Published:Updated:

பலே பனீர் ரெசிப்பி!

``ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அப்பாவுடன் சந்தைக்குச் செல்ல வேண்டும் என்று இருந்த ஆர்வம், சமையலில் இருந்ததில்லை. ஹாஸ்டல், படிப்பு, எக்ஸாம்... பின்பு அலுவலக வேலை என வாழ்க்கை சென்றது.

பிரீமியம் ஸ்டோரி
பலே பனீர் ரெசிப்பி!

வீட்டில் நான் சாப்பிட்ட தட்டையும் என் அம்மாதான் கழுவி வைப்பார். எம்.பி.ஏ பட்டதாரியாக இருந்தாலும், வீட்டில் செல்ல மகளாகவே இருந்தேன். ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால், சீரகம் எது, சோம்பு எதுவென்று வித்தியாசம் தெரியாத நிலையில்தான் திருமணம் செய்துகொண்டேன். சமையல் ரொம்ப ஈஸி என எனக்குக் கற்றுக்கொடுத்தது என் அத்தை (மாமியார்)தான். 20 பேருக்கு சாப்பாடு என்றாலும் அரை மணி நேரத்தில் செய்துவிடுவார். அந்த வேகம் இன்னும் எனக்கு வரவில்லை. ரெஸ்டாரன்ட்டில் வித்தியாசமான ஃபுட் ஆர்டர் செய்தால் என் கணவர், `இந்த டிஷ்ஷை ஏன் நம் வீட்டு கிச்சனிலேயே செய்யக் கூடாது’ எனக் கேட்பார். அவரை சர்ப்ரைஸ் செய்வதற்காகவே பேக்கிங் மற்றும் அயல்நாட்டு உணவு தயாரிப்பைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். என் கணவரிடமிருந்து `நைஸ்’ என்கின்ற அந்த சர்டிஃபிகேட் வாங்க நான் நிறையவே முயற்சி செய்வேன். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் எனக்கு அதிக உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும்.

அலுவலக வேலையை நான் விட்டதற்காக நான் கவலைப்படு வதில்லை. ஏனென்றால், இப்போது `Home Chef’ எனப் பெருமையுடன் அழைக்கப்படுகிறேன். `Popcorn Hut’ யூடியூப் சேனலில் என் ரெசிப்பிகளைப் பதிவிடுகிறேன். இதோ, பனீர் பாயசம் முதல் பனீர் பீட்சா வரை உங்களுக்காக!’’ என்று உற்சாகத்துடன் சிறப்பான பனீர் ரெசிப்பிகளை அழகான படங்களுடன் பகிர்கிறார் தர்மபுரியைச் சேர்ந்த சமையற்கலைஞர் ஐஸ்வர்யா ரங்கன்.

பலே பனீர் ரெசிப்பி!

பனீர் பாயசம்

தேவையானவை:

துருவிய பனீர் - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

ஏலக்காய் - 2

கெட்டியான பால் - அரை லிட்டர்

முந்திரி, பாதாம் - தலா 4

நெய் - 3 டீஸ்பூன்

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காமல் பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துருவிய பனீர் சேர்க்கவும். ஏலக்காயை இடித்துச் சேர்க்கவும், ஐந்து நிமிடங்களுக்கு நன்கு கிளறி, இறக்கவும். சர்க்கரை, பால், பனீர், ஏலக்காய் ஆகிய அனைத்தும் சேர்ந்து நல்ல மணம் தரும்.

ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாமை நன்றாக வறுத்து, செய்துவைத்திருக்கும் பாயசத்துடன் சேர்க்கவும். சுவையான பனீர் பாயசம் 10 நிமிடங்களில் தயார்.

100 கிராம் பனீரில் 18 கிராம் என்கிற அளவில் புரதச்சத்து உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பனீர் ஜிலேபி

தேவையானவை:

பனீர் - 150 கிராம்

சர்க்கரை - அரை கப்

கேசரி கலர் - ஒரு சிட்டிகை

மைதா - 4 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

ஏலக்காய் - 2

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்துப் பாகு தயாரிக்கவும். பாகு கெட்டியான கம்பி பதம் வந்த பிறகு அரை சிட்டிகை கேசரி கலர் (அல்லது குங்குமப்பூ) சேர்க்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் பனீரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும் அத்துடன் மைதா, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரை சிட்டிகை கேசரி கலர் (அல்லது குங்குமப்பூ) சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பின் பனீர் கலவையை ஜிலேபியாகப் பிழிந்து எடுக்கவும்.மிதமான தீயில் ஜிலேபி பிழியவும். இல்லையென்றால் உடைந்துவிடும்.

ஜிலேபி நன்கு வெந்து, பொன்னிறமாக மாறியதும் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்துக்கொள்ளவும்.

10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு பரிமாறலாம்.

எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்தும் தன்மை பனீருக்கு உண்டு.

மிர்ச்சி பனீர்

தேவையானவை:

பனீர் - ஒரு கப் (நறுக்கவும்)

பஜ்ஜி மிளகாய் - 4

பெரிய வெங்காயம் -

ஒன்று (சிறிதாக நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி - கால் கப்

சிறிதாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்

சிறிதாக நறுக்கிய கேரட் - கால் கப்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு - விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும் (விருப்பமான காய்கறிகளைச் சேர்க்கலாம்). அடுத்து உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர், பனீரை சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். வதங்கிய உடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிவிடவும். ஸ்டஃப்பிங் மசாலா தயார்.

நீளமான பஜ்ஜி மிளகாயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிடவும். செய்து வைத்திருக்கும் பனீர் ஸ்டஃபிங்கை அதனுள் சேர்த்துக்கொள்ளவும்

ஒரு நான் - ஸ்டிக் பான் (pan) அல்லது தவாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் தயார் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்டு பஜ்ஜி மிளகாய் சேர்த்து, இரண்டு பக்கமும் மூன்று நிமிடங்கள் மூடிவைத்து எடுத்தால், சுவையான ஸ்டஃப்டு மிர்ச்சி தயார்

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனும் பனீருக்கு உண்டு.

பனீர் பெப்பர் ஃப்ரை

தேவையானவை:

பனீர் - ஒரு கப் (நறுக்கவும்)

மிளகு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

தக்காளி - 2 (நறுக்கவும்)

இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)

பூண்டு - 6 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

தண்ணீர் - அரை கப்

பட்டை - ஒன்று

கிராம்பு - 3

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகு, பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்துக் கிளறவும். கால் கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.எண்ணெய் தனியாகப் பிரிந்த பின்பு, நறுக்கிய பனீரைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.

காரம் அதிகம் தேவை என்றால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால், சுவையான பனீர் பெப்பர் ஃப்ரை தயார். நான், சப்பாத்திக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.

பனீரில் உள்ள பொட்டாசியம் இதயத்துக்கு இதமளிக்கிறது.

ஸ்டஃப்டு பாசிப்பருப்பு சில்லா

தேவையானவை:

பனீர் - ஒரு கப் (நறுக்கவும்)

பாசிப்பருப்பு - ஒரு கப்

பெரிய வெங்காயம் -

ஒன்று (சிறிதாக நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி - கால் கப்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சிறிதாக நறுக்கிய

குடமிளகாய் - கால் கப்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

(தோல் சீவவும்)

பச்சை மிளகாய் - 2

சிறிதாக நறுக்கிய கேரட் - கால் கப்

பச்சைப் பட்டாணி - கால் கப்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

நெய் அல்லது எண்ணெய் (சுட்டெடுக்க) - தேவையான அளவு.

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

பாசிப்பருப்பை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜாரில் பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய்

விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கவும் (விருப்ப

மான காய்கறிகளைச் சேர்க்கலாம்).அத்துடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பனீரை சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். வதங்கிய உடன் சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிவிடலாம். ஸ்டஃப்பிங் மசாலா தயார்.

அரைத்துவைத்திருக்கும் பாசிப்பருப்பு மாவைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு எடுத்துக்கொள்ளவும். தோசை தவாவில் 2 கரண்டி மாவைச் சேர்த்து தோசையாக ஊற்றி நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசையை இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

இப்போது செய்துவைத்திருக்கும் பனீர் ஸ்டஃபிங்கை பாசிப்பருப்பு தோசையின் நடுவில் கொஞ்சம் சேர்த்து மடிக்கவும். தக்காளிச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

பனீரில் உள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின் கர்ப்பிணிக்கு நன்மை செய்கிறது.

பனீர் மலாய் கோஃப்தா

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 2 (வேகவைக்கவும்)

பனீர் - அரை கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 2 (நறுக்கவும்)

ஏலக்காய் - 2

பட்டை - சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு கப்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

மைதா கரைசல் - சிறிதளவு

ஃப்ரெஷ் கிரீம் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

பனீரை சிறிதாக துருவிக்கொள்ளவும், வேகவைத்து, தோலுரித்த உருளைக்கிழங்குடன் பனீர், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை சிறிதளவு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். இதை சிறிய பந்துகளாக உருட்டி மைதா மாவு கரைசலில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், கோஃப்தா பால்ஸ் தயார்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், வெங்

காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பட்டை, ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு சூடு குறைந்த பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலி

யில் 2 டீஸ்பூன் எண்ணெய், 2 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து

10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.கிரேவியில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்த உடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கிளறிவிடவும். க்ரீம் சேர்த்தால் கிரேவி திக்காக இருப்பதுடன் ரெஸ்டாரன்ட் டேஸ்ட் கிடைக்கும்.

கிரேவி தயாரானவுடன் செய்து வைத்திருக்கும் பன்னீர் கோஃப்தா பால்ஸ் சேர்த்து லேசாகக் கிளறிவிட்டு, சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால், ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் மலாய் கோஃப்தா தயார்.

சப்பாத்தி, நான், புலாவுக்குச் சரியான காம்பினேஷன்.

பனீரைச் சமைக்காமல் சாப்பிடுவதன் மூலம் ஓரளவு எடையைக் குறைக்க முடியும்.

பனீர் பறவைக்கூடு

தேவையானவை:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 3

பச்சைப் பட்டாணி - கால் கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று

கேரட் - ஒன்று (துருவவும்)

நொறுக்கிய சேமியா - 100 கிராம்

மைதா கரைசல் - 150 மில்லி

பனீர் - 100 கிராம்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

கரம் மசலாத்தூள் - கால் டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி உடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் சிறிய பகுதி எடுத்து வடை போல தட்டி நடுவில் ஒரு விரலால் குழி போல செய்துகொள்ளவும். இதை மைதா மாவு கரைசலில் புரட்டி, பின்னர் நொறுக்கிய சேமியாவில் புரட்டி, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

குருவியின் முட்டை செய்வதற்காக ஒரு தட்டில் பனீரை சேர்த்து நன்றாக அழுத்தி தேய்த்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்த குருவிக்கூட்டைப் பொரித்துக்கொள்ளவும். அதே எண்ணெயில் பனீர் முட்டைகளையும் பொரித்தெடுக்கவும்.

இப்போது பறவைக்கூட்டின் நடுப்பகுதியில் இரண்டு பனீர் முட்டைகளை வைத்து பனீர் பறவைக்கூட்டை தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.

100 கிராம் பனீர் 265 கலோரி ஆற்றலை அளிக்கும்.

பாலக் பனீர் சீஸ் தோசை

தேவையானவை

பனீர் - அரை கப்

பாலக்கீரை - ஒரு கப்

தோசை மாவு - ஒரு கப்

பச்சை மிளகாய் - ஒன்று

சீஸ் - கால் கப்

பெரிய

வெங்காயம் - ஒன்று

இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

நெய் அல்லது

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தண்ணீர் - ஒரு கப்

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கழுவிய பாலக்கீரையை அத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் வேகவிடவும்.பாலக்கீரை வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த பாலக்கீரை, ஒரு பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.தோசைக்கல்லைச் சூடாக்கி 2 கரண்டி தோசை மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.

அரைத்துவைத்திருந்த பாலக்கீரையை தோசையின் மேல் சேர்த்து நன்றாகப் பரப்பிவிடவும். அதன் மேல் நறுக்கிய வெங்காயமும் சேர்த்துக்கொள்ளவும். ஒரு கேரட் துருவியின் மூலம் பனீரை சிறிதாக துருவி அதைத் தோசையின் மேல் பரவலாகச் சேர்த்து, அதன் மேல் சிறிதளவு சீஸ் சேர்த்து, 2 நிமிடங்கள் மூடிவைத்து எடுத்தால், சுவையான பாலக் பனீர் சீஸ் தோசை தயார். இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு பனீரும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும்.

தந்தூரி பனீர் பீட்சா

தேவையானவை

பனீர் - ஒரு கப்

குடமிளகாய் - ஒன்று

பெரிய வெங்காயம் - ஒன்று

பீட்சா சாஸ் - கால் கப்

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

பீட்சா பேஸ் - ஒன்று

துருவிய சீஸ் - கால் கப்

தயிர் - 4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்

நறுக்கிய ஆலிவ்ஸ் - ஒரு டீஸ்பூன்

கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

பனீர், வெங்காயம், குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, கஸூரி மேத்தி மற்றும் நறுக்கிய பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து நன்றாகப் புரட்டி

10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்

ஒரு தந்தூரி ஸ்டிக்கில் பனீர், வெங்காயம், குடமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து காஸ் ஸ்டவ்வில் சுட்டு பனீர் தந்தூரி செய்யவும். பீட்சா பேஸின் மேல் பீட்சா சாஸ் சேர்த்து, அதன் மேல் செய்து வைத்திருக்கும் பனீர் தந்தூரியை ஸ்டிக்கில் இருந்து எடுத்து சேர்த்து பரப்பிவிடவும். துருவிய சீஸ் சேர்த்துக்கொள்ளவும், ஆலிவ்ஸ், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் கஸூரி மேத்தியை மேலே தூவிக்கொள்ளவும்.

பீட்சா மேல் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை சுற்றிலும் சேர்த்து, தவாவில் வைத்து மூடி போட்டு அல்லது அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸில் 20 நிமிடங்கள் வைத்து எடுத்தால், சுவையான தந்தூரி பனீர் பீட்சா தயார்.

100 கிராம் பனீரில் 20.8 கிராம் கொழுப்புச்சத்தும் 1.2 கிராம் மாவுச்சத்தும் உள்ளது.

பனீர் டிக்கா பாப்கார்ன்

தேவையானவை

நறுக்கிய பனீர் - ஒரு கப்

கடலை மாவு - 3 டீஸ்பூன்

தயிர் - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

ஓட்ஸ் - அரை கப்

டொமேட்டோ கெட்சப் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

பலே பனீர் ரெசிப்பி!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு தட்டில் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும். செய்து வைத்திருக்கும் தயிர்க் கலவையில் நறுக்கிய பனீரைப் புரட்டி எடுக்கவும். பின்பு ஓட்ஸில் நன்றாக உருட்டி எடுத்துவைக்கவும். அதேபோல் அனைத்து பனீரையும் செய்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தயார் செய்து வைத்திருக்கும் பனீரை பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால், சுவையான பனீர் டிக்கா பாப்கார்ன் தயார். டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளைக் கவரும் டிஷ் இது.

உடல் மற்றும் மூட்டுவலியைக் குறைக்கும் தன்மை பனீருக்கு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு