கட்டுரைகள்
Published:Updated:

பள்ளபட்டி ஹாஜிமூஸா தேன்பூந்தி... ஷேர் மிட்டாய்!

ஷேர் மிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மிட்டாய்

உணவு

அல்வா, லட்டு, மைசூர்ப்பாகு, பால்கோவா, ஜாங்கிரி என்று ஒவ்வொரு இனிப்பு வகையும் ஒவ்வொரு பகுதியில் பிரசித்தம். கரூர் மாவட்டம், பள்ளபட்டி சுற்றுவட்டார மக்களோ, ‘‘எங்க ஊர் பக்கம்னா அது ஹாஜிமூஸா இனிப்புக் கடல்ல விற்பனையாகுற தேன்பூந்திதான்! அதுக்கு, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியான்னு கடல் கடந்து பலரோட நாக்குகள் அடிமை!’’ என்கிறார்கள்.

பள்ளபட்டி நகருக்குள் திண்டுக்கல் சாலையில் இயங்கிவரும், இந்த ஹாஜிமூஸா இனிப்புக்கடல் கடை ஆரம்பிக்கப்பட்டது, 1935-ம் வருஷம். 80 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் மனங்களில் இனிக்க இனிக்க இடம்பிடித்திருக்கும் இந்தக் கடையை, நான்காவது தலைமுறையினர் நடத்திவருகின்றனர். அபரிதமான சுவை, அற்புதமான தரம் என்று இத்தனை வருடக்காலம் தேன்பூந்தியின் சுவைமாறாத ரகசியம் குறித்து, முகமது சமதுவிடம் கேட்டோம்.

பள்ளபட்டி ஹாஜிமூஸா தேன்பூந்தி...  ஷேர் மிட்டாய்!

‘‘எங்க தாத்தா முகமது ராவுத்தர் கைவண்ணத்தில் உருவான இனிப்பு இது. கடையும் அவர் ஆரம்பிச்சதுதான். அவருக்குப் பூர்வீகம் கீரனூர். அங்க வீட்டுல எங்க தாத்தா, வீட்டுத் தேவைக்கு மிக்சர், தேன்பூந்தி, வடைன்னு செய்வாராம். அதனால், அவரோட சொந்தக்காரங்க அதிகம் உள்ள பள்ளபட்டிக்கு அழைத்து வந்து, ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்குத் தேன்பூந்தி செய்யச் சொல்லுவாங்களாம். நாலஞ்சு பேர் பணத்தை ‘ஷேர்' போட்டுப் பொருள்கள் வாங்கிக் கொடுக்க, தாத்தா தேன்பூந்தி செய்து தருவாராம். அதனால, இதுக்கு ‘ஷேர் மிட்டாய்'னும் பேராயிட்டு. அந்தச் சுவையில சொக்கிப்போன இங்குள்ளவங்க, எங்க தாத்தாவை இங்கேயே தேன்பூந்தி தயாரித்துக் கொடுக்கும் கடையை ஆரம்பிக்கச் சொல்லியிருக்காங்க. தாத்தாவும் அவங்க ஆசைப்படி கிழக்குப் பள்ளிவாசல் பக்கத்தில் இருக்கும் கடைவீதியில் கடை ஆரம்பித்திருக்கிறார்.

பொதுவாக, பூந்தியை எண்ணெயில் பொரிப்பாங்க. ஆனா இவர், நெய்யில் பொரித்ததால், அந்த டேஸ்ட் மக்களைக் கட்டிப் போட்டுட்டு. பள்ளபட்டி மக்களுக்கு மட்டும் அவர் ஸ்வீட் செஞ்சு கொடுத்திருக்கிறார். அதோடு, மைசூர்ப்பாகும் செஞ்சு கொடுக்க, அதுவும் தேன்பூந்தி அளவுக்கு மக்கள்கிட்ட ஃபேமஸாகியிருக்கு. அடுத்து, எங்க அப்பா ஹாஜி கீரனூர் அப்துல் அஜீஸ், 1945-ல் இருந்து 1970 வரை கடைக்குப் பொறுப்பேத்திருக்கிறார். அவர், பள்ளபட்டிக்கு அருகில் உள்ள ஊர் மக்கள்கிட்ட இந்தத் தேன்பூந்தியைக் கொண்டு சேர்த்தார். அதன்பிறகு, 1970-ல நான் கடை நிர்வாகத்துக்கு வந்தபிறகு, மெல்ல மெல்ல இந்தத் தேன்பூந்திச் சுவையை, தமிழ்நாடு, இந்தியா, 15-க்கும் மேற்பட்ட நாடுகள்னு கொண்டு சென்றேன். இப்போ, தமிழ்நாடு தாண்டி, சோலாப்பூர், நாசிக், நாக்பூர், விஜயவாடா, பெங்களூரு, கொல்கத்தா, சிக்மகளூர், கூர்க், விசாகப்பட்டினம், மும்பை, ஹைதராபாத்னு இந்தியா முழுக்க எங்களுக்கு கஸ்டமர்கள் இருக்காங்க. உலக அளவுல அனைத்து அரபு நாடுகள், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ்னு பல நாடுகள்ல ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க.

பள்ளபட்டி ஹாஜிமூஸா தேன்பூந்தி...  ஷேர் மிட்டாய்!

பள்ளபட்டிகாரங்க பல நாடுகள்ல இருப்பதால், ஊருக்கு வரும்போது கட்டாயம் எங்க கடை தேன்பூந்தியையும், மைசூர்ப்பாகையும் வாங்காமப் போகமாட்டாங்க. சமீபத்தில் அமெரிக்கா போன ஒருத்தர் எங்ககிட்ட 2,000 ரூபாய்க்குத் தேன்பூந்தி, மைசூர்ப்பாகு வாங்கினார். ஆனால், அதை ஃப்ளைட்டில் எடுத்துச் செல்ல ரூ. 15,000 செலவு பண்ணுனதா சொன்னார். அந்த அளவுக்கு எங்க கடை ஸ்வீட் அவரை மயக்கியிருக்கு. என் பையன் உமர் பரூக் 2010-ல் இருந்து கடை நிர்வாகத்துல இருக்கிறான். அவன் நாலாவது தலைமுறை.

எங்க கடை தேன்பூந்தி சுவைக்கு முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா இருவரும் ரசிகர்கள். அவர்களுக்கு அடிக்கடி, எங்க கடையிலிருந்து அவங்க கட்சியினர் ஸ்வீட் வாங்கிட்டுப் போவாங்க. அதேபோல், இப்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரும் எங்க கடை ஸ்வீட்டைச் சாப்பிட்டு, பாராட்டியிருக்காங்க. துர்கா ஸ்டாலினுக்கு எங்க கடை தேன்பூந்தி அவ்வளவு இஷ்டம். அதேபோல், அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி ரெண்டு பேரும் எங்க கடைக்கே வந்து ஸ்வீட் சாப்பிட்டிருக்காங்க. தவிர, நடிகர்கள் கமல், நெப்போலியன், சரத்குமார், நடிகை குஷ்புனு பலருக்கும் எங்க கடை ஸ்வீட் அவ்வளவு இஷ்டம். எங்க கடையில், ஏழு விதமான இனிப்பு வகைகளும் கார வகைகளும் இருந்தாலும், தேன்பூந்தி, மைசூர்ப்பாகு, கேரட் அல்வாவையும் பால் அல்வாவையும் மிக்ஸ் பண்ணித் தரும் கலவை அல்வா என்று இந்த மூணு ஐட்டம் ரொம்ப ஃபேமஸ்..!’’ என்றார்.

பள்ளபட்டி ஹாஜிமூஸா தேன்பூந்தி...  ஷேர் மிட்டாய்!

செய்முறை: ‘‘தேன்பூந்தி செய்ய முதல்தர கடலைமாவு, சர்க்கரை, நெய்யைத்தான் வாங்கிப் பயன்படுத்துறோம். சர்க்கரையையும், கடலைமாவையும் திண்டுக்கல்லில் பர்சேஸ் செய்றோம். நெய்யை ஒட்டன்சத்திரத்தில் வாங்கறோம். நெய் ஒரிஜினல் இல்லைன்னா, தேன்பூந்தியில் சுவை குறைஞ்சுரும். ஆனா, அப்படி ஆனதே இல்லை. தேவையான கடலைமாவோடு, நெய் கலந்து, அதுல லேசா தண்ணி கலந்து, பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையைத் தனியா ஜீரா செஞ்சு வச்சுக்கணும். அந்த மாவுக்கரைசலை சட்டியில் நெய் ஊற்றி, அகல சைஸ் ஓட்டைகள் இருக்கிற பெரிய ஜல்லிக் கரண்டில தேச்சு, பூந்திய பொரிச்சு எடுத்துக்கணும். அந்த பூந்தி முழுவதையும் நெய்யில் வடித்து எடுத்து, அதை ஜீராவில் நனைத்து எடுக்கணும். அதை உடனே சாப்பிட, க்ரிஸ்பியா இருக்கும். ஒருவாரம் வைத்து சாப்பிடலாம். கெடாது. ஆனால், இரண்டாவது நாளில் இருந்து க்ரிஸ்பியா இருக்காது. சாஃப்ட் ஆயிரும். இதுல, எங்க மாஸ்டரோட கைப்பக்குவம் சேர்வதால், ஷேர்மிட்டாய் என்கிற தேன்பூந்தி, மக்களின் நாவுகளை இனிக்க வைக்கிறது’’ என்றார்.