கட்டுரைகள்
Published:Updated:

வடை தெரியும்... அதென்ன வாடா? தஞ்சையின் சுவை கூட்டும் டிஷ்

வாடா
பிரீமியம் ஸ்டோரி
News
வாடா

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடையான கடற்கரைப் பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய மக்களிடையே பழக்கத்தில் இருந்துவரும் உணவு `வாடா.’

``வாடா” என்ற வார்த்தையை தஞ்சாவூர் பக்கம் யாராவது பயன்படுத்தினால், ஏதோ செல்லமாக பிரெண்ட்ஸை அழைப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். மண்மணத்துக்குப் பெயர் பெற்ற தஞ்சாவூரில் செய்யப்படுற ஒரு டிஷ்ஷின் பெயரே ‘வாடா.’

‘வடை கேள்விப்பட்டிருக்கோம்... அதென்ன வாடா’ என சட்டென்று நீங்கள் கேட்பதும், யோசிப்பதும் புரிகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடையான கடற்கரைப் பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய மக்களிடையே பழக்கத்தில் இருந்துவரும் உணவு `வாடா.’ கால ஓட்டத்தில் அனைவராலும் ரசித்து, ருசித்து, விரும்பிச் சாப்பிடுற உணவாக மாறிவிட்டது. வாடா என்பதை ‘இறால் வடை’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

அதிராம்பட்டினம், புதுப்பட்டினம் பீச், மல்லிப்பட்டினம், சம்பைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்படுகிற வாடாவை உள்ளூர்வாசிகள் முதல் அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் வரை யாரும் சாப்பிடத் தவறுவதில்லை.

வடை தெரியும்... அதென்ன வாடா? தஞ்சையின் சுவை கூட்டும் டிஷ்

தினமும் மாலை மூன்று மணியளவில் கிழக்குக் கடற்கரைச் சாலை ஓரங்களில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்ட சிறிய அளவிலான கொட்டகையில் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் தனித்தனியே வாடா தயார் செய்து விற்பனை செய்கின்றனர். பிசைந்த மாவைக் கையில் எடுத்து வடை தட்டுவது போல் தட்டி, இரண்டு இறாலை அதில் வைத்து நன்றாக அமுக்கி, எண்ணெய்ச் சட்டியில் போட்டு வெந்த பிறகு லாகவமாக எடுக்கும் அழகே வாடாவை டேஸ்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதுடன், சப்புக்கொட்டி ருசிக்கவும் செய்கிறது.

அப்பெண்களுக்குச் சிறந்த சுயதொழிலாக இருப்பதுடன் வாழ்க்கையில் உயரவும் காரணமாக இருக்கிறது இது. வாடா எப்படிச் செய்வது, தேவையான பொருள்கள் என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வம் ஏற்்பட்டுவிட்டதுதானே? வாங்க தெரிஞ்சுக்கலாம்... அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக வாடா செய்துவரும் ரெஜினா என்பவரை சந்தித்தோம். ‘‘எங்க குடும்பத்துல நான் மூன்றாவது தலைமுறையாக வாடா செய்கிறேன்’’ என்றவாறே ஒத்தையாளாக எண்ணெய்ச் சட்டியில் போட்டு வாடா சுட்டு எடுப்பதிலும், வியாபாரத்திலும் படுபிஸியாக இருந்தவாறே, வாடா செய்கின்ற பக்குவம் குறித்துப் பகிர்ந்தார்.

தேவையான பொருள்கள்:

(ஒரு கிலோ பச்சரிசி மாவில் வாடா செய்வதற்கு)பச்சரிசி ஒரு கிலோ, இறால் அரைக் கிலோ,தேங்காய் 2, பெரிய வெங்காயம் அரைக் கிலோ, ஒரு லிட்டர் எண்ணெய், 25 கிராம் சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் கறிமசாலா தூள் தேவையான அளவு.

வடை தெரியும்... அதென்ன வாடா? தஞ்சையின் சுவை கூட்டும் டிஷ்

எப்படிச் செய்வது?

ஒரு கிலோ பச்சரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து அலசி எடுக்கவும். சிறிது நேரம் உலரவிட்டு, மிஷினில் கொடுத்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை சல்லடையில் போட்டு சலித்து நைஸாக இருக்கும் மாவைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்து அதில் உடைசலாக இருக்கும் மாவைக் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறிய பிறகு இறக்க வேண்டும். சூடு ஆறிய பிறகு நைஸ் மாவையும் அதில் கொட்டி இரண்டையும் சேர்த்து லேசாகத் தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாடா மிருதுவாக வரும்.

தேங்காயைத் துருவிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை வெட்டி தேங்காயில் போட வேண்டும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்தோ அல்லது கிள்ளியோ போட வேண்டும். சிறிதளவு உப்பு மற்றும் சோம்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து அவற்றை சட்டியில் வைத்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வடை தெரியும்... அதென்ன வாடா? தஞ்சையின் சுவை கூட்டும் டிஷ்

இறாலை சுத்தம் செய்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டியை அடுப்பில் வைத்து, சூடானபிறகு எண்ணெயை ஊற்ற வேண்டும். வடை அளவு கொண்ட ஒரு கிளாஸினை எடுத்து, பின்பகுதி மேலே இருப்பது போல் கவிழ்த்து வைத்து, அதன் மேல் தண்ணீரில் நனைத்த துணியை வைக்க வேண்டும் (தட்டுவதற்கு எளிதாக இருக்கும்). பின்னர் பிசைந்த மாவை அதன் மேல் வைத்துத் தட்டிய பிறகு மசாலாவைச் சிறிது வைத்து, அதன் மேல் மீண்டும் மாவை வைத்துத் தட்ட வேண்டும்.

மேல் பகுதியில் வேக வைக்கப்பட்ட (இரண்டு அல்லது தேவைக்கேற்ப ஐந்து வரை வைக்கலாம்) இறாலை எடுத்து வைத்து லேசாக அமுக்கி எண்ணெய்ச் சட்டியில் போட்டு வெந்த பிறகு எடுத்துவிட்டால் ருசியான இறால் வாடா ரெடி.