Published:Updated:

காரஞ்சாரமான கறுஞ்சுக்கா | `செம' வீட்டுக் கோழிக் குழம்பு - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes

கறுஞ்சுக்கா
கறுஞ்சுக்கா

வேலை நேரத்தில் கேன்ட்டீனிலும், வீட்டுக்கு வந்த பிறகு ஆன்லைனிலும் ஆர்டர் செய்து வார நாள்களைக் கடத்தியாகிவிட்டது. `நாக்கு செத்துப் போச்சு... லீவு நாள்லயாவது காரஞ்சாரமா வீட்டுலயே சூப்பரா சமைச்சு சாப்பிடணும்' என நினைக்கிறீர்கள்தானே...

அறுசுவையில் ஐம்புலன்களுக்கும் விருந்து வைக்கும் வகையில் உங்கள் வீக் எண்டுக்கு சமைத்து ருசி பார்க்க அசத்தலான அசைவ ரெசிபிக்களின் செய்முறை இங்கே...

கறுஞ்சுக்கா
கறுஞ்சுக்கா
கறுஞ்சுக்கா

தேவையானவை:

மட்டன் - ஒரு கிலோ,

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,

நீளமாக நறுக்கிய தக்காளி - 1,

நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 250 கிராம்,

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,

மிளகாய்த்தூள் இரண்டரை டீஸ்பூன்,

மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்,

தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

உப்பு தேவையான அளவு,

எலுமிச்சைப்பழம் - 1.

தாளிக்க:

எண்ணெய் - சிறிது,

கடுகு கால் டீஸ்பூன்,

உளுந்து கால் டீஸ்பூன்,

வற்றல் மிளகாய் - 1,

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

மட்டனைக் கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு, தேவையான‌ அளவு தண்ணீர், பெரிய‌ வெங்காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு தீயை அதிகப்படுத்தி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்த‌வற்றைப் போட்டுத் தாளித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக சிவக்க வதக்கவும். இதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறி வேக வைத்த மட்டன் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.

தீயை அதிகப்படுத்தி தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டனைச் சுருள வதக்கவும். வதங்கியதும் மிளகுத்தூள், சீரகத்தூள், கொத்தமல்லித்தழை போட்டு கலந்து பரிமாறவும்.

வீட்டுக் கோழிக் குழம்பு
வீட்டுக் கோழிக் குழம்பு
வீட்டுக் கோழிக் குழம்பு

தேவையானவை:

கோழி ஒரு கிலோ,

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 250 கிராம்,

நீளமாக நறுக்கிய தக்காளி அரை கிலோ,

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்,

கெட்டியான தேங்காய்ப்பால் - 100 மில்லி,

உப்பு - தேவையான அளவு,

சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்,

கீறிய‌ பச்சை மிளகாய் - 4,

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்,

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

எண்ணெய் தேவையான அளவு,

பட்டை ஒன்று,

கிராம்பு - 3,

ஏலக்காய் - 2,

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தக்காளி மசியும் அளவுக்கு வதக்கவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு போட்டு நன்கு கலக்கி வைக்கவும். இதை வெந்துகொண்டிருக்கும் தக்காளிக் கலவையோடு சேர்த்து, நுரை கட்டி வரும்போது சிக்கனைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். சிக்கன் வெந்ததும் குழம்பில் சோம்புத்தூள், கரம் மசாலா சேர்த்துக் கிளறி நல்ல வாசனை வரும்போது தேங்காய்ப்பால், கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

அடுத்த கட்டுரைக்கு