Published:Updated:

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: காராமணி

காராமணி
பிரீமியம் ஸ்டோரி
News
காராமணி

காராமணி குறித்த முதல் வரலாற்றுக் குறிப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

றுப்புக்கண் பட்டாணி, தட்டையான பட்டாணி, தெற்குப் பட்டாணி, சீன நீளப் பட்டாணி போன்ற பெயர்கள் கொண்ட பயறு இது. ‘கெளபி’ என்பது இதன் அமெரிக்கப் பெயர். இதன் தெலுங்குப் பெயர் `அலசண்டுலு’. கன்னடத்தில் `அலசண்டே’. மலையாளத்தில் `பெரும்பயறு’. தமிழ்கூரும் நல்லுலகில் காராமணி அல்லது தட்டைப்பயறு. தாவரவியல் பெயர் Vigna Unguiculata. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நவராத்திரி காலத்தின் தவிர்க்கவே முடியாத ஒரு சுண்டல் வகை காராமணி.

ஃபேபெசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, சுமார் 5000 ஆண்டுக்கால பழைமையான வரலாறுகொண்ட, உலகின் புராதன பயறு வகையான காராமணியின் பூர்வீகக் கண்டம் ஆப்பிரிக்கா. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் காராமணி விளைகிறது என்று தாவரவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதற்கான உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் இல்லை. ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதிகளில் இருந்துதான் காராமணி இந்தியாவுக்குப் பரவியது. ஆனால், எந்தக் காலத்தில் என்று தெரியவில்லை என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், கி.மு 2300 நேரத்தில் தெற்கு ஆசியப் பகுதிகளில் காராமணி விளைந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன

கி.மு 400 காலத்தைச் சேர்ந்த புத்த மதக் குறிப்புகளில் ‘நிஷ்பவா’ என்ற வார்த்தை உள்ளது. நிஷ்பவா என்பது காராமணியின் சம்ஸ்கிருதப் பெயர். காராமணி குறித்த முதல் வரலாற்றுக் குறிப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும். இந்தியில் ‘சௌலி’ அல்லது ‘லோபியா’ என்று இது அழைக்கப்படுகிறது. இதற்கு ‘மயக்குகின்ற’ என்று பொருள். மயக்கும் சுவைகொண்ட பயறு என்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: காராமணி

இந்தியாவிலிருந்துதான் காராமணி, அரேபிய நாடுகளுக்கும், ஆசியா மைனர் பகுதிகளுக்கும் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்திலேயே பரவியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அதேபோல சீனாவிலும் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்திலேயே காராமணி விளைவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் பல்வேறு பயறு வகைகளைப் பற்றி குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதை வகைப்படுத்தவில்லை. எனவே, பல குறிப்புகள் பொதுவான விஷயங்களாக இருக்கின்றன. கிரேக்க மருத்துவக் குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்படும் பயறு, காராமணியாக இருக்கலாம் என்று வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

14-ம் நூற்றாண்டில் இத்தாலிக்கு, ஆப்பிரிக்கர்கள் மூலமாகக் காராமணி பரவியது. ஆனால், ஐரோப்பியக் கண்டத்தின் வட பகுதி நாடுகளுக்கு இது மேற்கொண்டு பரவவில்லை. காரணம், அங்கே நிலவும் குளிர் நிறைந்த பருவநிலை காராமணிக்கு ஏற்றதாக இல்லை என்பதே.

இந்தக் காராமணி, 17-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் அமெரிக்க நாடுகளுக்கு ஐரோப்பியர்கள் மூலமாகப் பரவியது. அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட ஆப்பிரிக்கர்கள், காராமணி யையும் எடுத்துச் சென்றார்கள். அப்படி முதன்முதலாக கி.பி 1670-களில் காராமணி, ஜமைக்கா தீவுகளில் முளைவிடத் தொடங்கியது. ஜமைக்காவின் பருவநிலை காராமணி விளைவதற்கேற்ப இருந்தது. காராமணி சீக்கிரமாக விளையக்கூடியது, அதிக சத்து தரும் பயிர் என்பதால் அடிமை களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அதை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஐரோப்பியர்கள் கட்டளையிட்டார்கள். அடுத்த ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே மேற்கு இந்தியத் தீவுகள் முழுவதும் காராமணி அதிகம் பயிரிடப்படும் பயிராக மாறியது.

கி.பி 1700 நேரத்தில் காராமணி, மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து ஃபுளோரிடா மாகாணத்துக்குப் பரவியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமெரிக்க முன்னாள் அதிபரும் தாவரவியல் ஆர்வலருமான ஜார்ஜ் வாஷிங்டன், கி.பி 1791-ம் ஆண்டில் காராமணியைத் தன்னுடைய தோட்டத்தில் வளர்த்துப் பார்த்தார். ஆனால், அங்கே நிலவிய குளிரான சூழ்நிலை காராமணிக்கு ஏற்றதாக இல்லை. ஆனாலும் கி.பி 1797-ம் ஆண்டில் வேறொரு ரக காராமணியைப் பயிரிட்டு வெற்றி கண்டார் வாஷிங்டன்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: காராமணி

இன்றைக்கு அமெரிக்கர்கள் அதிகம் விளைவிக்கும் காராமணி ரகத்துக்கு ‘கெளபி’ (Cowpea) என்று பெயர். எப்படி இந்தப் பெயர் வந்தது? 17-ம் நூற்றாண்டில் இந்தக் காராமணி பயிர், கால்நடைகளுக்கான, குறிப்பாக பசுக்களுக்கான தீவனம் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. எனவேதான் ‘கெளபி’ என்ற பெயர் இந்தப் பயறுடன் ஒட்டிக்கொண்டது.

கி.பி 1798-ம் ஆண்டில் வெளியான அமெரிக்க விவசாயப் புத்தகம் ஒன்றில் இந்த வார்த்தை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த ரக காராமணி தட்டையாக, வெள்ளை நிறத்தில் இருக்கும். அதில் கறுப்பு நிறத்துல ஒரு புள்ளி காணப்படுகிறது. எனவே, இதற்கு ‘பிளாக்-ஐடு பீஸ்’ (Black-eyed peas) என்ற பெயரும் அமைந்தது. இருந்தாலும் அங்கே காராமணி என்பது ஏழைகளுக்கான, கால்நடைகளுக்கான உணவாக மட்டுமே வெகு காலம் கருதப்பட்டு வந்தது.

ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் வறண்ட வானிலை நிலவும் பிரதேசங்களில் காராமணி பயிரிடப்படுகிறது. அந்தந்தப் பிரதேசங்களைப் பொறுத்து பல ரகங்கள் உள்ளன. பொதுவாகச் சிறுநீரகத்தின் வடிவில், பல்வேறு நிறங்களிலும் விளைகிறது. ஏழை நாடுகளின் மக்களுக்கான அதிக ஊட்டச்சத்து தரும் பயிராகக் காராமணிதான் பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. தவிர, கால்நடைத் தீவனத் தயாரிப்புக்காகவும் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

உணவுக் கலாசாரம்

காராமணி சுண்டல், காராமணி குழம்பு - இவை இரண்டும் தமிழர்களின் வீடுகளில் அடிக்கடி சமைக்கப்படுபவை. பொரியல், அவியல், துவையலாகவும் இது சமைக்கப்படுகிறது. காராமணி பயறு மட்டுமன்றி, காராமணி பயற்றந்தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சில வட்டாரங்களில் மாசி - பங்குனி விரதம் கடைப்பிடிக்கப்படும் நேரத்தில் காராமணி கொழுக்கட்டை செய்கிறார்கள். நவராத்திரியின் ஒன்பது நாள்கள் சுண்டல் வகைகளில் காராமணிக்கும் ஒரு நாள் இடமுண்டு. தென்மாவட்டங்களில் கிராமப் புறங்களில் தட்டைப்பயறு புளிக்குழம்பு அடிக்கடி செய்யப்படும் உணவு. தட்டையான வடிவத்தில் இருக்கும் பயறு என்பதால் ‘தட்டைப்பயறு’ என்று பேச்சு வழக்கில் இந்தப் பெயர் உருவானது.

கேரளாவில் காராமணி அடை பிரசித்தி பெற்றது. வடமாநிலங்களில் சப்பாத்தி, ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள ‘காராமணி சப்ஜி’ என்பது அதிகம் சமைக்கப்படுகிறது. அதிலும் பஞ்சாபியர்கள் காராமணி சப்ஜி செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ‘செளலி உஸல்’ - இது மராத்தியர்களும் கொங்கனி மக்களும் காராமணி கொண்டு செய்யும் பதார்த்தம். சாதத்தில் ஊற்றிச் சாப்பிடும் குழம்பு வகை. கர்ப்பிணிகளுக்கு காராமணி கொண்டு, ‘சௌலி தால்’ சமைத்துக் கொடுக்கிறார்கள். புரதச்சத்து மிகுந்த குழம்பு வகையாக அது கருதப்படுகிறது. அதேபோல காய்கறிகளுடன் காராமணியையும் நன்றாக வேகவைத்து, மசித்து, சூப் போல செய்து பருகும் வழக்கமும் வடமாநிலங்களில் இருக்கிறது. ஊட்டச்சத்து பானங்கள் தயாரிப்பிலும் புரதச்சத்துமிக்க காராமணி மாவு பயன்படுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கையில் காராமணியுடன் பெரும்பாலும் தேங்காய்ப்பால் சேர்த்து சமைக்கிறார்கள். துருக்கி மக்கள், காராமணியை அரைவேக்காட்டுப் பதத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, கொஞ்சம் மசாலா, பூண்டு சாஸ் எல்லாம் சேர்த்து உணவுக்கு முந்தைய ஸ்டார்ட்டர் போல உண்கிறார்கள். ‘அடடு’ - இது காராமணி அதிகம் விளைவிக்கப்படும் ஆப்பிரிக்க நாடுகளில் சமைக்கப்படும் சைடிஷ் வகைகளில் ஒன்று.

`அயரயா ஒகா’ - இது நைஜீரிய ஸ்பெஷல் காராமணி உணவு. காராமணி மாவு கொண்டு தயாரிக்கப்படும் ‘அடா’ என்ற தட்டை போன்ற நொறுக்குத்தீனி மேற்கு ஆப்பிரிக்கவாசிகளுக்குப் பிரியமான ஒன்று. பெரும்பாலான ஆப்பிரிக்கர்கள் காராமணியை அரைத்தோ, வறுத்தோ, அவித்தோ, ஊறவைத்தோ தினசரி உணவில், ஏதாவது ஒரு வகையில் இதைச் சேர்த்துக் கொள்கிறார்கள். உலகில் அதிக அளவில் காராமணி உண்பவர்கள் ஆப்பிரிக்கர்களே.

உலகத்தில் அதிகம் காராமணி பயிர் செய்யும் நாடு நைஜீரியாதான் (66%). மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 200 மில்லியன் மக்கள் தினசரி உணவில் காராமணியைச் சேர்த்துக்கொள்கிறார்கள். அடுத்ததாக மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் காராமணி அதிகம் விளைவிக்கப்படுகிறது. பிரேசில், உலக காராமணி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, பர்மா, இலங்கை போன்றவை காராமணியை அதிகம் உற்பத்தி செய்யும் பிற நாடுகள்.

காராமணி ஆண்டு முழுவதும் விளையக் கூடியது. கடும் குளிர்காலம், கடும் மழைக்காலம் தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் காராமணி சாகுபடி செய்யலாம். அதிகம் பாடுபடத் தேவையில்லை. செலவு குறைவு. உரங்கள்கூட இந்தப் பயிருக்கு அவசியமில்லை. ஏனென்றால் காற்றில் கிடைக்கும் தழைச்சத்தை, தன் வேர் முடிச்சுகளில் சேகரித்து வைத்துக்கொள்ளும் திறன், காராமணிக்கு உண்டு. அதுவே இந்தப் பயிர் செழித்து வளரப் போதுமானது.

இந்தியாவில் சோளம், திணை, பருத்தி, மரவள்ளி, கரும்பு பயிர்களுக்கிடையே ஊடுபயிராகக் காராமணி அதிகம் பயிரிடப் படுகிறது. இந்திய விவசாயிகள் மழையின்றித் தவிக்கும் காலத்திலும் காராமணி விவசாயம் கைகொடுக்கிறது. எனவே, காராமணி விவசாயம் ஆண்டு முழுக்கவே தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

ஆரோக்கியமும் காராமணியும்

ம் தோற்றம் இளமையாக இருக்க, உடலில் புதிய செல்கள் உருவாக வேண்டும். உடலில் புதிய செல்களை உருவாக்கத் தேவைப்படும் சில அமினோ அமிலங்கள் காராமணியில் உள்ளன. இவை இளமை நீடிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் வழிவகுக்கின்றன.

கொஞ்சம் காராமணி உண்டாலே வயிறு நிறைந்த உணர்வு வந்துவிடும். காரணம், இதில் இருக்கும் மெக்னீசிய சத்து, லெப்ஃடின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. அது, நிறைய சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. ஆகவே, நாம் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கிறோம்.

அதிக நார்ச்சத்து கொண்ட காராமணி, இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வாய்வுத் தொந்தரவு அதிகம் உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் காராமணியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடை கூடாமலிருக்க நல்ல டயட் உணவு காராமணி. தவிர, சைவ உணவுகளிலேயே மிக அதிக புரதச்சத்து கொண்ட பயறு வகை காராமணி தான்.