
#Utility
இஞ்சி டீ, ஏலக்காய் டீ வழக்கமாக நாம் சுவைப்பது. `ஆரஞ்சு டீ, புதினா டீ, ஸ்பைஸ்டு டீ என நீங்கள் ருசிக்கும் வித்தியாசமான டீ ரெசிப்பிகள் ப்ளீஸ்' என அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் வாசகிகளிடம் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த ரெசிப்பிகள் இங்கே...
Bhavna Anand
தந்தூரி டீ: ஒரு டம்ளர் பால், சிறிது டீத்தூள், தேவைக் கேற்ப சர்க்கரை, சிறிது ஏலக்காய் தட்டி போட்டு, டீ போட்டுக்கொள்ளவும். தந்தூரி டீ பானையை (ஒரு டம்ளர் டீ கொள்ளுமளவு உள்ள சிறிய குடுவை போன்ற மண்பாண்டம்) அடுப்பில் நன்கு சூடாக்கி, டீயை அதில் ஊற்றவும். சுட்ட மண் வாசமும் ஏலக்காய் வாசமும் சேர்ந்த ருசியில் டீயை ருசித்தால்... அடடா!
Hyma Balaji
சாக்லேட் டீ: அரை கப் பால், ஒரு டீஸ்பூன் டீத்தூள், 2 டீஸ்பூன் சர்க்கரை, ஒரு இன்ச் பட்டை, 3 ஏலக்காய், ஒரு டீஸ்பூன் கோகோ பவுடர்... எல்லாவற்றையும் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்ட... யம்மி!
Sarasvathi Swaminathan
புதினா - இஞ்சி - மிளகு டீ: ஒரு கைப்பிடி புதினா இலைகள், 2 ஏலக்காய், 6 மிளகு, ஓரு சிறிய துண்டு இஞ்சி எடுக்கவும். 3 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து, புதினா இலைகளைப் போட்டு, மேலே கூறிய பொருள்களைத் தட்டிப்போட்டு, ஒரு டீஸ்பூன் டீத் தூள் சேர்த்து, ஒரு கொதிவிட்டு வடிகட்டி, ஒரு டம்ளர் பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் மணமும் ருசியும்... Mouth watering!
Srividhya Premanand
சங்குப்பூ டீ: 4, 5 நீலநிற சங்குப்பூக்களை ஒரு டம்ளர் வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். பிறகு, பூக்களை வெளியே எடுத்து விடவும். தண்ணீர் நீல நிறமாக மாறியிருக்கும். அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கலக்கவும். வித்தியாசமான சுவையில் ஃப்ளவர் டீ ரெடி. இத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து பர்பிள் டீயாகவும் குடிக்கலாம்.
Ahila Krishnan
பட்டர் மசாலா டீ: அரை கப் தண்ணீரை நன்கு கொதிக்கவிட்டு அதில் சிறிது இஞ்சி, ஒரு டீஸ்பூன் மிளகு, 3 கிராம்பு, சிறிது பட்டை, 2 ஏலக்காய் ஆகியவற்றை இடித்துச் சேர்க்கவும். நீரின் நிறம் மாறியதும் டீத்தூள், சர்க்கரை சேர்த்துக்கொதிக்க வைத்து வடிகட்டவும். இரண்டு டம்ளர் காய்ச்சிய பாலுடன் இந்த டீ கலவையைச் சேர்த்து, 3 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கலக்கினால்... தூள்!

Nidhya Natarajan
ஸ்ட்ராபெர்ரி டீ: பழுத்த ஸ்ட்ராபெர்ரி - 8, டீ பேக்ஸ் - 2, ஐஸ்கட்டி, சர்க்கரை - தேவைக்கேற்ப, தண்ணீர் - 2 கப், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரியை நசுக்கி, தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, டீ பேக்ஸ் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆறியதும் ஃபிரிட்ஜில் வைக்கவும். பின்னர் அதை எடுத்து, அதனுடன் ஸ்ட்ராபெர்ரி நீர், தேவையான அளவு சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, ஐஸ் கட்டியைச் சேர்க்கவும். சுவையான ஸ்ட்ராபெர்ரி ஐஸ்டு டீ ரெடி!
Cynthiya Dhanaraj
பாதாம் டீ: இரண்டு பாதாம், சிறிது சுக்கு அல்லது இஞ்சி, சிறிது அதிமதுரம், சிறிது சித்தரத்தை, இரண்டு ஏலக்காய் இவற்றை இடித்து, பாலில் சேர்த்துக் குடித்தால் தொண்டைக்கு இதமாகவும், பாதாம் இருப்பதால் புத்துணர்வாகவும் இருக்கும்.
Maha Samy
மூலிகை டீ: தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் புதினா, துளசி இலைகள் சிறிது, 2 ஏலக்காய், ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றைத் தட்டிச் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.
Sreenithi Alwan
வெற்றிலை டீ: ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் 2 வெற்றிலை, 2 ஏலக்காய், டீத்தூள், நாட்டுச்சர்க்கரை தலா 2 டீஸ்பூன் சேர்த்து, அரை டம்ளராகக் கொதிக்கவைத்து, வடிகட்டி, பால் சேர்த்து ருசிக்கவும்.