கட்டுரைகள்
Published:Updated:

அசல் ஒண்ணு... லோக்கல் ஒண்ணு... ‘ஆம்... லெட்’ஸ் என்ஜாய்!

ஆம்லெட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆம்லெட்

பிரெஞ்சு ஆம்லெட் புதுச்சேரியில் இரண்டு விதமாக் கிடைக்குது. ஒண்ணு, பிரான்ஸ் நாட்டில் செய்யப்படுகிற ‘அசல் பிரெஞ்சு ஆம்லெட்.

‘கீஷ், குரோசோன், ரட்டாத்துய், க்ரேப், ரில்லத், சீஸ் ஃபோண்டுய்..!’

ஏதோ பிரெஞ்சு மொழில திட்றதா நெனச்சி டென்ஷன் ஆகவேணாம்... இதெல்லாமே சாப்பிடுற அயிட்டங்களோட பேருதான்! புதுச்சேரிக்குப் போகும் அயல்நாட்டவர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர்வாசிகளுக்கும் விருப்பமான டிஷ்ஷாக இருக்கு இந்த பிரெஞ்சு உணவு அயிட்டங்கள்.

பிரேம்
பிரேம்

‘புதுச்சேரி 300 வருஷங்களா பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்துச்சு...

1954-ல் விடுதலை ஆச்சு... இருந்தாலும் இந்த 60 வருஷங்களா பிரெஞ்சு மொழி, கலாசாரம், உணவு, உடைன்னு பிரெஞ்சுத் தாக்கம் குறையாம இருக்கு... புதுச்சேரி, காரைக்கால் பக்கம் இருக்கிற பெரும்பாலானவர்கள் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்களா இருப்பதும் ஒரு காரணம்’ங்கற தகவல்களையெல்லாம் ஒரு பக்கம் காதுல போட்டு வைங்க.. அந்தப் பக்கமாப் போகும்போது இந்த டிஷ்களை ஒரு கை பார்க்கலாம்.

‘பேரே வாயில நுழையல'ன்னு யோசிக்காதீங்க, டேஸ்ட்டியா டிஷ் நுழைஞ்சா போதும் நமக்கு... ஆனா, கொஞ்சம் கவனிச்சீங்கன்னா, நம்ம ஊரு பக்கமும் சிலது வந்து நாம அதோட பழகியிருக்கோம்... ‘பிரெஞ்சு ஃப்ரைஸ்’, ‘பிரெஞ்சு ஆம்லெட்’, ‘பீஃப் ஸ்டீக்’ இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கோம்தானே!

ஆனா, தமிழர்கள் கைமணத்துடன் சமைக்கும் பிரெஞ்சு உணவுகளின் சுவையை, புதுச்சேரியைத் தவிர வேறு எங்கும் ருசிக்க முடியாது. புதுச்சேரியில் இருக்கும் சிறிய, பெரிய பிரெஞ்சு உணவகங்களிலும், நட்சத்திர உணவகங்களிலும் இந்த பிரெஞ்சு உணவுகள் கிடைக்குதுன்னாலும், சாலையோர கையேந்தி பவன்களில் தொடங்கி எல்லாச் சின்ன, பெரிய ஓட்டல்களிலும் கிடைக்கிற ஒரு பிரெஞ்சு அயிட்டம்தான் நம்ம ஆம்லெட்... ‘பிரெஞ்சு ஆம்லெட்!’

பிரெஞ்சு ஆம்லெட் புதுச்சேரியில் இரண்டு விதமாக் கிடைக்குது. ஒண்ணு, பிரான்ஸ் நாட்டில் செய்யப்படுகிற ‘அசல் பிரெஞ்சு ஆம்லெட்.' இதில் காரம் குறைவாகவும், சீஸ் சேர்க்கப்பட்டும் இருக்கும். இன்னொண்ணு ‘லோக்கல் பிரெஞ்சு ஆம்லெட்.’ உள்ளூர் கைமணத்துடன் கொஞ்சம் காரம் தூக்கலாகச் சமைக்கப்படுவது.

எது நல்லா இருக்கும்? வாங்க, ரெண்டையும் செஞ்சு சுவைச்சுப் பார்த்துடுவோம்...

எப்படிச் செய்யறது? அதுக்குத்தான் புதுச்சேரில இருக்கிற ‘அதிதி டி.ஜி.ஐ. கிராண்ட்' ஓட்டலோட செஃப் பிரேம் என்கிறவரை நைசா ஓரங்கட்டிக் கூட்டிட்டு வந்திருக்கோம்... “ஆரம்பிக்கலாமா?” ஓவர் டு செஃப் பிரேம்...

அசல் ஒண்ணு... லோக்கல் ஒண்ணு... ‘ஆம்... லெட்’ஸ் என்ஜாய்!

முதல்ல, அசல் பிரெஞ்சு ஆம்லெட் செய்யறது எப்படின்னு பார்ப்போம்...

இரண்டு முட்டை, ஒண்ணும் பாதியுமா நொறுக்கின மிளகுத்தூள், பார்சிலி இலை (எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்)... அது கிடைக்கலைன்னா கொத்தமல்லித் தழை, தூள் உப்பு, சீவப்பட்ட பாலாடைக் கட்டி ஆகிய பொருள்களை ரெடியா வெச்சுக்குங்க.

இரண்டு முட்டைகளையும் ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, தேக்கரண்டியால் கலக்க வேண்டும். எவ்வளவு நல்லா கலக்கறோமோ அவ்வளவு மிருதுவான ஆம்லெட் கிடைக்கும். அதனால, சுமார் 30 விநாடிகள் வரை கலக்கலாம். அதன்பிறகு சிறிதளவு உப்பு (ஏற்கெனவே சீஸில் உப்பு இருக்கும் என்பதால் குறைவாகச் சேர்த்தால் போதும்), கைகளால் கிள்ளி வைத்திருக்கும் பார்சிலி இலைகள், மிளகுத்தூள் ஆகியவற்றைப் போட்டு மீண்டும் கலக்க வேண்டும். அதன்பிறகு அடுப்பில் கடாய் அல்லது தோசைக்கல்லை வைத்து சிம்மில் வைக்க வேண்டும் (நான்ஸ்டிக் தவா என்றால் கூடுதல் ரிசல்ட்டைப் பெறலாம்). அது சூடேறியதும், அரைத் தேக்கரண்டி வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை அதில் ஊற்ற வேண்டும். அதே வேகத்தில் தேக்கரண்டியால் 5 முதல் 10 விநாடிகள் கலக்கி, கடாய் அல்லது தோசைக்கல்லில் பரப்பிவிட வேண்டும். 30 விநாடிகள் வரை வேக வைத்தவுடன், வைக்கப்பட்ட மசாலா சீஸ் சீவலை தேவையான அளவு எடுத்து கடாயில் இருக்கும் ஆம்லெட் முழுவதும் தூவ வேண்டும். மொத்தம் 10 முதல் 15 விநாடிகளில், முழுமையாக வெந்துவிடாதபடி (கலக்கி போன்று), அப்படியே இரண்டாக அல்லது மூன்றாக மடித்து எடுத்துத் தட்டில் வைத்தால்... சுவையான, மிருதுவான பிரெஞ்சு ஆம்லெட் தயார். பிரெஞ்சு நாட்டவர்களுக்கு பெரும்பாலும் பிளாக் காபியுடன் இதுதான் காலை உணவாக இருக்கிறது.

அசல் ஒண்ணு... லோக்கல் ஒண்ணு... ‘ஆம்... லெட்’ஸ் என்ஜாய்!

இது லோக்கல் பிரெஞ்சு ஆம்லெட்

தேவையான பொருள்கள் அதேதான், இதுல கூடுதலா முட்டைக்கோஸ், குடமிளகாய், கேரட், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தேவையான அளவுக்கு, நீளவாக்கில் அல்லது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு முட்டைகளையும் உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி 30 விநாடிகள் நன்றாகக் கலக்க வேண்டும். அதன்பிறகு சிறிதளவு உப்பையும் (இதிலும் சீஸ் சேர்ப்போம் என்பதால் உப்பைக் குறைத்துக்கொள்ளலாம்), மிளகுத்தூளையும் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். அதோடு, தயாராக வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைக்கோஸ், குடமிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அதில் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும்.

அடுப்பில் கடாய் அல்லது தோசைக்கல்லை வைத்து சிம்மில் வைக்க வேண்டும். அது சூடேறிய பின்பு, அரைத் தேக்கரண்டி அளவுக்கு வெண்ணெய் அல்லது எண்ணெயை ஊற்றி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை அதில் ஊற்றி தோசையைப் போலப் பரப்பிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து லேசாக சீஸைத் தூவ வேண்டும். இதில் காய்கறிகளைச் சேர்த்திருக்கிறோம் என்பதால் 40 முதல் 50 விநாடிகள் கழித்து, இரண்டாக அல்லது மூன்றாக மடித்துத் தட்டில் வைத்துவிட்டால் சுவையான லோக்கல் பிரெஞ்சு ஆம்லெட் ரெடி.