Published:Updated:

மசாலா வடகறி வீட் பீட்சா | சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா - பீட்சா ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

உங்கள் வீட்டிலேயே சுடச்சுட, வெரைட்டியாக பீட்சா செய்து இந்த வீக் எண்டை வேற லெவலில் என்ஜாய் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பீட்சா இல்லாத சண்டே செம போர் என நினைக்கிற நபர்கள் உங்கள் வீட்டிலும் நிச்சயம் இருப்பார்கள். `கடையில ஆர்டர் கொடுத்து, அது டெலிவரி ஆகி சாப்பிடறதுக்குள்ள சூடு ஆறி, பீட்சா சாப்பிடற ஆசையே போயிடுது' என்ற புலம்பலுடன் வாரம் தவறாமல் அதை வாங்கிச் சாப்பிடுகிறவர்கள்தாம் அதிகம். பீட்சா செய்வதொன்றும் அவ்வளவு பெரிய டாஸ்க்கெல்லாம் இல்லை. உங்கள் வீட்டிலேயே சுடச்சுட, வெரைட்டியாக பீட்சா செய்து இந்த வீக் எண்டை வேற லெவலில் என்ஜாய் செய்யுங்கள்.

ஹரியாலி வீட் பீட்சா

தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய:

கோதுமை மாவு - ஒன்றரை கப்
ஈஸ்ட், சர்க்கரை, உப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - அரை கப்
ஆய்ந்த கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

டாப்பிங் செய்ய:

பேசில் இலைகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - ஒரு கப்
பைன் நட்ஸ் - கால் கப்
மொசரல்லா சீஸ் - கால் கப்
ஆலிவ் எண்ணெய் - கால் கப்பிலிருந்து அரை கப் வரை
ராக்கெட் இலைகள் - சிறிதளவு
ஆலிவ் - 10 (நறுக்கவும்)
மொசரல்லா சீஸ் துருவல் – ஒன்றரை கப்

அலங்கரிக்க:

பேசில் இலைகள், ராக்கெட் இலைகள், பார்ஸ்லே இலைகள், பீட்சா சீஸனிங் - சிறிதளவு

ஹரியாலி வீட் பீட்சா
ஹரியாலி வீட் பீட்சா

செய்முறை:

கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு, மூடி இரண்டு மடங்காகப் பொங்கி வரும்வரை அப்படியே வைக்கவும். பேசில் இலைகளுடன் பார்ஸ்லே இலைகள், பைன் நட்ஸ், கால் கப் மொசரல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதுதான் பெஸ்டோ. மாவை நன்கு அழுத்திப் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை 6 இன்ச் அளவு விட்டத்துக்குச் சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே முள்கரண்டியால் ஆங்காங்கே குத்திவிட்டு பெஸ்டோவைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவலைத் தாராளமாக தூவி, நறுக்கிய ஆலிவ், ராக்கெட் இலைகள் தூவவும். அதன்மீது சிறிதளவு சீஸ் துருவலைத் தூவி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 - 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்த பிறகு அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி, சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும்.

பீட்ரூட் ஹம்மஸ் நோ ஈஸ்ட் பான் பீட்சா

தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய:

மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பீட்சா சீஸனிங் - ஒரு டேபிள்ஸ்பூன்
பால் - முக்கால் கப்
எண்ணெய் - கால் கப்
உப்பு - ஒரு டீஸ்பூன்

ஹம்மஸ் செய்ய:

கொண்டைக்கடலை - முக்கால் கப்
பீட்ரூட் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
எள் - 2 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 4/5 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்

டாப்பிங் செய்ய:

பேசில் இலைகள் - சிறிதளவு
ஆலிவ் - 10 (நறுக்கவும்)
மொசரல்லா சீஸ் துருவல் - 2 கப்
சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங் - சிறிதளவு

பீட்ரூட் ஹம்மஸ் நோ ஈஸ்ட் பான் பீட்சா
பீட்ரூட் ஹம்மஸ் நோ ஈஸ்ட் பான் பீட்சா

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் கொண்டைக்கடலையுடன் பீட்ரூட் சேர்த்து வேகவைத்து, 6 - 7 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் திறந்து நீரை வடியவிட்டு, சிறிதளவு கடலையை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்து எடுத்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை கலவை, எலுமிச்சைப்பழச் சாறு, உப்பு சேர்த்து, நடுநடுவே எண்ணெய்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும் (தண்ணீருக்குப் பதிலாக, கடலையை வேகவைத்த நீரை ஊற்றியும் அரைக்கலாம்). மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு, பீட்சா சீஸனிங், பால், எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து மூடிவைக்கவும். அரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து மீண்டும் பிசையவும். பிறகு, மாவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகம் மாவை எடுத்து, சப்பாத்தி போல திரட்டவும். பானை (Pan) சூடாக்கி, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

இதன்மீது கடலைக் கலவையைத் தடவி, மேலே சிறிதளவு சீஸ் துருவலைத் தூவவும். அத்துடன் எடுத்த வைத்த கடலை, ஆலிவ், பேசில் இலைகளைப் பரப்பவும். இறுதியாக மீதமுள்ள சீஸ் துருவலைத் தாராளமாகத் தூவி அதே பேனில் வைத்து மூடி, மூன்று நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

மேலே சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங்கால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா

தேவையானவை:

பீட்சா பேஸ் செய்ய:

மைதா மாவு - 2 கப்
முட்டை - ஒன்று
வெதுவெதுப்பான பால் - கால் கப்
சர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்

டாப்பிங் செய்ய:

வெண்ணெய், மைதா மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்
இத்தாலியன் சீஸனிங் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா சீஸ் - கால் கப்
பேசில் இலைகள் - சிறிதளவு
பொடியாக நறுக்கிய
கலர் குடமிளகாய் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு

முட்டைப் பணியாரம் செய்ய:

முட்டை - 3
பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - சிறிதளவு
சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா
சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா

செய்முறை:

வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உடைத்த முட்டை, ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு, மீண்டும் நன்கு பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். உடைத்த முட்டையுடன் பார்ஸ்லே இலைகள், உப்பு, சீஸ் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து முட்டைக் கலவையைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் வெண்ணெயை லேசாக சூடாக்கி மைதா மாவு சேர்த்து வறுக்கவும். (மைதா மாவு நிறம் மாறக் கூடாது), அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம், பேசில் இலைகள், உப்பு, இத்தாலியன் சீஸனிங், மொசரல்லா சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதுவே வொயிட் சாஸ். ஒரு பங்கு மாவைக் கனமான சப்பாத்தியாகத் தேய்த்து அதன் மீது வொயிட் சாஸ் தடவவும். பிறகு, அதன் மேலே கலர் குடமிளகாய், பேசில் இலைகள், குழிப்பணியாரம், சீஸ் துருவலைப் பரப்பி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

இதேபோல மீதமுள்ள இன்னொரு பாகம் மாவிலும் தயாரிக்கவும்.

மசாலா வடகறி வீட் பீட்சா

பீட்சா பேஸ் செய்ய:

கோதுமை மாவு - 2 கப்
ஈஸ்ட், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - ஒரு கப்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்

மசாலா வடகறி செய்ய:

வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
மசால் வடை - 7 (உதிர்க்கவும்)
பாவ் பாஜி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மொசரல்லா சீஸ் துருவல் - சிறிதளவு (அலங்கரிக்க)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மசாலா வடகறி வீட் பீட்சா
மசாலா வடகறி வீட் பீட்சா

செய்முறை:

வெதுவெதுப்பான நீருடன் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு, கோதுமை மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எண்ணெய்விட்டு மாவாகப் பிசைந்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு, மீண்டும் பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பங்கு மாவை ஆறு இன்ச் விட்டம், அரை முதல் ஒரு இன்ச் கனம் கொண்ட சப்பாத்தியாகத் தேய்த்து 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். இதுவே பீட்சா பேஸ்.

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் பாவ் பாஜி மசாலாத்தூள், உதிர்த்த மசால் வடை, தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். வடகறி தயார். பீட்சா பேஸ் மீது வடகறியைப் பரப்பவும். அதன் மேலே சீஸ் துருவல் தூவி, மறுபடியும் 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

இதே போல மீதமுள்ள இன்னொரு பங்கு மாவிலும் தயாரிக்கவும்.

மில்லட் பான்கேக் மஷ்ரூம் பீட்சா

தேவையானவை:

டார்ட் பேஸ் செய்ய:

சிறுதானிய கலவை மாவு - ஒரு கப்
காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஆனியன் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பீட்சா செய்ய:

பீட்சா சாஸ் - 4 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மஷ்ரூம் - ஒரு கப்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
ஆலிவ் - 6 (வட்டமாக நறுக்கவும்)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய பீட்சா சீஸ் - ஒரு கப்
பேசில் இலைகள் - சிறிதளவு

மில்லட் பான்கேக் மஷ்ரூம் பீட்சா
மில்லட் பான்கேக் மஷ்ரூம் பீட்சா

செய்முறை:

சிறுதானிய மாவுடன் ஆனியன் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். உடைத்த முட்டையுடன் பால், எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மஷ்ரூம் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துக் கரைத்த சிறுதானிய மாவை எடுத்துச் சிறிய கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதுதான் பான் கேக். மாவு முழுவதையும் இதேபோல் செய்துகொள்ளவும். ஒரு பான் கேக் மீது சிறிதளவு பீட்சா சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றைத் தடவவும். அதன்மீது வதக்கிய மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, ஆலிவ், பேசில் இலைகள் ஆகியவற்றைப் பரப்பவும். இதன் மேலே சீஸ் தூவி அலங்கரிக்கவும். தவாவைச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து, பான் கேக்கை வைத்து சீஸ் உருகி வந்த பிறகு, எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மற்ற பான் கேக்குகளையும் இதேபோல் செய்துகொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு