அலசல்
Published:Updated:

பள்ளப்பட்டி பலகாரம்... நேஷனல் லெவல் நெய் மைசூர்ப்பாகு!

மைசூர்ப்பாகு
பிரீமியம் ஸ்டோரி
News
மைசூர்ப்பாகு

எல்லாவகையான கார, இனிப்பு வகைகளையும் செய்தாலும், எங்க கடையோட பிரத்யேக இனிப்பா நெய் மைசூர்ப்பாகு பேர் வாங்கியது.

``நல்ல மைசூர்ப்பாகு சாப்பிட, மைசூர்தான் போகணும்னு இல்லை. இந்தா கூப்பிடு தொலைவில் இருக்கிற பள்ளபட்டி சதக் ஸ்வீட்ஸ் ஸ்டாலுக்குப் போனால் போதும். அங்கு தயாராகும் நெய்மணக்கும் மைசூர்ப்பாகை சாப்பிட்டு இன்புறலாம்’’ என்று ரசித்துச் சொல்கிறார்கள் கரூர்வாசிகள். இங்கு தயாராகும் மைசூர்ப்பாகு, பல மாவட்டங்கள், மாநிலங்கள், கடல் தாண்டிப் பல நாடுகள் என்று பயணிக்கிறது.

கரூர் மாவட்டம் பள்ளபட்டி நகரில், திண்டுக்கல் சாலையில் அமைந்திருக்கிறது இந்த சதக் ஸ்வீட்ஸ் ஸ்டால். கடந்த பத்து வருடங்களாக பலரை இனிக்க இனிக்க வசியப்படுத்தும் இந்தக் கடையை சதக்கத்துல்லாவும், அவர் மகன் முஹம்மது அஸ்பாக்கும் நடத்திவருகிறார்கள். சதக்கத்துல்லாவிடம் பேசினோம்.

பள்ளப்பட்டி பலகாரம்... நேஷனல் லெவல் நெய் மைசூர்ப்பாகு!

‘‘நான் அஞ்சாவது வரைதான் படிச்சிருக்கேன். எனக்கு வயசு 53. அதிகம் படிக்கலன்னாலும், இதே திண்டுக்கல் சாலையில் கொஞ்சம் தள்ளி இருக்கிற எங்க உறவினரோட ஸ்வீட் கடையில் 33 வருஷமா இருந்தேன். ஜாங்கிரி, பூந்தி, ஸ்பெஷல் மிக்சர், மிக்சர், பால்கோவா, அல்வா, பால் அல்வா, கேரட் அல்வா, முறுக்கு, காராசேவுன்னு பல அயிட்டங்களை சுவையா போட அங்கதான் கத்துக்கிட்டேன். அங்கே நிர்வாகத்திலும் இருந்தேன்.

இந்நிலையில்தான், கடந்த 2013-ம் வருஷம் சொந்தமா தொழில் தொடங்க நினைத்து, திண்டுக்கல் சாலையில் என் பெயரிலேயே இந்த சதக் ஸ்வீட் கடையைத் தொடங்கினேன். சென்டிமென்டா இருக்கட்டுமேன்னு, ரம்ஜான் அன்னைக்குத்தான் கடையைத் தொடங்கினேன். அதனால், முதல்நாளே கூட்டம் அலைமோதியது. தவிர, என்னைப் பத்தியும், என்னோட கைப்பக்குவம் பத்தியும் பள்ளபட்டி மற்றும் சுத்துப்பட்டு கிராம மக்களுக்கும் நல்லா தெரியும்ங்கிறதால, கண்ணை மூடிக்கிட்டு என்னோட கடைக்கும் ஆதரவு கொடுத்தாங்க. அவங்க தயவுல ஆரம்பத்தில் இருந்தே கடை பிக்கப் ஆச்சு. தரம்தான் நிரந்தரம் என்பதை நான் ஏற்கெனவே இருந்த கடையில் பாலபாடமா கத்துக்கிட்டதால, தரத்துல ஆரம்பத்துல இருந்தே எந்தக் குறையும் வைக்காம பலகாரங்களைத் தயாரிக்க ஆரம்பித்தோம்.

பள்ளப்பட்டி பலகாரம்... நேஷனல் லெவல் நெய் மைசூர்ப்பாகு!

எல்லாவகையான கார, இனிப்பு வகைகளையும் செய்தாலும், எங்க கடையோட பிரத்யேக இனிப்பா நெய் மைசூர்ப்பாகு பேர் வாங்கியது. நல்ல மாஸ்டர்களாக மூணு பேரை நியமிச்சோம். தொடர்ந்து, ஸ்வீட்களைத் தரமா கொடுத்ததால், பள்ளபட்டி சுற்றுவட்டாரம் மட்டுமன்றி, கரூர் மாவட்டம் முழுக்க எங்க கடை தெரிந்தது.

பள்ளபட்டியைச் சேர்ந்தவங்க வியாபார நிமித்தமா வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், அரபு நாடுகள், சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள்னு பல இடங்களிலும் வசிக்கிறாங்க. அவங்க ஊருக்கு வரும்போதெல்லாம் எங்க கடையில் இனிப்பு, காரங்கள், குறிப்பா நெய் மைசூர்ப்பாகை வாங்கிட்டுப் போவாங்க. அவர்கள் மூலமா, நிறைய கஸ்டமர்கள் கிடைச்சாங்க. பள்ளபட்டியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்துல கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை செல்லுது. எங்க கடை ஸ்வீட்டோட டேஸ்ட் தெரிஞ்சவங்க, அந்த வழியா போகும்போது அலுப்பு பார்க்காம ஒரு எட்டு எங்க கடைக்கு வந்து ஸ்வீட் வாங்கிட்டுப் போவாங்க. கோயமுத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கரூர் கோர்ட் வரும்போதெல்லாம் 30 கிலோமீட்டர் தள்ளியிருக்கிற பள்ளபட்டிக்கு எங்க கடையில ஸ்வீட் வாங்குறதுக்காகவே வந்துட்டுப் போவார். அதோட, அமெரிக்காவில் உள்ள உறவினர்களுக்கும் வாங்கி அனுப்புவார். இப்படி, தினமும் எங்க கடைக்கு 300 பேருக்குக் குறையாம வருவாங்க. திருமணம், பண்டிகை நாள்கள்னா, அந்த எண்ணிக்கை மூணு மடங்காக இருக்கும். எங்க கடைக்கு 3,000 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க. தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கும் ஆர்டரின் பேரில் கூரியர் மூலம் ஸ்வீட் அனுப்பிக்கிட்டு இருக்கிறோம். எங்க கடை மைசூர்ப்பாகைச் சாப்பிடுறவங்க, ‘இந்தச் சுவையை நாங்க எங்கேயும் அனுபவிச்சதில்லை'ன்னு புகழ்ந்து சொல்வாங்க.

பள்ளப்பட்டி பலகாரம்... நேஷனல் லெவல் நெய் மைசூர்ப்பாகு!

பலர் மைசூர்ப்பாகை எண்ணெய், டால்டா பயன்படுத்திச் செய்வாங்க. அது, நார்மல் சுவையைக் கொடுக்கும். ஆனால், நாங்க சுத்தமான நெய்யைப் பயன்படுத்தி, மைசூர்ப்பாகு தயாரிப்பதால், அதைச் சாப்பிடுறவங்களோட கையிலும் வாயிலும் நெய் மணம் வீசும். நெய் மைசூர்ப்பாகை வாயில் பிச்சுப் போட்டா, நெய் மணத்தோட அப்படியே கரைஞ்சு தொண்டைக்குள் இறங்கி, அது தரும் தித்திப்பு அவ்வளவு அலாதியாக இருக்கும். இதுக்குப் பயன்படுத்துற நெய்யில் கலப்படம் இருந்திட்டா, மைசூர்ப்பாகு சுவையிலும் பழுது வந்திரும். அதனால், மைசூர்ப்பாகு செய்யப் பயன்படுத்துற கடலைமாவு, நெய், சர்க்கரை என எல்லாவற்றையும் நம்பர் ஒன் தரத்துல பார்த்துப் பார்த்து வாங்குறோம். கடலை மாவையும், சர்க்கரையையும் திண்டுக்கல் ஹோல்சேல் மண்டியில் வாங்குறோம். நெய்யை ஒட்டன்சத்திரத்தில் வாங்குறோம்.

தினமும் 40 கிலோ மைசூர்ப்பாகு விற்பனை ஆகுது. மாசத்துக்கு 1,200 கிலோவில் இருந்து 1,500 கிலோ வரை நெய் மைசூர்ப்பாகு விற்பனை ஆகுது. ஆனால், பல ஆர்டர்களை எங்களால் செஞ்சு கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. இப்போ, என் மகன் முஹம்மது அஸ்பாக்கும் கடை நிர்வாகத்துக்கு வந்திருப்பதால், எங்க கடை நெய் மைசூர்ப்பாகை இன்னும் பல நாடுகள், பலதரப்பட்ட மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கணும்ங்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறோம். நிச்சயம் சாதிப்போம்’’ என்றார்.

நெய் மைசூர்ப்பாகு செய்முறை பற்றி நம்மிடம் பேசினார் முஹம்மது அஸ்பாக்...

‘‘ஒருமுறை செய்ய மூணு கிலோ சீனி, மூன்றரைக் கிலோ நெய், 800 கிராம் கடலைமாவைப் பயன்படுத்துவோம். முதல்ல சீனியை நல்ல பதமான பதத்தில் பாகாகக் காய்ச்சிக்கணும். அதுல, கடலை மாவு, நெய்யைக் கொட்டி, இளஞ்சூட்டில் அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் வரை கிளறிவிடணும். அதன்பிறகு, அதைத் தட்டுல கொட்டி, 20 நிமிடங்கள் ஆற விடணும். அதன்பிறகு, பீஸ் பீஸாகக் கட் பண்ணணும். 160 பீஸ்கள் வரை கிடைக்கும். அதாவது, ஆறரைக் கிலோ வரை கிடைக்கும். பலரும் சுவையைக் கூட்ட, செயற்கை எசன்ஸைப் பயன்படுத்துறாங்க. ஆனா, நாங்க இப்படி இயற்கையா தயாரிக்கிறோம். அதனால்தான், எங்க கடையில் தயாராகுற நெய் மைசூர்ப்பாகு, ரோட்டுல போறவங்களையும் அனிச்சையாக உள்ளார கூப்புட்டு வந்திருது.’’