

மாம்பழ புளிசேரி

தேவையானவை:

• மாங்காய்த் துண்டுகள் – ஒரு கப்
• பழுத்த மாம்பழம் – 5 (தோல், கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும்)
• பச்சை மிளகாய் – 8
• தேங்காய்த் துருவல் – முக்கால் கப்
• மோர் – ஒரு கப்
• மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
• மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
• கடுகு – ஒரு டீஸ்பூன்
• காய்ந்த மிளகாய் – 2
• எண்ணெய் – 2 டீஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு

மாம்பழ புளிசேரி
மாம்பழ புளிசேரி

செய்முறை:

தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், மாம்பழத் துண்டுகள், மோர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். மாங்காய் நன்கு வெந்த பிறகு மிளகுத்தூள், அரைத்த விழுது சேர்த்து, கொதிக்க ஆரம்பிக்கும் போதே இறக்கவும் (கொதிக்க வைக்கக் கூடாது). சிறிதளவு எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துச் சேர்க்கவும். சாதத்துடன் பரிமாறவும்.

மாம்பழ ஃபலூடா

தேவையானவை:

• பால் – ஒரு கப் (காய்ச்சாதது)
• சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
• கண்டெண்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
• மாம்பழக்கூழ் – 2 டேபிள்ஸ்பூன்
• மாம்பழத் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
• மாம்பழ ஐஸ்க்ரீம், வெனிலா ஐஸ்க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன்
• துளசி விதைகள் – ஒரு டீஸ்பூன்
• ஜெல்லித் துண்டுகள் – டேபிள்ஸ்பூன் (ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகளாக்கியது)
• ஃபலூடா சேமியா – ஒரு டேபிள்ஸ்பூன்
• பொடித்த நட்ஸ் வகைகள் – 2 டேபிள்ஸ்பூன்
• ரோஸ் சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன்

மாம்பழ ஃபலூடா
மாம்பழ ஃபலூடா

செய்முறை:

துளசி விதைகளை அரை கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஃபலூடா சேமியாவை வேகவத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, கரைந்த பின் இறக்கவும். பால் நன்கு ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய துளசி விதைகளைப் போடவும். இதன் மீது ஜெல்லித் துண்டுகள், மாம்பழத் துண்டுகள், கண்டென்ஸ்டு மில்க், பலூடா சேமியா, மாம்பழக்கூழ், குளிர்ந்த பால் என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இறுதியாக மேலே ஐஸ்க்ரீம் வைத்து, அதன் மீது ரோஸ் சிரப் ஊற்றி, நட்ஸ் வகைகள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

மாம்பழ குல்ஃபி

தேவையானவை:

• பால் – மூன்று கப் (காய்ச்சாதது)
• பால் பவுடர் – அரை கப்
• சர்க்கரை – அரை கப்

• மாம்பழக்கூழ் – ஒன்றேகால் கப்
• கண்டென்ஸ்டு மில்க் – கால் கப்
• பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகள் – முக்கால் கப்

மாம்பழ குல்ஃபி
மாம்பழ குல்ஃபி

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். பிறகு, பால் பவுடர், கண்டென்ஸ்டு மில்க், நட்ஸ் வகைகள் சேர்த்துக் கலந்து இறக்கவும். பால் நன்கு ஆறிய பிறகு மாம்பழக்கூழ் சேர்த்துக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகள் அல்லது சிறிய குல்ஃபி பானைகளில் நிரப்பி ஃப்ரீஸரில் வைத்து, செட் ஆன பிறகு எடுத்துப் பரிமாறவும்.

மாம்பழக் குழம்பு

தேவையானவை:

• பழுத்த மாம்பழம் (சிறியது) – 5 (தோல், கொட்டை நீக்கவும்)
• மாம்பழக்கூழ் – ஒரு கப்
• மாங்காய்த் துண்டுகள் – ஒரு கப்
• அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
• மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
• தனியாத்தூள் (மல்லித்தூள்) – 2 டீஸ்பூன்
• சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
• மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
• வெல்லம் – ஒரு டீஸ்பூன்
• கடுகு – ஒரு டீஸ்பூன்
• சீரகம் – ஒரு டீஸ்பூன்
• பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
• காய்ந்த மிளகாய் – ஒன்று
• பச்சை மிளகாய் – ஒன்று (கீறவும்)
• கறிவேப்பிலை – சிறிதளவு

• கொத்தமல்லித்தழை - சிறிதளவு
• எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு

மாம்பழக் குழம்பு
மாம்பழக் குழம்பு

செய்முறை:

அரிசி மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் மாங்காய்த் துண்டுகள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி வேகவிடவும். நன்கு வெந்த பிறகு மாம்பழக் கூழ், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெல்லம், உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் அரிசி மாவு கரைசல், தோல் நீக்கிய மாம்பழம் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

அடுத்த கட்டுரைக்கு