கட்டுரைகள்
Published:Updated:

நாக்கை சப்புக்கொட்ட வைக்கும் நல்லாம்பட்டி சிக்கன்..!

நல்லாம்பட்டி சிக்கன்
பிரீமியம் ஸ்டோரி
News
நல்லாம்பட்டி சிக்கன்

எங்கள் கடையில் முழுச்சாப்பாடுடன் நல்லாம்பட்டி சிக்கன் ரூ.200க்குத் தருகிறோம். நல்லாம்பட்டி சிக்கன் உட்பட அனைத்து சிக்கன் அயிட்டங்களைத் தயாரிக்கவும் நாங்கள் நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம்

அசைவ உணவுகளில் சிக்கன் வெரைட்டியில் எந்த ரக உணவாக இருந்தாலும் விரட்டி, விரட்டி உண்டு மகிழும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. பள்ளிப்பாளையம் சிக்கன், சிக்கன் சுக்கா, சிக்கன் ஃப்ரை, சில்லி சிக்கன், சிக்கன் ரைஸ் என அத்தனை சிக்கன் டிஷ்களுக்கும் ரசிகர் பட்டாளம் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல... நல்லெண்ணெய் ஊற்றி, வேக வைத்த மிளகாயை அரைத்து, அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டுத் தயாரிக்கப்படும் `நல்லாம்பட்டி சிக்கன்', ஈரோடு மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் ரொம்ப ஃபேமஸ்.

நல்லாம்பட்டி சிக்கன்
நல்லாம்பட்டி சிக்கன்

அதென்ன நல்லாம்பட்டி சிக்கன்?

ஈரோடு, நசியனூரைத் தாண்டி காஞ்சிகோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது நல்லாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து உருவான அக்மார்க் சிக்கன் வெரைட்டிதான் நல்லாம்பட்டி சிக்கன். ஆரம்பத்தில், நாட்டுக்கோழிக் கறியில் தயார் செய்து ருசித்த கிராம மக்கள், பிற்பகுதியில் இதனை ட்ரெண்டாக மாற்றியதன் விளைவு, இதன் சுவையால் ஈர்க்கப்பட்ட ஈரோடு மக்கள், நல்லாம்பட்டி சிக்கனை வீடுகளில் பாரம்பரிய முறைப்படி தயார் செய்து ருசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நல்லாம்பட்டி சிக்கன் தயாரிப்புக்கு பிரபலமான ஈரோடு, பிரப் ரோடு, தெப்பக்குளம் வீதியில் உள்ள `அம்மா ஊண்சோறு அன் கறிசோறு' உணவகத்தின் நிறுவனர் ராஜ்குமார் பாலசுந்தரத்திடம் பேசினோம். அவர், ‘‘சிக்கன் துண்டுகளுடன், வேகவைத்து அரைத்த வரமிளகாய் பேஸ்ட்டுடன், தக்காளியும் சேர்த்து வதக்கும் போது வெளியேறும் மணம் அலாதியாக இருக்கும்.

நல்லாம்பட்டி சிக்கனை நீங்கள் தனியாகவும் சாப்பிடலாம். புரோட்டா, ரொட்டி, நாண், இட்லி போன்ற டிபன் அயிட்டங்களுக்கும் நல்லாம்பட்டி சிக்கன் செமையாக இருக்கும். சாப்பாட்டுடன் பிசைந்து சாப்பிடும்போது டேஸ்ட் அள்ளும். இப்படி எல்லா வகையிலும் காம்பினேஷனாக இருக்கும் நல்லாம்பட்டி சிக்கனைத் தயாரிப்பது பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்...

நல்லாம்பட்டி சிக்கன்
நல்லாம்பட்டி சிக்கன்

அளவாக வெட்டிய 1 கிலோ நாட்டுக்கோழிக்கறி, வரமிளகாய் பேஸ்ட் (20 முதல் 25 வரமிளகாயை, அதன் பச்சை வாசத்தைத் தவிர்ப்பதற்காக, ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஓரளவு வெந்ததும், அவற்றை மிக்ஸியிலோ அம்மியிலோ ஓரளவு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்), இதுதவிர 5 வரமிளகாயை எடுத்து அதன் விதைகளை நீக்கித் தனியே கிள்ளி வைத்துக்கொள்ளவும். அரைக் கிலோ சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும். பெரிய சைஸ் தக்காளி-2, நல்லெண்ணெய் - 200 மி.லி, தேவையான உப்பு.

இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் விதைகள் நீக்கிய 5 வரமிளகாயையும், வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தையும் போட்டு வதக்குங்கள். லேசான பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். பின்னர், மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். மிளகாய் நெடி வரும் வரை தொடர்ந்து வதக்கிவிட்டு, தக்காளி, உப்பு போட்டு மீண்டும் வதக்க வேண்டும். தக்காளியும் வெங்காயமும் நன்கு வதங்கிய பின் சிக்கன் துண்டுகளைப் போட்டு தண்ணீர் விடாமல் வதக்கவும்.

சிக்கன் 60 சதவிகிதம் வெந்ததும், கால் லிட்டர் தண்ணீர் ஊற்றலாம். ஏற்கெனவே வரமிளகாயை வேக வைத்த தண்ணீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்றிய பின் மிதமான சூட்டில் வேக வைக்கலாம். அடி பிடிக்காமல் இருக்க, கிளறி விட்டுகொண்டே இருக்க வேண்டும். சிக்கன் நன்றாக வெந்ததும் கமகமவென வெளியேறும் மணம் சுற்றியிருப்போரைச் சுண்டி இழுக்கும். மல்லித்தழைகளை நறுக்கி மேலே தூவி இறக்கிவிட வேண்டியதுதான்!

ஒரு சிலர், வரமிளகாயின் எண்ணிக்கையைக் குறைத்து, 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் மிளகு, சிறிதளவு சோம்பு, 2 துண்டு பட்டை, 5 கிராம்பு, அரை ஸ்பூன் மிளகு ஆகியவற்றைப் பொடி செய்து வெங்காயம், தக்காளியுடன் போட்டு வதக்கியும் நல்லாம்பட்டி சிக்கனைத் தயாரிக்கின்றனர். ஒரு சிலர், காரத்தைக் குறைப்பதற்காக தேங்காய்ப்பாலை அரைத்து ஊற்றியும் இதன் டேஸ்ட்டை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.

நல்லாம்பட்டி சிக்கன்
நல்லாம்பட்டி சிக்கன்

எங்கள் கடையில் முழுச்சாப்பாடுடன் நல்லாம்பட்டி சிக்கன் ரூ.200க்குத் தருகிறோம். நல்லாம்பட்டி சிக்கன் உட்பட அனைத்து சிக்கன் அயிட்டங்களைத் தயாரிக்கவும் நாங்கள் நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம். நல்லாம்பட்டி சிக்கன் சுவைக்குப் பழகியவர்கள் மீண்டும், மீண்டும் அதையே கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். அதுதான் இந்த டிஷ்ஷின் பெருமை.

அண்மையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக வெளியூர்களிலிருந்து வந்த பல்வேறு கட்சியினருக்கும் நல்லாம்பட்டி சிக்கனைப் பரிமாறினோம். ‘இந்த டிஷ் வித்தியாசமா, நல்ல சுவையுடன் இருக்கே' எனக்கூறி மீண்டும் மீண்டும் வந்து கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். ‘எங்கள் ஊரில் இந்த டிஷ் இல்லை’ என்று சொல்லி, தங்கள் வீட்டில் செய்யப்போவதாக இதன் ரெசிபியை நிறைய பேர் கேட்டு வாங்கிப்போனார்கள்'' என்றார் ராஜ்குமார் பெருமிதத்துடன்!