கட்டுரைகள்
Published:Updated:

வாயில் போட்டவுடன் கரையும் தூத்துக்குடி மக்ரூன்!

தூத்துக்குடி மக்ரூன்
பிரீமியம் ஸ்டோரி
News
தூத்துக்குடி மக்ரூன்

உணவு

`உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...’ என்பார்கள். அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடிக்குப் பெருமை உப்பு மட்டுமல்ல இன்னொரு இனிப்பான ஐட்டமும்தான்... அது, தூத்துக்குடி மக்ரூன்!

வெளியூர்களில் இருக்கும் உறவினர் வீட்டுக்குத் தூத்துக்குடிவாசிகள் போகிறார்கள் என்றால், அவர்கள் வாங்கிச் செல்லும் பலகாரங்களில் கட்டாயம் இந்த ‘மக்ரூன்’ இடம் பிடித்துவிடும். தப்பித் தவறி வேறு ஏதாவது வாங்கிக்கொண்டு போய்விட்டால் “மக்ரூன் வாங்கிட்டு வரலையா?” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். வெள்ளை வெளேரெனக் கூம்பு வடிவத்தில், வாயில் போட்டதும் கரையும் மக்ரூனின் சுவைக்கு அடிமை ஆகாதவர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால், அவர் மக்ரூன் பற்றி விவரம் தெரியாதவராக இருப்பாராக்கும்!

போர்ச்சுக்கீசியர்கள் கடல் வாணிபம் செய்வதற்காக தூத்துக்குடிப் பகுதியில் குடியேறிய போது அவர்களின் உணவு வகைகளில் இடம்பெற்றிருந்த இனிப்புதான் இந்த மக்ரூன். போர்ச்சுக்கீசிய மொழியில் ‘மக்ரூன்’ என்றால், ‘முட்டையும் முந்திரியும் கலந்த இனிப்பு’ என்று பொருள்.

வாயில் போட்டவுடன் கரையும் தூத்துக்குடி மக்ரூன்!

பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாகக் கப்பல்களில் முந்திரிக்கொட்டையைத் தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தனர். இதனால்தான் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள், முந்திரிக்கொட்டையை ‘கொல்லாங்கொட்டை’ என்றும், முந்திரிப்பருப்பை ‘கொல்லாம் பருப்பு’ என்றும் சொல்கிறார்கள். போர்ச்சுக்கீசியர்களின் குடியிருப்புகளில் வேலைக்காரர்களாகப் பணியமர்த்தப்பட்டவர்கள், இந்தப் பண்டத்தைச் செய்யக் கற்றுக்கொண்டதால்தான் தூத்துக்குடியில் இந்த இனிப்பு பிரசித்தமானதாகச் சொல்லப்படுகிறது. மக்ரூனைத் தயாரிப்பது ஒரு தனிக் கலை. இந்த இனிப்பை குறைந்த வெப்பநிலையில் அதிக நேரம் பேக் (வேக வைத்தல்) செய்கிறார்கள். தவிர, இதற்கென ஸ்பெஷலாக சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த இரண்டும்தான் இந்த மக்ரூன் மொறுமொறுப்புடன் இருப்பதற்கும், வாயில் போட்டதும் மின்னலாகக் கரைவதற்கும் காரணம் என்கிறார்கள்.

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, அதனுடன் சீனி கலந்து நன்றாக அடித்துக் கலக்குகிறார்கள். க்ரீம் பதம் வந்ததும் அதனுடன் பொடித்த முந்திரியைக் கலந்துகொள்கிறார்கள். கோன் வடிவத்தில் சுற்றப்பட்ட பட்டர் பேப்பரில் இந்தக் கலவையை இட்டு, கூம்பு வடிவத்தில் வடித்து ‘பேக்கிங்’ செய்கிறார்கள். முட்டையை அடிப்பது, சரியான பக்குவத்தில் சீனியைக் கலப்பது, கலந்த கலவை க்ரீம் பதத்தில் இருப்பது என தனிப்பட்ட செய்முறைகளை சரியாகப் பின்பற்றினால் தான் மக்ரூன் நன்றாக வரும். இல்லாவிட்டால் வடிவமும் சுவையும் மாறிவிடும்.

வாயில் போட்டவுடன் கரையும் தூத்துக்குடி மக்ரூன்!

அலுமினிய பேக்கிங் பேப்பரில் வைத்து பேக்கிங் செய்கிறார்கள். இப்படித் தயாராகும் மக்ரூனை 3 மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடக் கூடிய வகையில் ஸ்பெஷல் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். வெள்ளைக்கருவும், முந்திரியும் கலந்திருப்பதால் உடலுக்கு புரதச் சத்து கிடைக்கிறது என்பது மக்ரூனின் கூடுதல் ஸ்பெஷாலிட்டி.

ஒரு கிலோ மக்ரூனின் விலை 900 ரூபாய். தூத்துக்குடியில் இருக்கும் அபி மக்ரூன்ஸ் நிறுவனம், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் மக்ரூனின் சைஸைச் சிறியதாக்கி ‘பேபி மக்ரூன்’ என அறிமுகம் செய்துள்ளது. இதன் சைஸ் சிறியதாக இருப்பதால் ஒரு கிலோவில் 45 முதல் 50 எண்ணிக்கையில் இருக்கும். இங்கிருந்து தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும், அது தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒரு கிலோ மக்ரூன் செய்வதற்குத் தேவையான பொருள்கள்:

முட்டை -15, சீனி - 450 கிராம், பொடித்த முந்திரி - 500 கிராம் ஆகியவை மட்டுமே.

செய்முறை:

முட்டைகளில் இருந்து வெள்ளைக் கருவை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் பிரித்தெடுக்க வேண்டும். பிரத்யேகமான கிரைண்டரில் வெள்ளைக்கருவைக் கொட்டி சீனி கலந்து 15 நிமிடங்கள் வரை கலக்க வேண்டும். வெண்ணெய் நிறத்தில் க்ரீம் பதத்திற்கு வந்துவிடும். இதனுடன் ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரிப் பருப்பைக் கலந்து மெதுவாகக் கிளறினால் மக்ரூன் மாவு தயார்.

இந்த மாவினைப் பொட்டலம் போல கூம்பு வடிவத்தில் சுற்றப்பட்ட பேக்கரி பேப்பருக்குள் போட்டு, கூம்புப் பகுதியின் நுனியில் கத்தரித்து, நெய் தடவப்பட்ட தட்டுகளில் சிறிது சிறிதாகப் பிழிய வேண்டும். பேக்கரிக்கு என்றே உருவாக்கப்பட்ட அடுப்பின் மேல்தளத்தில் மிதமான சூட்டில் தட்டுகளை அடுக்கிக் காய வைக்க வேண்டும். 4 முதல் 5 மணி நேரம் வரை வைத்திருந்தால் சுவையான மக்ரூன் தயார்.