Published:Updated:

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்
பிரீமியம் ஸ்டோரி
சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

தொகுப்பு - படங்கள்: முத்துலெட்சுமி மாதவகிருஷ்ணன்

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

தொகுப்பு - படங்கள்: முத்துலெட்சுமி மாதவகிருஷ்ணன்

Published:Updated:
சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்
பிரீமியம் ஸ்டோரி
சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்
சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரைக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. சித்ரா பௌர்ணமி, ராம நவமி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்கள் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபட்டு, அந்த வருடத்துக்கான பஞ்சாங்கத்தை வாசிப்பது வழக்கம்.

நம் முன்னோர்கள் சித்திரை மாதம் முதல் நாளில் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும்விதமாக அறுசுவையும் கலந்த உணவுகள் செய்வது வழக்கம். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என அறுசுவை உணவுகளைச் சமைப்பார்கள்.

 முத்துலெட்சுமி மாதவகிருஷ்ணன்
முத்துலெட்சுமி மாதவகிருஷ்ணன்

சித்திரை மாதம் முதல் நாளில் மதிய உணவில் வேப்பம்பூ மற்றும் மாங்காய்ப் பச்சடி செய்வது வழக்கம். பாரம்பர்ய உணவுகளில் அறுசுவைகள் சேர்ந்த உணவுகள் பரிமாறப்படும். பல தலைமுறைகள் கடந்தாலும் தமிழர்களின் பண்பாடு தனித்துவம் வாய்ந்தது.

இவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பதும் கடத்துவதும் நம் கடமை. பாரம்பர்யப் பேசும் சித்திரைத் திருநாள் சிறப்பு ரெசிப்பிகள் இந்த 32 பக்க இணைப்பில் இடம்பெறுகின்றன.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

சம்பா அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: சிவப்பு கெட்டி சம்பா அவல் - ஒரு கப், நாட்டுச்சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 8, உலர்ந்த திராட்சை - 5.

செய்முறை: கனமான கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். முந்திரி நிறம் மாறும்போது சிவப்பு கெட்டி அவல் சேர்த்து‌ வறுத்து ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். கடாயில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்த அவல், முந்திரி, திராட்சையோடு சேர்த்து மூடி வேகவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து நாட்டுச் சர்க்கரையைக் கரைத்து, கொதிவந்ததும் வடிகட்டி இறக்கவும். அவல் வெந்ததும் வடிகட்டிய நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். வெந்த அவலோடு நாட்டுச்சர்க்கரை கரைசல் சேர்த்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து திரண்டு ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

பானகம்

தேவையானவை: எலுமிச்சைப்பழம் - 2, நாட்டுச்சர்க்கரை - அரை கப், தண்ணீர் - 6 – 8 கப், சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதோடு நாட்டுச்சர்க்கரையைத் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நாட்டுச்சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

சம்பா கோதுமை ரவை கேசரி

தேவையானவை: உடைத்த சம்பா கோதுமை ரவை - அரை கப், நாட்டுச்சர்க்கரை - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 7, உலர்ந்த திராட்சை - 5, நெய் - கால் கப்.

செய்முறை: சிறிதளவு நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். கனமான கடாயை சூடாக்கி சம்பா கோதுமை ரவையைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும். பின் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து குறைந்த தீயில் மூடி வைத்து வேக வைக்கவும். சிறிய பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சம்பா கோதுமை ரவை வெந்ததும் கரைத்துவைத்துள்ள நாட்டுச்சர்க்கரையை வடிகட்டி சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு கிளறவும். கேசரி கெட்டியாகும்வரை கைவிடாமல் இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி கெட்டியாகும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து ஓரங்களில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

மிளகு சம்பா

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியைக் கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். கடாயைச் சூடாக்கி மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த சாதம், உப்பு மற்றும் பொடித்துவைத்துள்ள மிளகு- சீரகக் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

அரிசி - பருப்பு பாயசம்

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - 4 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய் - 5, முந்திரிப்பருப்பு - 10, தேங்காய்த் துருவல் - அரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கனமான கடாயை சூடாக்கி பாசிப்பருப்பு சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பின் பச்சரிசியைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். வறுத்த அரிசியை மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும். வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பொடித்த அரிசி ரவையை குக்கரில் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் வடிகட்டிய‌ வெல்லம், வேகவைத்த பருப்பு - அரிசி கலவையை சேர்த்து சிறிது நெய்விட்டு கலந்து விடவும். பின் அரைத்த தேங்காய் விழுது, நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் கலந்து தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

நுள்ளிக்கா உருண்டை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், தேங்காய்த்துருவல் - முக்கால் கப், கொரகொரப்பாக பொடித்த மிளகு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பையும், அரிசியையும் இரண்டு முறை கழுவி போதுமான தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின் கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் தண்ணீர் அதிகம் ஊற்றாமல் வெண்ணெய் பதத்தில் கெட்டியாக அரைக்கவும். பின்பு பொடித்த மிளகு, தேங்காய்த்துருவல், நறுக்கிய கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து நன்றாகப் பிசையவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

வரகரிசி இனிப்பு அவல்

தேவையானவை: வரகு அவல் - ஒரு கப், நாட்டுச்சர்க்கரை - அரை கப், தேங்காய்த்துருவல் - அரை கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வரகரிசி அவலை அரை கப் வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும். கடாயில் நெய்விட்டு சூடானதும் அதில் தேங்காய்த்துருவல் சேர்த்து வறுக்கவும். பின் வடிகட்டிய நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பின் ஊறவைத்த வரகரிசி அவல் மற்றும் வறுத்த வெள்ளை எள்ளைச் சேர்த்து ஒன்றாகக் கலந்து இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

அவல் வடை

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்), பெருங் காயத்தூள் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் அவலைக் கழுவி கால் கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போன்று தட்டவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடானதும் தட்டிவைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சாதாரண அவல் வைத்துச் செய்தால் ஊறவைக்கத் தேவையில்லை. கலந்துவைத்துள்ள கலவை கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

கோதுமை அப்பம்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், ரவை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – கால் கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - அரை கப், வாழைப்பழம் - ஒன்று, எண்ணெய் அல்லது நெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல், சமையல் சோடா மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் அல்லது நெய்விட்டு சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். வெந்து மெள்ள மேலே எழும்பி வரும்போது மெதுவாகத் திருப்பிப் போட்டு நன்கு வேகும்வரை பொரித்தெடுக்கவும். இந்த அப்பத்தை, குழிப்பணியாரச் சட்டியிலும் எண்ணெய் அல்லது நெய்விட்டு மிதமான சூட்டில் வைத்தும் பொரித்தெடுக்கலாம்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

கதம்ப தொவரன்

தேவையானவை: முட்டைகோஸ் - 250 கிராம், கேரட் - ஒன்று, பீன்ஸ் - 7, பச்சைப் பட்டாணி - கால் கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய்த்துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - ஒன்று, சின்ன வெங்காயம் - மூன்று, பூண்டு – ஒரு பல், சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: முட்டைகோஸ், கேரட் மற்றும் பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், பாசிப்பருப்பு மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். அவை வேகும்போது தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பல் மற்றும் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். காய்கறிகள் வெந்ததும் ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து கொள்ளவும். வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கலந்த முட்டைகோஸ் கலவையைச் சேர்த்து சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

புளி அவியல்

தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, கேரட் - 2, பீன்ஸ் - 9, கத்திரிக்காய் - 7, உருளைக்கிழங்கு - ஒன்று, முருங்கைக்காய் - 7 துண்டுகள், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 10 இலைகள், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய்த்துருவல் - அரை கப், சின்ன வெங்காயம் - 4, பூண்டு பற்கள் - 2, பச்சை மிளகாய் - 3, சீரகம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளை ஒரே அளவில் நீளமாக நறுக்கிக்கொள்ளவும். புளியை வெந்நீரில் ஊறவைத்து அரை கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும். கேரட் நிறம் மாறும்போது நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும். தேங்காய்த்துருவல், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். சீரகத்தின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கும்போது தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சூடான அவியலில் கலந்து மூடி வைக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

வெண்டைக்காய் - மாங்காய்ப் பச்சடி

தேவையானவை: வெண்டைக்காய் - 7, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - 2, மாங்காய் - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 3, சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காய், சின்ன வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், வெண்டைக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெண்டைக்காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும். தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும். வெண்டைக்காய் வெந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். பச்சடி கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லம் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதித்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் கலந்து இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

வெள்ளைப் பூசணிக் கூட்டு

தேவையானவை: வெள்ளைப் பூசணி - 250 கிராம், வேகவைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், பால் - கால் கப், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய்த்துருவல் - 5 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, சின்ன வெங்காயம் - இரண்டு, சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: வெள்ளைப் பூசணிக்காயின் தோலை சீவி, நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பூசணிக்காயைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேகவிடவும். பூசணி வேகும்போது தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும். பூசணிக்காய் வெந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பு, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். கூட்டு கொதித்ததும் சிறிது அரிசி மாவைத் தூவி சில நிமிடங்களில் பால் சேர்த்து இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்த்துக் கலந்து விடவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

தாளகம்

தேவையானவை: பறங்கிக்காய் - 100 கிராம், கேரட் - 2, கத்திரிக்காய் - 4, உருளைக்கிழங்கு - ஒன்று, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: எள் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். கடாயைச் சூடாக்கி பச்சரிசி மற்றும் எள்ளை வறுத்து எடுக்கவும். பின்பு அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். பின் ஆறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். கனமான கடாயில், நறுக்கிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அவை பாதி வெந்ததும் பறங்கிக்காய் மற்றும் கத்திரிக்காய் சேர்த்து மஞ்சள்தூள், புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வேகவைக்கவும். காய்கறிகள் வெந்ததும் அரைத்துவைத்துள்ள விழுதையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கலந்து மிதமான சூட்டில் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து தாளகத்தில் கலந்து மூடி வைக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

சீனிப்பலாக்காய் (கறிப்பலா) பொரியல்

தேவையானவை: சீனிப்பலாக்காய் - ஒன்று, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இலைகள், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பற்கள், சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: சீனிப்பலாக்காயின் தோலைச் சீவி பாதியாக நறுக்கிக்கொள்ளவும். பின் நடுவில் இருக்கும் வழவழப்பான பகுதிகளை எடுத்து கனமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், நறுக்கிய சீனிப்பலாக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்கக் குறிப்பிட்டுள்ள பொருள்களைச் சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை மற்றும் வேகவைத்த சீனிப்பலாக்காயைச் சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

பறங்கிக்காய்ப் பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய பறங்கிக்காய் - ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய் - அரை கப், வெல்லம் - சிறிய துண்டு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 2 பற்கள், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, கடுகு, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பறங்கிக்காயைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய மாங்காய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பறங்கிக் காயும் மாங்காயும் வெந்ததும் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அரைத்துவைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் வெல்லம் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

தேங்காய் சாம்பார்

தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, முருங்கைக்காய், கத்திரிக்காய் - தலா ஒன்று, வெண்டைக்காய் - 4, மாங்காய் - 4 துண்டுகள், சின்ன வெங்காயம் - 12, பச்சை மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய்த்துருவல் - அரை கப், சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: புளியை ஊறவைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிக் கரைக்கவும். தேங்காய்த்துருவல் மற்றும் சீரகத்தை சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், கத்திரிக்காய், முருங்கைக்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய்விட்டு வெந்தயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கி புளிக்கரைசலில் சேர்க்கவும். காய்கறிகளை புளிக்கரைசலில் வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் சாம்பார் பொடி, மாங்காய்த் துண்டுகள், வேகவைத்த பருப்பு, அரைத்த தேங்காய் விழுது சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சாம்பார் கொதிக்க ஆரம்பிக்கும்போது பெருங்காயத்தூள் சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சூடான சாம்பாரில் கலந்து கொள்ளவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

வேப்பம்பூ ரசம்

தேவையானவை: உலர்ந்த வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மஞ்சள்தூள், ரசப் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போகும்வரை கொதித்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து உலர்ந்த வேப்பம்பூவையும் சேர்த்து கருகாமல் வறுத்து சூடான ரசத்தில் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

தேங்காய்ப்பால் - புளி மிளகாய்

தேவையானவை: நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 15, புளி - எலுமிச்சை அளவு, வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்ப்பால் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை பாதியாக நறுக்கி சின்ன துண்டு களாக நறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்துப் பொரிந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம், மிளகாய் நன்கு வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு பெருங்காயத்தூள், வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து தேங்காய்ப் பால் சேர்த்து சில நிமிடங்கள் குறைந்த சூட்டில் வைத்து லேசாகக் கொதித்ததும் இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

மாங்காய் - வேப்பம்பூப் பச்சடி

தேவையானவை: மாங்காய் - ஒன்று, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காயைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மாங்காய் வெந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் துருவிய வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து மாங்காயுடன் சேர்ந்து கெட்டியாகி பச்சடிப் பதம் வந்த பின் அடுப்பை அணைத்து விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யைச் சேர்த்து‌ காய்ந்த வேப்பம்பூவைச் சேர்த்து கருகாமல் வறுத்து பச்சடியில் கலந்து கொள்ளவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

புளி இஞ்சி

தேவையானவை: பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை கப், புளி - பெரிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின் நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து முறுகலாகும்வரை வதக்கி நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக சாம்பார் பொடி சேர்த்து சில நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

இனிப்பு மாங்காய்ப் பச்சடி

தேவையானவை: மாங்காய் - ஒன்று, வெல்லம் - முக்கால் கப், சுக்குப்பொடி - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி மெலிதாக செதுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும். கடாயில், செதுக்கிய மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். மாங்காயும் வெல்லமும் ஒன்றாகச் சேர்ந்து ஜாம் போல் ஆனதும் சுக்குப்பொடி மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சில நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும். புளிப்பான மாங்காய் வைத்துச் செய்தால் வெல்லத் தின் அளவை கூட்டிக் கொள்ளவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

பழப் பச்சடி

தேவையானவை: மலை வாழைப்பழம் - 3, பிஞ்சு வெள்ளரிக்காய் - ஒன்று, ஆப்பிள் - பாதியளவு, செர்ரி பழம் - 10, திராட்சை - 10, கெட்டி தயிர் - ஒரு கப், நாட்டுச்சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாழைப்பழத்தை வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். வெள்ளரிக் காய் மற்றும் ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கவும். செர்ரி பழத்தை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் நறுக்கிய பழங்களைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின் கெட்டித் தயிரைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பரிமாறும்போது சிறிது நாட்டுச்சர்க்கரையை தூவி கலந்து பரிமாறவும்‌. விருப்பப்பட்டால் மாதுளை முத்துகள், தர்பூசணி மற்றும் கிர்னி பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

மோர் சாறு

தேவையானவை: கடைந்த மோர் - 2 கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், மோர் மிளகாய் வற்றல் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடைந்த மோர், அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம், கடுகு தாளித்து கிள்ளிய மோர் மிளகாய் வற்றல் சேர்த்துப் பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து, கலந்துவைத்துள்ள மோர் கலவையைச் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

சித்திரைத் திருநாள் சிறப்பு சமையல்

பாசிப்பருப்பு - ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பொடி நைலான் ஜவ்வரிசி - கால் கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், முந்திரிப்பருப்பு - 10, நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயைச் சூடாக்கி பாசிப்பருப்பை சேர்த்து வாசம் வரும்வரை வறுக்கவும். பாசிப்பருப்பு பொன்னிறமாகும்போது ஜவ்வரிசியைச் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.‌ பின் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் ஐந்து விசில் வரும் வரை வேகவைக்கவும். பருப்பு வேகும்போது தட்டிய வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். வெல்லம் கரைந்ததும் அடி கனமான பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக்கொள்ளவும். பின் வெல்லத்தோடு கலந்து 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும்.‌ பருப்பு வெல்லத்தோடு சேர்ந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து லேசான கொதிவந்ததும் இறக்கவும். கடாயில் நெய்விட்டு சூடானதும் உடைத்த முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து சூடான பாயசத்தில் கலந்து கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism