Published:Updated:

மட்டன் கோலா வடை | மட்டன் கொத்துக்கறி | மட்டன் பக்கோடா... மட்டன் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீக் எண்ட் ரெசிப்பீஸ்
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

மனதும் வயிறும் நிறைய மட்டனில் விதம் விதமாகச் சமைத்துச் சாப்பிட, வித்தியாசமான மட்டன் ரெசிப்பீஸ் இதோ உங்களுக்காக...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாரத்துக்கு ஒருநாளாவது மட்டன் சாப்பாடு வேண்டும் பெரும்பான்மை மக்களுக்கு. மட்டன் சமையலில் கொழுப்பு கொஞ்சம் தூக்கல் என்றாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு கை பார்க்க நினைப்பார்கள்.

மனதும் வயிறும் நிறைய மட்டனில் விதம் விதமாகச் சமைத்துச் சாப்பிட, வித்தியாசமான மட்டன் ரெசிப்பீஸ் இதோ உங்களுக்காக...

மட்டன் கோலா வடை

தேவையானவை:

கொத்துக்கறி - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 4
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒன்று
பொட்டுக்கடலை - 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாயத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மட்டன் கோலா வடை
மட்டன் கோலா வடை

செய்முறை:

பொட்டுக்கடலை, கசகசாவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இனி மிக்ஸியில் சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல், பட்டை, சோம்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கொத்துக்கறியைச் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கறி விழுதுடன், அரைத்த பொட்டுக்கடலை, கறிவேப்பிலை கசகசாவைச் சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். இதில் தட்டிய கறி உருண்டைகளைச் சேர்த்து சிவக்க பொரித்து எடுத்துப் பரிமாறவும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக சாப்பிடக்கூடிய சுவையான மட்டன் கோலா வடை ரெடி.

மட்டன் பக்கோடா

தேவையானவை:

எலும்பு இல்லாத மட்டன் - கால் கிலோ
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

மட்டன் பக்கோடா
மட்டன் பக்கோடா

செய்முறை:

மட்டனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசிறி வெயிலில் அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தீயை முற்றிலும் குறைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து அது வேகும் வரை எண்ணெயிலேயே பொரிய விட்டு எடுக்கவும். இறுதியாக கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மட்டன் கொத்துக்கறி

தேவையானவை:

கொத்துக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4
மஞ்சள்தூள் - சிறிதளவு
பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்)
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

மட்டன் கொத்துக்கறி
மட்டன் கொத்துக்கறி

செய்முறை:

மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

மட்டன் கொழுப்புக் குழம்பு

தேவையானவை:


மட்டன் நெஞ்செலும்பு, கொழுப்பு, ஈரல், சுவரொட்டி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க:
தேங்காய் - அரை மூடி
சோம்பு - 2 டீஸ்பூன்

மட்டன் கொழுப்புக் குழம்பு
மட்டன் கொழுப்புக் குழம்பு

செய்முறை:

நெஞ்செலும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டியை நன்கு சுத்தம் செய்யவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள நெஞ்செலும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய்-சோம்பு விழுதைச் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இட்லி, தோசை, ஆப்பத்துக்கு சுவையான குழம்பு ரெடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு