Election bannerElection banner
Published:Updated:

ஆனியன் ஃப்ளவர் | இட்லி டிக்கா | பேபி பீட்சா தோசை... வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

Weekend Recipes
Weekend Recipes

ஒரு மாறுதலுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என நினைக்க முடியாத அளவுக்கு எங்கெங்கும் கொரோனா பயம். இன்னிக்கும் அதே மெனுவா என அலுத்துக்கொள்ளும் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க புதுப்புது ரெசிப்பிகளை முயற்சி செய்து பாருங்களேன்...

மீண்டும் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள், கட்டுப்பாடுகள் தீவிரமாகும் பொதுவிடங்கள் என இன்னும் சில நாள்களுக்கு வீட்டுக்குள் அடங்கியிருக்க அறிவுறுத்தியிருக்கிறது கொரோனாவின் இரண்டாம் அலை.

ஒரு மாறுதலுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என நினைக்க முடியாத அளவுக்கு எங்கெங்கும் கொரோனா பயம். இந்நிலையில், இன்னிக்கும் அதே மெனுவா என அலுத்துக்கொள்ளும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க புதுப்புது ரெசிப்பிகளை முயற்சி செய்து பாருங்களேன்...

ஆனியன் ஃப்ளவர்

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 4
மைதா மாவு - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
ஓரிகானோ - ஒரு டீஸ்பூன்
சோளமாவு - அரை கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

ஆனியன் ஃப்ளவர்
ஆனியன் ஃப்ளவர்

செய்முறை:

ஒரு பௌலில் சோள மாவு, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ரவா தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். மற்றொரு பவுலில் மைதா மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பூண்டு விழுது, ஓரிகானோ, உப்பு சேர்த்துக் கிளறி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தின் தோல் நீக்கி, மேலிருந்து கீழாகத் தொடர்ந்து நறுக்கிக் கொள்ளவும். பார்ப்பதற்கு தாமரை இதழ்கள் பிரிந்து இருப்பதுபோல இருக்கும். இதைத் தண்ணீர் கலக்காத மைதா மாவுக் கலவையில் போட்டுப் புரட்டி எடுத்து, பின்னர் கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் முக்கி எடுக்கவும். மீண்டும் இதை தண்ணீர் கலக்காத மைதா மாவில் போட்டு புரட்டி சூடான எண்ணெயில் மெதுவாகச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால், ஆனியன் ஃப்ளவர் ரெடி.

இட்லி டிக்கா

தேவையானவை:

சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லி - ஒரு கப்
சிவப்பு, மஞ்சள், பச்சை நிற குடமிளகாய் - தலா ஒன்று (கியூப் வடிவில் நறுக்கவும்)
ப்ராசஸ்டு சீஸ் - 200 கிராம்
(கியூப் வடிவத்தில் நறுக்கவும்)
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
டூத்பிக் - தேவையான அளவு
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்

இட்லி டிக்கா
இட்லி டிக்கா

செய்முறை:

ஒரு பௌலில் இட்லித் துண்டுகளைச் சேர்த்து அவற்றின் மேல் சோள மாவைத் தூவிக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடியை எல்லா பக்கமும் படுவது போல தூவவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாகக் கிளறி வைக்கவும். இனி டூத்பிக்கில் இட்லி, குடமிளகாய் துண்டுகள், சீஸ் என ஒன்றன் பின் ஒன்றாகச் செருகிப் பரிமாறவும்.

பேபி பீட்சா தோசை

தேவையானவை:

தோசை மாவு - அரை கிலோ
பேபி கார்ன் - அரை கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
மூன்று கலர் குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
துருவிய மொசரெல்லா சீஸ் - சிறிதளவு
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
ஓரிகானோ - ஒரு டீஸ்பூன்

பேபி பீட்சா தோசை
பேபி பீட்சா தோசை

செய்முறை:

பேபி கார்னை வேகவைத்து மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி, சிம்மில் வைக்கவும். ஒரு சின்ன கரண்டி தோசை மாவெடுத்து, உள்ளங்கை அளவிலான ஊத்தப்பமாகத் தோசைக்கல்லில் ஊற்றவும். மாவு வேகும் முன் அதன் மேல் வெங்காயம், பேபி கார்ன் ஸ்லைஸ்கள், குடமிளகாயை வைக்கவும். தோசையைத் திருப்பிப் போட்டு அதைச் சுற்றி ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும். இதை அப்படியே பிளேட்டுக்கு மாற்றவும். இனி தோசையின் மேல் சீஸ் தூவி அது உருகும் நேரத்தில், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோவைச் சேர்க்கவும். இதை 2 நிமிடம் கழித்து லஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விடவும். மதியம், ஆனந்தமாகச் சுவைத்து மகிழ்வார்கள்.

கேக் லாலிபாப்

தேவையானவை:

வெனிலா ஸ்பான்ஜ் கேக் - கால் கிலோ (கேக்கின் ஃபிளேவர் உங்கள் விருப்பப்படி)
டார்க் சாக்லேட் - ஒரு பார்
வொயிட் சாக்லேட் - ஒரு பார்
மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் - 2 டேபிள்ஸ்பூன்
லாலிபாப் ஸ்டிக் அல்லது டூத்பிக் - தேவையான அளவு
அலங்கரிக்க சாக்கோ சிப்ஸ் - 1 டேபிள்ஸ்பூன் (சீரக மிட்டாய், பேப்பர் மிட்டாய் போன்றவற்றைக் கூட உபயோகிக்கலாம்).

கேக் லாலிபாப்
கேக் லாலிபாப்

செய்முறை:

பெரிய பாத்திரத்தில் கேக்கை தூளாக்கிப் போட்டு, இதில் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இனி லாலிபாப் ஸ்டிக்கில் மாவை விரும்பிய சைஸில் உருண்டையாகப் பிடித்து, அரை மணி நேரத்துக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் டார்க் சாக்லேட்டை உடைத்துப் போடவும். இந்தப் பாத்திரத்தைக் கொதிக்கும் தண்ணீரில் வைத்து, சாக்லேட்டை உருக வைக்கவும். இன்னொரு பவுலில் வொயிட் நிற சாக்லேட்டை மேற்கூறிய முறைப்படி உருக்கி வைக்கவும். இனி லாலிபாப்பை, உருக்கிய டார்க் சாக்லேட்டில் முக்கியெடுத்து அலங்கரிக்கக் கொடுத்தவற்றில் புரட்டி எடுக்கவும். மற்றொரு லாலிபாப்பை உருக்கிய வொயிட் சாக்லேட் கலவையில் முக்கியெடுத்து அலங்கரிக்கக் கொடுத்தவற்றில் புரட்டி எடுக்கவும். இப்படி எல்லாவற்றையும் செய்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு