கட்டுரைகள்
Published:Updated:

இதயம் தொட்ட இனிப்பு... மணமணக்கும் பன்னீர் ஜாங்கிரி!

பன்னீர் ஜாங்கிரி
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர் ஜாங்கிரி

கும்பகோணம் ஆன்மிக நகரம். கோயில்கள், மகாமகக் குளம், வெற்றிலை, டிகிரி காபி என கும்பகோணத்தின் அடையாளப் பட்டியல்கள் ஏராளம்.

``வாசனைக்குக்கூட ஸ்வீட் பிடிக்காது... சாப்பிட மாட்டேன்’’ என்று யாராவது சொன்னால் அவரை கும்பகோணத்துக்கு ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பி வைங்க... மனுஷன் ரிட்டன் டிக்கட்டே வாங்க மாட்டாரு!

ஆமாங்க! வாசனைக்காகவே ஒரு ஸ்வீட்டை உருவாக்கி, அது ஊரு நாடுன்னு எல்லார் நாக்கிலும் பட்டு பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கு. அட, நம்ம கும்பகோணம் பன்னீர் ஜாங்கிரியைத்தானுங்க சொல்றோம்.

கோயில் நகரமான கும்பகோணத்தில் தலைமைத் தபால் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீவெங்கடரமணா இனிப்பகத்தில் செய்யப்படும் ‘பன்னீர் ஜாங்கிரி'க்கு ஒரு பெரிய ‘ருசிகர்’ கூட்டமே உண்டு.

மணக்க மணக்க மனசையும், இனிக்க இனிக்க இதயத்தையும் கொள்ளைகொள்ளும் இந்தப் பன்னீர் ஜாங்கிரி உருவான வரலாறைச் சொல்கிறார், ஸ்ரீவெங்கடரமணா இனிப்பகத்தின் உரிமையாளர் ரமேஷ் ராஜா...

இதயம் தொட்ட இனிப்பு...
மணமணக்கும் பன்னீர் ஜாங்கிரி!

‘‘கும்பகோணம் ஆன்மிக நகரம். கோயில்கள், மகாமகக் குளம், வெற்றிலை, டிகிரி காபி என கும்பகோணத்தின் அடையாளப் பட்டியல்கள் ஏராளம். அதில் எங்க கடையில் செய்யப்படுகிற பன்னீர் ஜாங்கிரியும் அடங்கியிருக்கிறது.

எங்களோட 50 ஆண்டுக்கால வியாபாரத்தில் எங்களுக்கான தனி அடையாளத்தையும் பெற்றுத் தந்துள்ளது. தொடக்கத்தில் எல்லாக் கடைகளையும் போல நார்மல் இனிப்பு வகைகளைத்தான் நாங்களும் செய்துவந்தோம். புதுசாவும் தனித்தன்மையோடும் ஏதாவது செய்ய யோசிச்சோம். கும்பகோணத்திற்குப் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். அவர்களையும் கவனத்தில் வைத்து வட மாநில ஸ்வீட் வகைகளை அலசினோம். அது தவிர, கும்பகோணம் பகுதியில் அதிக அளவில் பன்னீர் தயாரிக்கப்பட்டதால், பன்னீரைச் சேர்த்துச் செய்ய நினைச்சோம். அப்படி உருவானதுதான் இந்தப் பன்னீர் ஜாங்கிரி. அதுவரை நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்திவந்த பன்னீரைக் கலந்து நாங்கள் செய்த பன்னீர் ஜாங்கிரியின் மணம் எல்லோர் மனசையும் கொள்ளையடித்தது.”

இதயம் தொட்ட இனிப்பு...
மணமணக்கும் பன்னீர் ஜாங்கிரி!

தேவையான பொருள்கள்:

உளுந்து, சர்க்கரை, சோளமாவு, பன்னீர், எண்ணெய், சிறிதளவு நெய்.

செயல்முறை:

உளுந்தை அரை மணி நேரத்திற்கு மேல் ஊறவைத்து நன்கு அரைக்க வேண்டும். கையில் மாவை எடுத்து ஊதினால் பஞ்சு மாதிரி பறக்கக் கூடிய பக்குவத்திற்கு வரும் வரை அரைத்து எடுக்க வேண்டும். ஒரு சட்டியில் ஒரு கைப்பிடி உளுந்து மாவைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் சோள மாவைப் போட்டுக் கிளற வேண்டும். பின்னர் மாவை பாலீஷ் செய்வதுபோல் கையினாலேயே லேசாகத் தேய்க்க வேண்டும்.

பெரிய எண்ணெய்ச் சட்டியில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், தேய்த்த மாவை, ஜாங்கிரி குட்டை என சொல்லப்படுகிற லேசாக ஓட்டை போடப்பட்ட துணியை எடுத்து (வீட்டிலேயே இருக்கும் சுத்தமான துணியைப் பயன்படுத்தலாம்) அதில் வைத்து கையினாலேயே எண்ணெய்ச் சட்டியில் ஜாங்கிரி சுற்ற வேண்டும். நன்கு வெந்த பிறகு எடுத்து வைக்க வேண்டும்.

ஒரே அளவு, துல்லியமான டிசைன், கைப்பக்குவம் கிடைக்கும் என்பதாலேயே கையில் சுற்றுவதை இப்போது வரை கடைப்பிடிக்கிறோம்.

இதயம் தொட்ட இனிப்பு...
மணமணக்கும் பன்னீர் ஜாங்கிரி!

முன்னதாக சட்டியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடான பிறகு அதில் சர்க்கரையைக் கொட்டி ஜீரா (பாகு) கரைக்க வேண்டும். ஜீரா தயாரான பிறகு கீழே இறக்கி விட வேண்டும். சூடு லேசாக இருக்கும்போதே சிறிதளவு நெய் சேர்த்துக் கிளற வேண்டும். (அதிகம் நெய் ஊற்றினால் பன்னீர் வாசனை எடுபடாமல் போய்விடும்) பின்னர் தேவையான அளவு பன்னீரை ஊற்றி லேசாகக் கிளறினால் பன்னீர் ஜீரா ரெடியாகிவிடும்.

எண்ணெயில் பொரித்த ஜாங்கிரியை அதில் கொட்டி ஊற வைத்து எடுத்தால் பன்னீர் ஜாங்கிரி ரெடி. அரை மணி நேரத்திற்கு மேல் ஊறினால் ஜீரா ஜாங்கிரிக்குள் சென்றுவிடும். லேசாக மொறுமொறுவென இருப்பதற்காகவும், ஜீராவில் ஊரும் ஜாங்கிரி நொது நொதுவென மாறாமல் திடமாக இருப்பதற்காகவுமே லேசாக சோள மாவு சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.