Published:Updated:

ரைஸ் பால்ஸ் | தஹி பிரெட் டிக்கி | மூங் தால் பேல் | தண்ணீர் பக்கோடா- டேஸ்ட்டி வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

தீபாவளிக்குத் திகட்டத் திகட்ட ஸ்வீட்ஸ், காரம் சாப்பிட்டாகிவிட்டது. முதல் வேலையாக எண்ணெய்க்கு தற்காலிக டாட்டா சொல்லிவிட்டு, எண்ணெயே சேர்க்காமல் சமைக்கக்கூடிய சூப்பர் டேஸ்ட்டி ரெசிப்பீஸை இன்னும் சில வாரங்களுக்கு முயற்சி செய்து பார்ப்போமா?

தீபாவளிக்குத் திகட்டத் திகட்ட ஸ்வீட்ஸ், காரம் சாப்பிட்டாகிவிட்டது. எக்குத்தப்பாக எகிறிய எடையை எப்படிக் குறைப்பது என்ற யோசனையில் இருப்பீர்கள் பலரும். முதல் வேலையாக எண்ணெய்க்கு தற்காலிக டாட்டா சொல்லிவிட்டு, எண்ணெயே சேர்க்காமல் சமைக்கக்கூடிய சூப்பர் டேஸ்ட்டி ரெசிப்பீஸை இன்னும் சில வாரங்களுக்கு முயற்சி செய்து பார்ப்போமா?

ரைஸ் பால்ஸ்

தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
கோழி இறைச்சி - 2 கப் (எலும்பு நீக்கி, அரைத்தது)
முட்டையின் வெள்ளைக்கரு - ஒன்று
லைட் சோயா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (ஒன்றிரண்டாகத் தட்டவும்)
பூண்டு - 2 பல் (தட்டவும்)
நறுக்கிய வெங்காயத்தாள் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

ரைஸ் பால்ஸ்
ரைஸ் பால்ஸ்

செய்முறை:
பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரைத்த கோழி, முட்டை வெள்ளைக்கரு, லைட் சோயா சாஸ், சர்க்கரை, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

கோழி இறைச்சிக் கலவையைச் சரிசமமாக எலுமிச்சை வடிவில் உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை ஊறவைத்த அரிசியின் மேல் முழுவதுமாக உருட்டி வைக்கவும். பின்னர் இட்லிப் பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, இட்லித் தட்டு வைத்து, இட்லித் துணியை நனைத்து தட்டின் மேல் வைத்து, தட்டில் உருண்டைகளைக் குழிகளில் வைத்து 30 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

தஹி பிரெட் டிக்கி

தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 8
தண்ணீர் - 2 கப்
புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 5 கப்
சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூரணம் செய்ய:
வேகவைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு - 2
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
முளைகட்டி வேகவைத்த
பச்சைப் பயறு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
இனிப்புச் சட்னி செய்ய:
பேரீச்சம் பழம் - 8
(கொட்டை நீக்கி, நறுக்கவும்)
வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறுப்பு உப்பு - கால் டீஸ்பூன்
கெட்டியான புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை சட்னி செய்ய:
பச்சை மிளகாய் - 10
கொத்தமல்லித்தழை - அரை கப்
புதினா இலை - கால் கப்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைப் பழம் - அரை மூடி
உப்பு - தேவைக்கேற்ப

தஹி பிரெட் டிக்கி
தஹி பிரெட் டிக்கி

செய்முறை:
பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, உப்பு, காரம் சரிபார்த்துப் பிசையவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். தண்ணீரில் உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு பிரெட் துண்டை 5 விநாடிகள் தண்ணீரில் முக்கி எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தண்ணீரை வடிக்கவும். நனைந்த பிரெட்டின் மேல் உருளைக்கிழங்கு பூரணத்தை நடுவில் வைத்து உருண்டை பிடித்து கட்லெட் போன்று தட்டி எடுக்கவும். இதேபோல அனைத்து பிரெட் துண்டுகளையும் உருட்டி, தட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து, இனிப்புச் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 8 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் நன்றாக ஆறவைத்து உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு சரிபார்க்கவும்.

பச்சை சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களில் எலுமிச்சைச் சாறு தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சட்னியைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து இறக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி உப்பு, காரம் சரிபார்க்கவும்.

தயிர் மற்றும் சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அடித்து வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும். பரிமாறுவதற்குச் சற்று முன்பு பிரெட் உருண்டைகளைத் தயிரில் போட்டு பின்னர் அதன் மேல் இனிப்புச் சட்னி, பச்சை சட்னி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூங் தால் பேல்

தேவையானவை:
பாசிப்பருப்பு, துருவிய கேரட், மாதுளை முத்துகள், பெரிய வெங்காயம்
(நறுக்கியது) - தலா அரை கப்
மாங்காய் (நறுக்கியது) - கால் கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு - ஒன்று
(வேகவைத்து, தோலுரித்து, நறுக்கியது)
நறுக்கிய கொத்தமல்லித்தழை,
புதினா - தலா 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெள்ளரிக்காய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

மூங் தால் பேல்
மூங் தால் பேல்

செய்முறை:
பாசிப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரில் உப்பு சேர்த்து, கொதிக்கவைத்து அதில் பருப்பைச் சேர்த்து அரை வேக்காடாக வேகவைக்கவும். பிறகு, நீரை வடிகட்டி, பசிப்பருப்பை எடுத்து ஆறவிடவும். மற்ற அனைத்துப் பொருள்களையும் இதனுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தண்ணீர் பக்கோடா

தேவையானவை:
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஓமம் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு

தண்ணீர் பக்கோடா
தண்ணீர் பக்கோடா

செய்முறை:
தண்ணீரைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் நன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பக்கோடா மாவு பதத்துக்குப் பிசைந்துக்கொள்ளவும். பக்கோடா மாவு பதம் சரியாக உள்ளதா என்று பார்க்க, ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து அதில் மாவைப் போட்டால் மிதக்க வேண்டும். அப்படி மிதந்தால் மாவு தயார். இல்லையென்றால் மாவைச் சிறிது நேரம் ஊறவிடவும்.

பக்கோடா பொரிக்கத் தேவையான அளவு தண்ணீரை வாணலியில் ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். மாவை சிறிய பக்கோடாக்கள் போல் கிள்ளி எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு 5 முதல் 7 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். இதை தக்காளி சாஸ், கார சட்னியுடன் பரிமாறலாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு