கட்டுரைகள்
Published:Updated:

சந்திரகலா... சூர்யகலா... இனிக்கும் இரட்டையர்கள்!

சந்திரகலா... சூர்யகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திரகலா... சூர்யகலா

உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகேயுள்ள ஆத்ரஸ் என்ற சிறிய ஊர்தான் எங்களோட பூர்வீக கிராமம். ஆத்ரஸ் என்றால் ‘கைமணம்' என்று பொருள்

`சந்திரகலா’, `சூர்யகலா’ என்ற இரண்டு பெயர்களைக் கேட்டதும் ஏதோ ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளின் பெயரோ என நினைத்து நாம் ‘ஸ்வீட் நேம்ஸ்..!’ என்போம். ஆனால், உண்மையிலேயே அவை ஸ்வீட் நேம்ஸ்தான் என்று சொன்னால் ஆச்சர்யம்தான் இல்லையா?!

யெஸ்! தஞ்சாவூரில், `பாம்பே ஸ்வீட்ஸ்’ என்றாலே ‘சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட்ஸ்' என்கிற அளவுக்குப் பிரபலமான ஒரு டிஷ் இது! வாங்க, இனிக்க இனிக்க விவரங்களைப் பார்ப்போம்...

கலைகளுக்கு மட்டுமல்ல, கை மணக்கும் சமையலுக்கும் பெயர் பெற்றது தஞ்சாவூர். தலைவாழை இலையில் உணவு பரிமாறி, விருந்து உபசரிக்கும் பண்பாட்டுச் சிறப்பைக்கொண்ட ஊர். பெரிய கோயில், தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தட்டு என்று தஞ்சாவூரில் அடையாளங்களைச் சொல்லும் பட்டியலில் புதுச் சேர்க்கையாக, ‘சந்திரகலா சூர்யகலா ஸ்வீட்ஸ்' இடம்பிடித்திருக்கிறது.

சந்திரகலா - சூர்யகலா
சந்திரகலா - சூர்யகலா

`தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸு’க்குள் நுழைந்தால், நிஜமாகவே வட மாநிலத்துக் கடை எதிலோ நுழைந்துவிட்டோமோ என மிரளவைக்கிறது கடை. தோடா பர்பி, மக்கன் பேடா, கேவர், பிஸ்தா லாஞ்ச், மத்துரா பேடா என வட மாநிலத்தவர்கள் விரும்பிச் சாப்பிடும் அனைத்து வகை ஸ்வீட்களையும் அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலர் கலராக, அழகாக, நூற்றுக்கணக்கான ஸ்வீட்ஸ் அங்கே இருந்தாலும் தனிப்பட்ட அடையாளமாக இருப்பது இந்த சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட்ஸ்தான். பிரத்யேக கைப்பக்குவத்துடன் இந்த ஸ்வீட் செய்யப்படுவதால், இதைச் சப்புக்கொட்டி சாப்பிடவே ஒரு தனி ‘ருசிகர்’ கூட்டத்தைச் சம்பாதித்துவைத்திருக்கிறது இந்தக் கடை.

சந்திரகலா, சூர்யகலா உருவான கதை, அதன் செயல்முறை குறித்துத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் தலைக்குள் ஏற, கிச்சனில் சந்திரகலா தயாரிப்பில், பிஸியாக இருந்த பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுப்ரமணிய சர்மாவிடம் பேசினோம்...

சுப்ரமணிய சர்மா
சுப்ரமணிய சர்மா

‘‘உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகேயுள்ள ஆத்ரஸ் என்ற சிறிய ஊர்தான் எங்களோட பூர்வீக கிராமம். ஆத்ரஸ் என்றால் ‘கைமணம்' என்று பொருள். என்னோட அப்பா குருதயாள் சர்மா 1947-ல் தஞ்சாவூருக்கு வந்தவர். ரயிலடியில் `பாம்பே ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் சின்னதாக ஒரு கடையைத் திறந்தார். `மக்களைக் கவர புதுசா ஏதாவது செய்ய வேண்டும்’ என நினைத்தார். நம்மைத் தாங்கும் பூமியில் சூரியன், சந்திரன் இரண்டும் உலகத்தை இணைக்கக்கூடியவை. அந்தப் பெயரில், அந்த வடிவில் புதிதாக ஸ்வீட் செய்ய நினைத்தார். உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை சமயத்தில் செய்யப்படுகிற டிஷ் ஒன்றை அடிப்படையாக வைத்து முதலில் `சந்திரகலா’ என்ற இனிப்பை உருவாக்கினார்.

சந்திரகலா... சூர்யகலா... இனிக்கும் இரட்டையர்கள்!

அதுவரை அந்தச் சுவைக்குப் பழக்கப்படாத தஞ்சாவூர் மக்கள் புதுமையாகச் செய்யப்பட்ட சந்திரகலாவை ஏற்றுக்கொண்டதுடன், அதன் சுவையில் சொக்கிப்போனார்கள். அதைத் தொடர்ந்து அதே முறையில் சூர்யகலாவை உருவாக்கினார். `சந்திரகலா, சூர்யகலா இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். இன்று இவை எல்லோருக்கும் பிடித்த செல்ல ‘ஸ்வீட்டி' பிள்ளைகள்’’ என்றவர், இதைச் செய்ய என்னென்ன தேவை, எப்படிச் செய்வது போன்ற விஷயங்களையும் சொன்னார்...

தேவையான பொருள்கள்: பால், மைதா, நெய், சர்க்கரை, எண்ணெய், குங்குமப்பூ, ஏலக்காய்.

எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்...

பெரிய சட்டியில் தரமான பாலை ஊற்றி, சுண்டுகிற வரை நன்கு காய்ச்ச வேண்டும். அதில் தேவையான அளவு குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றைத் தூளாக்கிச் சேர்த்துக் கிளறினால், மசாலா என சொல்லப்படுகிற கோவா ரெடி.

சந்திரகலா... சூர்யகலா... இனிக்கும் இரட்டையர்கள்!

மைதாவில் நெய், தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் அப்பள வடிவில் மெல்லியதாகத் தேய்க்க வேண்டும். அதன் நடுப்பகுதியில் கோவாவைவைத்து, சந்திரனின் பாதி வடிவில் மடக்கி, கையாலேயே ஓரங்களை பூ டிசைனில் பின்னி, உள்ளே இருக்கும் மசாலா வெளியே வராதபடி லாக் செய்ய வேண்டும். பிறகு, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் அதில் போட்டு வேகவைத்து, பொன்னிறமாக மாறிய பிறகு எடுக்க வேண்டும்.

சர்க்கரையைத் தண்ணீர் ஊற்றி, பாகாகக் காய்ச்சி, பெரிய டிரேயில் ஊற்றி, அதில் பொரித்த சந்திரகலாவை ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு தனியாக எடுத்து, சர்க்கரைப் பாகு வடியும் வரை வைத்திருந்து எடுத்தால் சந்திரகலா ரெடி.

இதே முறையில் சூரியன் வடிவில் வட்ட டிசைனில் சூர்யகலா செய்ய வேண்டும். கை மணத்துடன், துல்லிய வடிவில் செய்வதற்காக, அச்சு பயன்படுத்தாமல் கையிலேயே செய்கிறோம். அதனால் பார்ப்பதற்கு அழகாக, சுவையாக சந்திரகலா, சூர்யகலா இருக்கின்றன. தஞ்சாவூரின் அடையாளமாகவும் இடம்பிடித்திருக்கின்றன.