ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு. சிறுதானியங்களின் மகத்துவம் பற்றிக் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு சிறுதானிய உணவுகள் விரைவான பலன்களைத் தரும் என்பதே மருத்துவர்கள் மற்றும் ஊட்டசத்து ஆலோசகர்களின் கருத்தும். வாரம் முழுவதும் முடியாவிட்டாலும், வாரக் கடைசியிலாவது சிறுதானிய சமையலுக்கு மாறலாமே... இந்த வார வீக் எண்டில் சிறுதானிய விருந்து செய்து சிறப்பாக்குங்கள்...
தேவையானவை:
தினை அரிசி - அரை கப்
முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
காய்ந்த மிளகாய் - நான்கு
இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
துருவிய கேரட் - அரை கப்

செய்முறை:
தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை வார்க்கவும். தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும். சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
தேவையானவை:
கேழ்வரகு சேமியா - ஒரு கப்
கொள்ளு மாவு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்நிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை ரெடி.
தேவையானவை:
வரகரிசி - கால் கப்
கம்பு மாவு - 2 கப்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வரகரிசியைத் தண்ணீரில் வேகவிடவும். முக்கால்வாசி வெந்து வரும்போது அதில் உப்பு மற்றும் கம்பு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும். மாவு கட்டியாக ஆகாதவாறு கிளறி, தேவைப்பட்டால் சுடுநீர் சிறிது சேர்த்து, கரண்டியால் கிளறி பின் கைகளில் சுடச்சுட உருட்டினால், களி ரெடி. இதற்குக் காரக் குழம்பு, கீரைக் குழம்பு தொட்டுக்கொள்ள ஏற்றது. களியைப் பொறுத்தவரை சுடச்சுடச் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், வெங்காயப் பச்சடி மற்றும் மொச்சைக்குழம்புடன் சாப்பிட மிகவும் ஏற்றது. உடல் பலமடையும். நோய்கள் அண்டாது.
தேவையானவை:
கம்பு மாவு - அரை கப்
சோள மாவு - அரை கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
தயிர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் கம்பு மாவு, சோள மாவு, சமையல் சோடா, தயிர், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து உருட்டி இரண்டு அளவாகப் பிரித்து இட்லித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்பு இதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். சிறு சிறு வட்டமாக நறுக்கி, தோசைக்கல்லில் எண்ணெய்விட்டுச் சிவக்க வைத்து எடுத்துக்கொள்ளவும். அல்லது வட்டமாக நறுக்கிய கம்பு கட்லெட்டை வாணலியில் எண்ணெய்விட்டுப் பொரித்தும் எடுத்துக்கொண்டு அப்பளக்கூட்டுடன் சாப்பிடலாம்.

அப்பளக்கூட்டு செய்ய தேவையானவை:
கடலைப்பருப்பு - அரை கப்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - ஒரு கப்
சுட்ட அப்பளம் - 8
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
குக்கரில் கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கவும். சோம்புத்தூள் சேர்த்து, தேவைக்கேற்ற அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவந்ததும் உப்பு சேர்க்கவும். கொத்துமல்லித்தழை தூவி, அதில் அப்பளத்தை உடைத்துப்போட்டுக் கிளறி, கம்பு வறுவலின் மீது வைத்துப் பரிமாறவும். கம்பு ஃப்ரை செய்யாமலும் அப்பளக்கூட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.