பிரண்டை எலும்பு மூட்டுகளுக்கு வலு சேர்ப்பது. இதைத் தற்போது அவ்வளவாக உணவில் பயன்படுத்துவதில்லை. ஆனால், பெண்கள் அதுவும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுத்துக்கொண்டால் எலும்பின் அடர்வு அதிகரித்து, பல இன்னல்களிலிருந்து மீளலாம். இது சிறந்த மலமிளக்கி. பிரண்டையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் வேலூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.மீனாட்சி.

பிரண்டைப் பொடி
தேவையானவை:
துவரம்பருப்பு - 100 கிராம்
உளுத்தம்பருப்பு - 100 கிராம்
மிளகு - 2 டீஸ்பூன்
காய்ந்த கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
சுக்கு - ஒரு துண்டு
பிரண்டை - 250 கிராம் (நன்கு துண்டு துண்டாக நறுக்கி
வெயிலில் காயவைத்துக்கொள்ளவும்)
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
வாணலியில் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அடுத்து மிளகு, சுக்கு, புளி ஆகியவற்றை வறுத்தெடுத்துக்கொள்ளவும். பின்னர் கறிவேப்பிலையை வறுத்தெடுக்கவும். காய்ந்த பிரண்டையையும் வறுத்துக்கொள்ளவும். பின்னர் எல்லாவற்றையும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து ஈரமில்லாத பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். இதை சுடுசாதத்தில் நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.
தோசை மீது தூவியும், இட்லிக்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.
பிரண்டைத் தொக்கு
தேவையானவை:
பிரண்டை - கால் கிலோ
இஞ்சி - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 100 கிராம்
புளி - 50 கிராம்
வெந்தயம், கடுகு - தலா 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்)
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 100 மில்லி

செய்முறை:
பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி வதக்கிக்கொள்ளவும். ஆறியவுடன் மிக்ஸியில் பிரண்டை, இஞ்சி, புளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டு காய்ந்ததும் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி கடுகு - வெந்தயத்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும். ஈரமில்லாத பாட்டிலில் எடுத்துவைத்தால் ஒரு மாதம் வரை கெடாது. எல்லாவற்றுக்கும் ஏற்ற சைடிஷ் இது.
பிரண்டைத் துவையல்
தேவையானவை:
பிரண்டை - 100 கிராம்
உருவிய கறிவேப்பிலை - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
கொள்ளு - 50 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 20 பல்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு பிரண்டை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். பின் கொள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு உப்பு, புளி சேர்த்து சிறிதளவு நீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும். சாதத்துக்குத் தொட்டு சாப்பிடலாம்; சப்பாத்திக்கு சைடிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.
பிரண்டைக் காரக்குழம்பு
தேவையானவை:
பிரண்டை - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
தக்காளி - 50 கிராம்
கெட்டியான புளிக்கரைசல் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 மில்லி

செய்முறை:
வாணலில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய பிரண்டை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து புளிக்கரைசல் விட்டு நன்கு எண்ணெய் கரையும் வரை கொதிக்கவிடவும். சுவையான காரக்குழம்பு தயார் (தேங்காய் விரும்புபவர்கள் துருவிய தேங்காய் 4 டீஸ்பூன், கசகசா அரை டீஸ்பூன் அரைத்துவிட்டுக்கொள்ளவும்).