
சுதா செல்வகுமார்
நம் வயிற்றை எதைத் தின்றாலும் அரைக்கும் இயந்திரமாக்கிவிட்டோம். எப்போதும் எதையேனும் மென்றுகொண்டே இருக்கிறோம். அல்லது எப்போதும் ‘டயட்’டில் இருக்கிறோம். எதை உண்ணலாம், எது கூடாது, எந்த அளவு உண்ணலாம், ஏன் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்? - ‘இதெல்லாம் என்ன கேள்வி?’ என்கிறீர்களா... இருக்கும் வரை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்க வேண்டுமல்லவா என்பதையும் மனத்தில் நிறுத்துங்கள். நீங்கள் இளம் பருவத்தில் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவும்தான் உங்கள் பிற்கால ‘எனர்ஜி’க்கான ஃபிக்ஸட் டெபாசிட்.

எதைக் கொடுத்தாலும் சமர்த்தாகச் செரிக்கும் வயிற்றுக்கு நாம் செய்யும் நல்லது என்னவாக இருக்கும்? வீட்டில் இருக்கும் பொருள்களால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியம் நிறைந்த உணவுகள்தாம். வயிற்றுக்கு நல்லது செய்யும் உணவுகளுக்கான சிம்பிள் ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுதா செல்வகுமார்.
இஞ்சித் தொக்கு
தேவையானவை:
இஞ்சி - 150 கிராம்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
துருவிய வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் மல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயம் போட்டு சிவக்க வறுத்தெடுத்துப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் மீதி உள்ள கடுகு, மல்லி, சீரகம் தாளித்து, துருவிய இஞ்சியை வதக்கி, புளியைக் கெட்டியாகக் கரைத்து அதில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நன்கு சுருள வந்து எண்ணெய் பிரியும்போது பொடித்து வைத்துள்ள பொடி தூவி, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிட்டு, ஈரம் இல்லாத காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம். நீண்ட நாள்கள் கெடாது. இதை சூடான சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். டிபனுக்கும் சத்தான சைடிஷ்.
சிறப்பு: இஞ்சி அஜீரணத்தைப் போக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
இந்தியாவின் தென்மேற்குக் கரையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் வாசனைப் பொருள் இஞ்சிதான்.
ஓமக்குழம்பு
தேவையானவை:
ஓமம் - 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8 (தோல் உரிக்கவும்)
பூண்டு - 10 பல் (தோல் உரிக்கவும்)
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியை அடுப்பில் மிதமான தீயில்வைத்து ஓமத்தை வறுத்தெடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து, மிளகு, சீரகம் சேர்க்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சித் துருவல், பூண்டு சேர்த்து வதக்கவும். புளிக் கரைசலை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த ஓமம் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். தேவையெனில் வெண்டைக்காய், கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.
சிறப்பு: ஓமக்குழம்பு வயிறு சம்பந்தமான நோயைத் தீர்க்கும். நன்கு பசி எடுக்க வைக்கும். வாயுத் தொல்லை நீக்கும். குளிர் காலத்துக்கேற்ற குழம்பு.
இந்தியா மற்றும் இரான் நாடுகளில்தான் ஓமம் அதிகம் விளைவிக்கப் படுகிறது. நாட்டின் பாதி விளைச்சலைத் தருகிறது ராஜஸ்தான் மாநிலம்.
மூலிகை மிட்டாய்
தேவையானவை:
சுக்குப் பொடி - 3 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
பொடித்த பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்
வால்மிளகுப் பொடி - அரை டீஸ்பூன்
திப்பிலிப் பொடி - அரை டீஸ்பூன்
வெல்லத் துருவல் - கால் கப்
துளசிச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
விருப்பமான வடிவ சிலிகான் சாக்லேட் மோல்டு - ஒன்று

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர்விட்டு கொதி வந்ததும் வெல்லத் துருவல் தவிர மேற்கூறிய பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு கொதிக்கவிடவும். அதாவது, 2 கப் நீர் நன்கு சுண்டி ஒரு கப் ஆக வேண்டும். பிறகு அடுப்பை நிறுத்தவும். அடி கனமான மற்றொரு பாத்திரத்தில் வெல்லத் துருவல், சிறிதளவு நீர்விட்டு திக்காக பாகு காய்ச்சிக்கொள்ளவும் அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும். இதனுடன் மூலிகை நீரைச் சேர்த்துக் கிளறி ஒரு கொதிவந்ததும் நிறுத்தவும். சாக்லேட் மோல்டில் ஊற்றவும். 20 - 25 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு மோல்டிலிருந்து எடுத்து வேண்டும்போது சாப்பிடவும்.
சிறப்பு: தொண்டை கரகரப்பைச் சரி செய்யும்.
அரை டீஸ்பூன் சுக்குப்பொடியை ஒரு கப் வெது வெதுப்பான நீரில் கலந்து, தேன் சேர்த்து தினமும் குடித்தால் உடல் எடை குறையும்.
தூதுவளை திப்பிலி ரசம்
தேவையானவை:
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு
திப்பிலிப் பொடி - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
தக்காளி - ஒன்று
பூண்டு - 2 பல்
மிளகு - அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெறும் வாணலியை அடுப்பில் வைத்து மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஆறவிட்டு பொடித்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி, தூதுவளை இலைகளைப் போட்டு வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வறுத்துப் பொடித்து வைத்த பொடி, திப்பிலிப் பொடி சேர்த்து தீயைக் குறைத்து வைத்து ஒரு கொதிவந்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான, சத்தான ரசம் தயார்.
சிறப்பு: இருமலைப் போக்கும். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சூடாக சூப் மாதிரியும் அருந்தலாம்
பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை தூதுவளை பழத்துக்கு உண்டு.
இஞ்சி சித்தரத்தை மசாலா டீ
தேவையானவை:
பால் - ஒரு கப்
நீர் - 2 கப்
சித்தரத்தைப் பொடி - ஒரு டீஸ்பூன்
சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - கால் அங்குலத் துண்டு
பட்டைப் பொடி - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
டீத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 2
நாட்டுச் சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதி வந்ததும் டீத்தூள், நசுக்கிய இஞ்சி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கிராம்பு, பட்டைப் பொடி, மிளகு, சுக்குப் பொடி, சித்தரத்தைப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். பால் பொங்கியதும் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து இஞ்சி சித்தரத்தை மசாலா டீயை அதில் ஊற்றி ஒரு கொதிவந்ததும் இறக்கிப் பருகவும்.
சிறப்பு: நெஞ்சில் உள்ள கபத்தை வெளி யேற்றும் திறன்மிக்கது சித்தரத்தை. இந்த டீ சளி, பித்தத்தைக் குணப்படுத்தும்.
இருமல் ஏற்படும்போது சிறிய துண்டு சித்தரத்தையை வாயில்போட்டு மென்மையாகச் சுவைத்தால் இருமல் நின்றுவிடும்.
கறிவேப்பிலை மிளகுத் துவையல்
தேவையானவை:
கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - 2 கப்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5 (தோல் உரிக்கவும்)
கேரட் - ஒன்று (தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் - ஒன்று
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
முழு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அலசிய கறிவேப்பிலையை ஈரம் போக உலர்த்தி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகு, காய்ந்த மிளகாய், உளுந்து சேர்த்துக் கிளறி கேரட், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும். இதை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து, உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். சிறு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து துவையலில் சேர்க்கவும். இதை பிரெட் நடுவில் தடவி சாப்பிடலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்தும், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்,
கறிவேப்பிலை செடியில் காணப்படும் சின்னமால் டிஹைடு என்ற கரிமப்பொருள் இரும்பிலிருந்து துருவை அகற்றக்கூடியது.
வெற்றிலை சுக்கு சூப்
தேவையானவை:
வெற்றிலை - 6
சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
மிளகு - சீரகப் பொடி
(சேர்ந்தது) - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - ஒன்று
சின்ன வெங்காயத் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெஜிடபிள் ஸ்டாக் - ஒரு கப்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
விருப்பமான காய்கறிகளை வேகவிட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இதற்குப் பெயர் வெஜிடபிள் ஸ்டாக். வெற்றிலை, பூண்டு, தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு துருவிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்துவைத்துள்ள வெற்றிலை - பூண்டு - தக்காளிச் சாற்றைச் சேர்த்து உப்பு போட்டு வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் சுக்குப் பொடி சேர்த்து, இறக்கி வைக்கும்போது மிளகு - சீரகப் பொடி தூவி மீதமுள்ள வெண்ணெய் சேர்த்து இறக்கவும். சூப் பவுலுக்கு மாற்றி சூடாகப் பருகவும்.
சிறப்பு: சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
குட்கா சுவைப்பதால் வெற்றிலையின் பயன்பாடு இந்தியாவில் 65% குறைந்துள்ளது.
ஓமவள்ளி துளசி பக்கோடா
தேவையானவை:
ஓமவள்ளி (கற்பூரவள்ளி) இலைகள் -
கால் கப் (துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
துளசி - 15 இலைகள்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) - அரை கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு - 2 பல் (தட்டிக்கொள்ளவும்)
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் தவிர மேற்கூறிய பொருள்களைப் போட்டு சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்த பக்கோடா மாவைக் கிள்ளிக் கிள்ளி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து, திருப்பிபோட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சிறப்பு: வறட்டு இருமல், சைனஸ் தொந்தரவை நீக்கும். சுவாசப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ஓமவள்ளியில் 30% உள்ள கார்வக்ரோல் என்ற கரிமப்பொருள் டெகிலா எடுக்கப் பயன்படும் நீல அகேவ் செடியிலும் உள்ளது.
திப்பிலி அரிசிக் கஞ்சி
தேவையானவை:
புழுங்கல் அரிசி குருணை - ஒரு கப்
கறுப்பு உளுந்து (உடைத்தது) - அரை கப்
பனைவெல்லப் பாகு - அரை கப்
ஏலக்காய் - 2
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
திப்பிலிப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீர்விட்டு கொதிவந்ததும் அரிசி, கறுப்பு உளுந்தைப் போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து திப்பிலிப் பொடி சேர்த்து, பனைவெல்லப் பாகு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, ஏலக்காயைத் தட்டிப் போட்டு சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
சிறப்பு: காய்ச்சலைப் போக்கும். நெஞ்சு சளி கரைக்கும். உடல்வலி தீர்க்கும். புத்துணர்ச்சி தரும்.
இந்தியாவி லிருந்து கிரேக்கத்துக்கு ஏற்றுமதியான திப்பிலியை மருந்து என்றே கி.மு 4-ம் நூற்றாண்டில் ஹிப்போகிரேட்ஸ் குறிப்பிடுகிறார்.
மூலிகைப் பொடி
தேவையானவை:
தூதுவளை இலை (அலசி ஆய்ந்தது) - கால் கப்
துளசி (அலசி ஆய்ந்தது) - கால் கப்
ஆடாதோடை இலை (அலசி ஆய்ந்தது - 10
முசுமுசுக்கை இலை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
திப்பிலிப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டைப் பொடி - அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 3

செய்முறை: மேற்கூறிய அனைத்து இலைகளையும் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் இவற்றுடன் மற்ற பொருள்களையும் போட்டு மைய அரைத்து எடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும், மூலிகைப் பொடி தயார். இதை வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் போட்டுக் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகவும்.
சிறப்பு: இருமல், தலைபாரம் சரியாகும். இதைக் காற்றுபுகாத டப்பாவில் வைத்து நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம்
துளசிச் செடியிலிருந்து எடுக்கப்படும் யூஜனால் என்ற கரிமப்பொருள் கொண்ட ‘எசென்ஷியல் ஆயில்’ கிருமி நாசினியாகப் பயன்படுத்தப் படுகிறது.