கட்டுரைகள்
Published:Updated:

வாரே வாவ்... ரவா தோசை!

ரவா தோசை
பிரீமியம் ஸ்டோரி
News
ரவா தோசை

நாக்கில் சுவை வார்க்கும்‘கரூர் நாராயணன் ரவா தோசைக் கடை’!

திருநெல்வேலின்னா அல்வா, மணப்பாறைன்னா முறுக்கு, காராசேவ்னா சாத்தூர்னு இந்த ஊர்களையே எத்தனை தரம் சொல்றது… இன்னொரு ஊர் பத்திச் சொல்வோமா..?

“ரவா தோசைன்னா கரூர்!”

ஆமாங்க! உங்க ஊர் எங்க ஊர் ரவா தோசை இல்லை… நாம இதுவரை சாப்பிட்ட ரவா தோசைகளையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற தோசை இது. ஒரு தபா சாப்பிட்டா, அடிமை சாஸனத்தை நம்ம நாக்கு தானா எழுதிக்கொடுத்துட்டு வரும்… அப்படி ஒரு டேஸ்ட்!

இப்படி டேஸ்ட்டி ரவா தோசையை நமக்குக் கொடுக்கணும்ங்கறதுக்காகவே உருவானது போல கரூரில் நம் முன் நிற்கிறது ‘நாராயணன் ரவா தோசைக் கடை!’ கடந்த 43 வருஷங்களா இந்தப் பக்கமா போற வர்றவங்களை தன் டேஸ்ட்டி ‘ர.தோ’-யால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

வாரே வாவ்... ரவா தோசை!

கரூர் மாநகராட்சியில் உள்ள அஞ்சு ரோடு பகுதியில் இந்த ஹோட்டல் இருக்கிறது. பத்துக்குப் பத்து என்ற சின்ன இடம்தான்... ஊரே மணக்க தோசை ரெடி ஆகிறது. கடையை ஆரம்பித்த நாராயணன், 83 வயதிலும் கடையில் அமர்ந்து கொண்டு, அப்படிச் செய், இப்படிச் செய் என்று மாஸ்டரும் தன் மகனுமான திருவேங்கடத்தை வேலை வாங்கிக் கொண்டிருந்தார். நாராயணனிடம் பேசினோம்.

“பூர்வீகமே எங்களுக்குக் கரூர்தான். என்னோடு பொறந்தது நாலு பேர். வறுமை, சோத்துக்கே வழியில்லாத நிலைமை. அதனால், சின்ன வயதிலேயே ஹோட்டல்கள்ல வேலை பார்த்தேன். அதன்பிறகு, 20 வருஷம் பஜார்ல 24 மணி நேர டீக்கடை வச்சு நடத்தினேன். அடுத்து, 3 வருஷம் வாடகை சைக்கிள் கடை, ஒரு வருஷம் பாய் வியாபாரம்னு நான் பார்க்காத தொழில் இல்லை. இதுக்கிடையில், திருமணம் ஆகி ஏழு பிள்ளைகள் பொறந்தாங்க. நிலையா ஒரு தொழில் இல்லை. அப்பதான், முதன்முதலில் நான் பார்த்த ஹோட்டல் வேலை கைகொடுத்துச்சு. 1979-ல கச்சேரி பிள்ளையார் கோயில்கிட்ட டிபன் கடை ஆரம்பிச்சேன். ஹோட்டலுக்குப் பேரெல்லாம் கிடையாது. எல்லா டிபனும் போட்டோம். ஆனால், ‘உங்க கடை ரவா தோசை சூப்பரா இருக்கு’ன்னு கஸ்டமர்கள் சொன்னாங்க. அது முதல், ‘நாராயணன் ரவா தோசைக் கடை’ன்னு பேமஸாச்சு. என் பையனும் எனக்கு ஆரம்பத்திலேயே ஒத்தாசைக்கு வந்துட்டான். 7 வருஷம் அங்க நடத்தினோம். அதன்பிறகு, 34 வருஷம் மாவுடையான்கோயில் தெருத் தென்புறம் நடத்தினோம். கொரோனா வந்தபிறகு, இரண்டு வருஷமா இந்த 5 ரோடு பகுதியில் நடத்துறோம்” என்றார்.

“எனக்கு ரவா தோசை கைப்பக்குவம் இயல்பா வந்துச்சு. திடமான பச்சரிசி மாவு, ரவா, சீரகம், மிளகு, சிறுசிறு சைஸில் நறுக்கப்பட்ட தேங்காய்ச் சில்லுகள், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, முந்திரி, தோசை உடையாம இருக்க லேசா மைதா மாவுன்னு இவைதான் ரவா தோசைக்குத் தேவையான பொருள்கள். இவற்றை எந்த விகிதத்தில் கலந்து கலக்கி, மாவாக்கி தோசை வார்க்குறோம்ங் கிறதுலதான் ரவா தோசையின் அதி ருசி இருக்குது. அந்த வரத்தை எனக்கு மட்டுமல்ல, என் மகனுக்கும் இறைவன் கொடுத்திருக்கார். இடத்தை மாத்தினாலும் எங்க கடை தோசை ருசிக்காக, தேடி வந்து சாப்பிடறாங்க... சுத்துப்பட்டு 20 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற அத்தனை ஊரைச் சேர்ந்தவங்களும் எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள்” என்றார் நாராயணன்.

நாராயணன் - திருவேங்கடம்
நாராயணன் - திருவேங்கடம்

தொடர்ந்து, அவர் மகன் திருவேங்கடம், “மாலை ஆறரை மணி தொடங்கி இரவு 11 மணி வரைதான் கடை. ரவா தோசை, இட்லி, சாதா தோசை, ரோஸ்ட், ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், பொடி தோசை, நெய் தோசை, பரோட்டா, வீச்சு, பன் பரோட்டா, முட்டைப் பொரியல்னு பல டிபன்களைத் தருகிறோம். வெள்ளைக்குருமா, சாம்பார், தேங்காய்ச்சட்னி, கொத்தமல்லி, வெங்காயம்னு பல சட்னிகளைத் தருகிறோம். இதில் ரவா தோசைதான் எங்களுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த ஐட்டம். இரண்டு வருஷத்துக்கு முன்புதான் கடைக்குப் பெயர்ப்பலகை வைத்தோம். இங்கு சாப்பிடுறவங்களே எங்களுக்கு மத்தவங்ககிட்ட விளம்பரம் பண்றவங்க, வழிகாட்டுறவங்க. இதுல, ரவா தோசை மட்டுமல்லாம, முட்டைப்பொரியலும், வெள்ளைக்குருமாவும் பேமஸ். வெள்ளைக்குருமா எங்கம்மா நாச்சியம்மாள் தந்த கைப்பக்குவம். கரூர்ல நாங்களும், மாரியம்மன்கோயில் பக்கத்துல உள்ள ஒரு ஹோட்டலும்தான் அறிமுகப்படுத்தினோம்.

தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டைக் கொதிக்கவிட்டு, அதுல உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், தக்காளியை சிறுசிறு துண்டாக நறுக்கிப் போட்டுக் கொதிக்க விட்டு இறக்கணும். இந்த வெள்ளைக்குருமா பரோட்டாவுக்கும், ரவா தோசைக்கும் அம்சமா இருக்கும். கஸ்டமர்கள் சொல்ற சிறுசிறு குறைகளைக் கேட்டு, உடனே சரி பண்ணிக்குவேன். இன்னமும் விறகு அடுப்புதான். அதனால்தான், எங்க தொழிலை இத்தனை வருஷம் கஸ்டமர்களே எடுத்துட்டு வந்திருக்காங்க” என்று முடித்தார்.

இலையில் இருந்த ரவா தோசையை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த மருதநாயகம் என்பவரிடம் பேசினோம்.

மருதநாயகம்
மருதநாயகம்

“எனக்குச் சொந்த ஊர் இதே கரூர்தான். நான் சொந்தமா பைப் கடை வைத்திருக்கிறேன். ‘உன்பாட்டுக்கு பாண்டிய நாடே அடிமை’ன்னு ‘திருவிளையாடல்’ டயலாக் மாதிரி, இந்தக் கடையோட ரவா தோசை ருசிக்கு, நான் கடந்த 10 வருஷமா அடிமையோ அடிமை. எதேச்சையாதான் சாப்பிட வந்து ரவா தோசை சாப்பிட்டேன். அல்வா மாதிரி தொண்டைக்குள் இறங்கிய அதோட ருசி, என்னைச் சொக்க வைத்தது. அதிலிருந்து தொடர்ந்து இந்த ஹோட்டல்லதான் இரவு டிபன் சாப்பிடுறேன். கடந்த பத்து வருஷமா வேற எந்தக் கடையிலும் நான் இரவு டிபனை சாப்பிட்டதில்லை. அதுவும், கடந்த இரண்டு மாசமா தொடர்ந்து இரவு டிபனை நானும், என் மனைவியும் இந்த ஹோட்டல்லதான் சாப்பிடுறோம். அதேபோல், இந்தக் கடை முட்டைப் பொரியல் சுவை போல தமிழ்நாட்டில் வேற எங்கேயும் கிடைக்குமாங்கறது டவுட்டுதான். இந்த டிபன் கடைக்கு நான் 10-க்கு 9 ரேட்டிங் தருவேன். அந்த ஒண்ணையும் குறைச்சதுக்குக் காரணம் இருக்கு... உடம்புக்கு முடியாமப் போயிட்டுன்னா, அன்னைக்கு டிபன் கடைக்கு லீவு விட்டிருவாங்க. வேற மாஸ்டர் பண்ணுனா இவங்க கைப்பக்குவம் வராதுன்னு அன்னைக்குக் கடை நடத்த மாட்டாங்க. அவங்க லீவு விடுற நாள்களுக்காகத்தான், ரேட்டிங்கில் ஒண்ணைக் குறைச்சேன். இல்லைன்னா, நாராயணன் ரவா தோசைக் கடைக்குப் பத்துக்குப் பத்துதான் என் ரேட்டிங்!” என்றார், ரவா தோசையைச் சிலாகித்துச் சாப்பிட்டபடி.

என்ன, இனி கரூர் பக்கம் டூர் போனா, அஞ்சு ரோடு நாராயணன் கடை மிஸ் ஆகாதுபோல!