தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வீட்டிலேயே செய்யலாம் மெக்ஸிகன் உணவுகளை... #HowToMakeAtHome

மெக்ஸிகன் உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
மெக்ஸிகன் உணவு

- ஜானகி அஸாரியா

 ஜானகி அஸாரியா
ஜானகி அஸாரியா

இதையெல்லாம் வீட்டில் செய்ய முடியுமா என பிரமிக்கவைப்பதில் மெக்ஸிகன் உணவுகளும் அடக்கம். `அப்படியெல்லாம் இல்லை... மெக்ஸிகன் உணவுகளைச் சமைப்பது அவ்வளவு ஈஸி’ என்கிறார் சமையற்கலை நிபுணர் ஜானகி அஸாரியா. பிரபலமான மெக்ஸிகன் உணவுகளின் செய்முறைகளை இந்த இதழில் ஆங்காங்கே வழங்கி யிருக்கிறார்.

வீட்டிலேயே செய்யலாம் மெக்ஸிகன் உணவுகளை... #HowToMakeAtHome

மெக்ஸிகன் சலூபா (MEXICAN CHALUPA)

தேவையானவை:

மைதா - ஒன்றரை கப்

பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்

உருகிய வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

வெதுவெதுப்பான பால் - முக்கால் கப்

உப்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

ஸ்டஃப்பிங்  செய்ய:

வேகவைத்து லேசாக

மசித்த ராஜ்மா - அரை கப்

மெல்லியதாக வெட்டிய

வெங்காயம், குடமிளகாய்,

தக்காளி - தலா ஒன்று

மெல்லியதாக வெட்டிய

லெட்டூஸ் இலைகள் - அரை கப்

துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்

வடிகட்டிய கெட்டித்தயிர் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: ஓரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டு அதனுடன் உப்பு, பேக்கிங் பவுடர், உருகிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசையவும். இந்த மாவை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அதை ஏழு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒவ்வோர் உருண்டையையும் எடுத்து ஐந்து இன்ச் வட்டமான கெட்டியான பூரிபோல் திரட்டிக்கொள்ளவும். ஒரு முள்கரண்டியை எடுத்து பூரியின் மேல் முழுவதுமாகக் குத்த வும். இப்படிச் செய்வதால் பூரி பொரிக்கும் போது உப்பாது.

கடாயில் எண்ணெய் வைத்து பூரிகளை மிதமான சூட்டில் பொரிக்கவும். பொரிக்கும் போது பூரியை இரண்டு கரண்டிகள் வைத்து பாதியாக மடக்கிவிட்டுப் பொரிக்க வும். பொரித்தெடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரின் மேல்வைத்து எண்ணெயை வடிய விடவும். லேசாக மசித்த ராஜ்மாவுடன் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ் கலந்து தனியாக வைக்கவும். பொரித்த பூரிகளை ஒவ்வொன் றாக எடுத்து அதன் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் ராஜ்மா கலவையை வைக்கவும். நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், லெட்டூஸ் இலைகளை அதன் மேல் வைக்கவும். ஒரு டீஸ்பூன் வடிகட்டிய தயிரை அதன்மேல்விட்டு, துருவிய சீஸைத் தூவிப் பரிமாறவும்.

வீட்டிலேயே செய்யலாம் மெக்ஸிகன் உணவுகளை... #HowToMakeAtHome

கனாபே சாட் (CANAPE CHAAT)

தேவையானவை:

ரெடி மேடு கனாபே

(பேக் செய்யப்பட்ட பிஸ்கட்

போன்று ரெடிமேடாக

கடைகளில் கிடைக்கும்) - 6

வேகவைத்து உரித்து

துண்டுகளாக்கிய

உருளைக்கிழங்கு - ஒன்று

வேகவைத்த வெள்ளை

கொண்டைக்கடலை - அரை கப்

மெல்லிய ஓமப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய

மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

கிரீன் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்

இனிப்புச் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்

சாட் மசாலா - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மாதுளை முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: அவனை 180 டிகிரி சென்டிகிரேடில் பிரீஹீட் செய்துகொள்ளவும். கனாபேகளை ஒரு பேக்கிங் டிரேயில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு பேக் செய்து எடுத்து நன்றாக ஆறவிடவும். ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, உப்பு, மிளகாய்த்தூள், கிரீன் சட்னி, இனிப்புச் சட்னி, சாட் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை ஒவ்வொரு கனாபேயிலும் ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் வைக்கவும். அதன் மேல் மாதுளை, மல்லித்தழை, ஓமப்பொடி தூவிப் பரிமாறவும்.

வீட்டிலேயே செய்யலாம் மெக்ஸிகன் உணவுகளை... #HowToMakeAtHome

மெக்ஸிகன் டோஸ்ட்டாடா (MEXICAN TOSTADA)

தேவையானவை:

காக்ரா - 6

வேகவைத்த ராஜ்மா - ஒரு கப்

பொடியாக நறுக்கிய

வெங்காயம் - இரண்டு

பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைப்பழச்சாறு - 4 டீஸ்பூன்

அவகாடோ

(தோல் உரித்தது) - ஒன்று

செர்ரி தக்காளி

(பாதியாக நறுக்கியது) - அரை கப்

துருவிய சீஸ் அல்லது பனீர் - அரை கப்

பொடியாக நறுக்கிய

மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய லெட்டூஸ்

இலைகள் - ஒரு கப்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: ஒரு கிண்ணத்தில் வினிகர், 2 டீஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தைப் பாதி அளவு போட்டு நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும். வேக வைத்த ராஜ்மாவை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அவகாடோவை நன்றாக மசித்து அதனுடன் உப்பு, 2 டீஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயைச் சூடாக்கி, அதில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பூண்டு, பொடியாக நறுக்கிய மீதி வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு, அதனுடன் அரைத்த ராஜ்மா, உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.

ஒரு காக்ராவை எடுத்து அதில் ராஜ்மா கலவையை முழுவதுமாகப் பரப்பவும். அடுத்து மசித்து வைத்துள்ள அவகாடோவை அதன் மேல் பரப்பி அதற்கு மேல் வினிகரில் ஊறவைத்துள்ள வெங்காயம், செர்ரி தக்காளி, நறுக்கிய லெட்டூஸ், மல்லித்தழை ஆகியவற்றைப் பரப்பவும். துருவிய சீஸ் அல்லது பனீரை அதன் மேல் தூவி உடனே பரிமாறவும்.

வீட்டிலேயே செய்யலாம் மெக்ஸிகன் உணவுகளை... #HowToMakeAtHome

மக்கானா பேல் (Makhana Bhel)

தேவையானவை:

மக்கானா (தாமரை விதைகள்) - ஒரு கப்

பொடியாக நறுக்கிய

வெங்காயம் - ஒன்று

நறுக்கிய தக்காளி - 2

பொடியாக நறுக்கிய

மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

கிரீன் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்

இனிப்புச் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்

மெல்லிய ஓமப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய

மாங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: ஒரு கடாயைச் சூடாக்கி அதில் தாமரை விதைகளை லேசான தீயில் மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்த தாமரை விதைகள், வேர்க் கடலை, வெங்காயம், தக்காளி, மாங்காய்த் துண்டுகள், கிரீன் சட்னி, இனிப்புச் சட்னி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதன்மீது மல்லித்தழை, ஓமப்பொடி தூவிப் பரிமாறவும்.

வீட்டிலேயே செய்யலாம் மெக்ஸிகன் உணவுகளை... #HowToMakeAtHome

சீஸி நாச்சோஸ் (CHEESY NACHOS)

தேவையானவை:

நாச்சோஸ் (நொறுக்குத்தீனி பிரியர்களுக்குப் பரிச்சய மானது. சிப்ஸ் போன்று இருக்கும். எல்லா பெரிய கடைகளிலும் கிடைக்கும்) - ஒரு  பாக்கெட்

பொடியாக நறுக்கிய

வெங்காயம் - ஒன்று

பொடியாக நறுக்கிய

சிவப்பு / பச்சைக் குடமிளகாய் - தலா பாதியளவு

வேகவைத்த அமெரிக்கன்

சோளம் - அரை கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

இத்தாலியன் ஹெர்ப்ஸ் - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

துருவிய பீட்சா சீஸ் - ஒரு கப்

செய்முறை: ஓரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, சோளம், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, இத்தாலியன் ஹெர்ப்ஸ், மிளகுத்தூள், அரை கப் சீஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். மைக்ரோ வேவ் அல்லது `அவனி’ல் வைக்கக்கூடிய ஒரு தட்டை எடுத்துக்கொள்ளவும். அதில் நாச்சோஸைப் பரப்பவும். கலந்துவைத்துள்ள காய்கறி, சீஸ் கலவையை அதன் மேல் முழுவதுமாகப் பரப்பவும். மீதமுள்ள சீஸை அதன் மேல் தூவவும். 180 டிகிரி சென்டிகிரேடில் பிரீஹீட் செய்த அவனில் வைத்து சீஸ் உருகும்வரை பேக் செய்து பரிமாறவும் அல்லது மைக்ரோ வேவ் அவனில் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும்.