கட்டுரைகள்
Published:Updated:

நாக்கை வசியப்படுத்தும் நாகர்கோவில் மேஜிக்... ராமலட்சுமி ஸ்டால், நேந்திரம் சிப்ஸ்!

நேந்திரம் சிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
நேந்திரம் சிப்ஸ்!

வெளியூர்க்காரங்க வடசேரி பஸ் ஸ்டாண்டுல இறங்கி நல்ல சிப்ஸ் எங்க கிடைக்கும்னு கேட்டா, அங்க உள்ளவங்க எங்க கடையைக் காட்டி விடுவாங்க

நேந்திரம் சிப்ஸ் என்றதுமே நமக்கெல்லாம் கேரளாதான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், அறுபது ஆண்டுகளாக நேந்திரம் சிப்ஸுக்கு பேர் வாங்கிவைத்திருக்கிறது ராமலட்சுமி ஸ்வீட் ஸ்டால்! அதே நேந்திரம் சிப்ஸ்தான்... ஆனால், பொரிக்கிறது வேற லெவல். சுவை... வெறி லெவல்!

நாகர்கோவில், மணிமேடை அருகே 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் ராமலட்சுமி சுவீட்ஸில் சுடச்சுடக் கிடைக்கும் நேந்திரம் சிப்ஸ், உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பிரபலம். தங்கக்காசுகள் போன்று மின்னும் பொன்னிற சிப்ஸின் வாசனையே சுண்டி இழுக்கும். வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அதிக அளவில் ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு செல்கின்றனர். 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமலெட்சுமி சுவிட்ஸில் தயாராகும் மொறுமொறு நேந்திரம் சிப்ஸ் சற்று காரம், மிதமான உப்பு, லேசான இனிப்பு என மூன்று சுவைகளின் சங்கமத்தில், சாப்பிட்ட பிறகும் எச்சில் ஊற வைக்கும். ராமலெட்சுமி ஸ்வீட்ஸ்-க்கு ஒரு மதியவேளையில் விசிட்டடித்தோம்.

ராமலட்சுமி ஸ்டால், நேந்திரம் சிப்ஸ்!
ராமலட்சுமி ஸ்டால், நேந்திரம் சிப்ஸ்!

வாடிக்கையாளர்களுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கொடுத்துக்கொண்டிருந்த கடை உரிமையாளர்களில் ஒருவரான ஐயப்பன் நம்மை அழைத்துக்கொண்டு பக்கத்துத் தெருவில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் இடத்தைச் சுற்றிக்காட்டினார். அங்கு பணிபுரியும் பெண்கள் நேந்திரம் வாழைக்காயின் தோலை உரித்துக்கொண்டிருந்தனர். உரித்த காயை சீவி எண்ணெயில் போட்டுப் பக்குவமாகப் பொரித்து எடுக்கும் பணியில் இரண்டுபேர் ஈடுபட்டிருந்தனர். பொரித்து, கூடையில் வைக்கப்படிருந்த சிப்ஸில் எண்ணெய் வடிந்தபிறகு ஓலைப்பாயில் ஆறவிட்டு, மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி என சுவைக்கான மசாலாக்களைக் கலந்து பக்குவமாக பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டிருந்தனர்.

ராமலட்சுமி ஸ்டால், நேந்திரம் சிப்ஸ்!
ராமலட்சுமி ஸ்டால், நேந்திரம் சிப்ஸ்!

சிப்ஸ் தயாரிப்பதைப் பார்வையிட்டபடியே ஐயப்பன் நம்மிடம் பேசினார், ‘‘எங்க அப்பா ராமசுப்பையாதான் எங்க அம்மா பெயரான ராமலெட்சுமி பெயரில் 1960-ம் வருஷம் இந்த பேக்கரியைத் தொடங்கினார். அப்பா இறந்த பிறகு, நாங்க சகோதர்கள் சேர்ந்து கடையை நடத்திட்டு வர்றோம். எங்க கடையில இனிப்பு, காரம்னு எல்லாம் இருந்தாலும் நேந்திரம் சிப்ஸ்தான் பேமஸ். அன்னன்னைக்குப் போடுற சிப்ஸ் அன்னனைக்கே வித்துத் தீந்திரும். காலையில சுவீட் காரம் தயாரிச்சுட்டு மதியத்துக்கு மேல சிப்ஸ் போடுவோம். எங்க அப்பா காலத்தில இருந்தே தரமா கொடுக்கிறதனால வெளி மாநிலங்களில இருந்துகூட வந்து வங்கிட்டுப் போறாங்க'' என்றவர், சிப்ஸ் தயாரிக்கும் முறையை விவரித்தார்.

‘‘சிப்ஸ் தயாரிக்கிறதுல வாழைக்காய், மசாலா, எண்ணெய் மூன்றிலும் ரொம்ப கவனமா இருப்போம். கன்னியாகுமரி மாவட்ட மண்ணில் விளையும் நேந்திரம் காய்கள் மாவுத்தன்மையோட நல்ல சுவை மிக்கதா இருக்கும். வெளியூர் காய்களில் இந்தப் பக்குவம் வராது. நாங்க நேந்திரம் காயை மார்க்கெட்டில் வாங்குவதில்லை. வாழைத் தோட்டத்துக்கு நேரடியாக போய் வாங்குவோம். விலை கூடுதலாக இருந்தாலும் வாழைக்காய் எல்லாம் நல்ல தரமான, மொரட்டுக் காயாத்தான் எடுப்போம்.

வாழைக்காய்
வாழைக்காய்

வாழைக்காயை உரிச்ச உடனே ஈரநயப்பு இருக்கும். அதனால கொஞ்சநேரம் ஈரத்தை வாடப்போடுவோம். அப்பத்தான் கையில் பிடிச்சு சீவுறதுக்கு வழுக்காம இருக்கும். நிறையபேரு மெஷின் வச்சுச் சீவுறாங்க. ஆனா நாங்க இன்னமும் கையாலதான் சீவுறோம். மெஷின் வேகவேகமா சீவிடும். அதனால, சட்டியில வேகாம இருந்தாலும் உடனே உடனே எடுத்திருவாங்க. கைவச்சு சீவும்போது பக்குவமா வெந்த பிறகுதான் அடுத்தது சீவுவாங்க. காயை ஒரு நாள் வச்சிருந்தாலும் லேசா பழுத்திரும். அதனால அன்னன்னைக்கு வரும் காயை உடனே சிப்ஸுக்குப் பயன்படுத்துவோம். அதனாலதான சிப்ஸ் மஞ்சள் நிறத்தில் வரும். சில இடங்களில சாதாரண காய்ல போட்டுட்டு, நிறத்துக்காக மஞ்சள் பொடி தூவுவாங்க. எங்க கடையில இயற்கையாகவே சிப்ஸ் மஞ்சள் நிறத்திலதான் இருக்கும். எண்ணெய்ல பொரிச்சு எடுத்து உடனே மசாலாப் பொடிகளைப் போட்டா, அந்தப் பொடி எண்ணெயில் ஒரே பகுதியில ஒட்டிக்கும். அதனால பொரிச்சு பாயில ஆறப்போட்டு, பிறகுதான் பொடிகளைத் தூவுவோம். அப்பதான் சிப்ஸ்ல எல்லாப் பகுதியிலும் சமமா மசாலாப்பொடி கலந்து விழும். சின்னதா இருக்குற சிப்ஸ், உடைஞ்ச சிப்ஸ் எல்லாத்தையும் ஒதுக்கிடுவோம். பெரிய சிப்ஸ்களை மட்டும்தான் விற்பனை செய்வோம்'' என்கிறார் ஐயப்பன்.

மசாலாக்களைப் பொடிகளாக வாங்காமல், மிளகாய்போன்றவற்றை வாங்கிப் பொடித்துப் பயன்படுத்துவது இவர்களுடைய சிப்ஸுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கிறது. இதைப் பற்றிக் கூடுதல் பெருமையுடன் பகிர்ந்தார் ஐயப்பன். ‘‘நாங்க சிப்ஸ் தயாரிக்க தரமான கடலை எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்துறோம். சிலர் பாமாயில் பயன்படுத்துவாங்க. கடலை எண்ணெய் டின் 3,300 ரூபாய் ஆகுது. பாமாயில் 1,800 ரூபாய்க்குக் கிடைக்குது. நாங்க கடலை எண்ணெயில் போடுறதனாலதான் எங்க சிப்ஸ் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். சில வாடிக்கையாளர்கள் ரெண்டு மாதம் வைத்திருந்தாலும் கெடாமல் இருக்கறதா சொல்றாங்க. எங்க அப்பா காலத்தில் இருந்தே தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இருக்கறதாலதான் வாடிக்கையாளர்கள் எங்களை நாடி வர்றாங்க.

ராமலட்சுமி ஸ்டால், நேந்திரம் சிப்ஸ்!
ராமலட்சுமி ஸ்டால், நேந்திரம் சிப்ஸ்!

வத்தல் பொடி, நல்ல மிளகு பொடி ஐட்டங்கள் வேற இடங்களில் பாக்கெட் பொடியாகவே வாங்கிப் பயன்படுத்துவாங்க. நாங்க உப்பு வாங்கி வறுத்து பொடிப்போம், நல்ல மிளகு, வத்தல் எல்லாம் வாங்கி காயப்போட்டு நாங்களாகவே பொடித்துப் பயன்படுத்துவோம். அதனாலதான் எங்க கடை சிப்ஸ் தனி டேஸ்டா இருக்கு. அறுபது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்ததோ அதுபோல இப்பவும் இருக்கு. அப்பா காலத்தில இருந்து ஒரே கடையிலதான் பலசரக்கு சாமானமும், எண்ணெயும் வாங்குறோம். வேற பலகாரங்கள் செய்ய மதுரையிலிருந்து மாவு எடுப்போம், கடலையை திண்டுக்கல்லில் இருந்து எடுப்போம்'' என்ற ஐயப்பன், தொடர்ந்தார்.

ராமலட்சுமி ஸ்டால்
ராமலட்சுமி ஸ்டால்

‘‘நாங்க சிப்ஸ் வெளிநாடுகளுக்கு அனுப்புறதில்லை. எங்க கடையில் இருந்து வாடிக்கையாளர்கள்தான் வாங்கி, சவுதி அரேபியா, அமெரிக்க நாடுகளில உள்ள சொந்தகாரங்களுக்கு அனுப்பிவைக்கிறாங்க. சிலர் வெளிநாட்டுக்குப் போறதுக்கு மூணு நாளுக்கு முன்னாடியே ஆர்டர்பண்ணி வாங்கிட்டுப் போவாங்க. மற்ற கடைகள்ல கிலோ சிப்ஸ் 280, 300 ரூபாய்க்கு விக்கிறாங்க. நாங்க தரமா கொடுக்கிறதனால கிலோ 400 ரூபாய்க்கு விற்கிறோம்.

வெளியூர்க்காரங்க வடசேரி பஸ் ஸ்டாண்டுல இறங்கி நல்ல சிப்ஸ் எங்க கிடைக்கும்னு கேட்டா, அங்க உள்ளவங்க எங்க கடையைக் காட்டி விடுவாங்க. கடைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை. மற்ற நாள்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் பரபரன்னு விற்பனை நடக்கும்" என்று சொல்லிவிட்டு, கடையை நோக்கி விறுவிறு நடையைப் போட்டார் ஐயப்பன்!