Published:Updated:

விநாயகர் சதுர்த்தி: வீட்டில் செய்ய 13 வகையான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இதோ!

கொழுக்கட்டை ரெசிப்பீஸ்
கொழுக்கட்டை ரெசிப்பீஸ்

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாகச் செய்து அசத்த வெரைட்டியான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக...

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசையை அடுத்து வரும் சதுர்த்தி திதியானது, `விநாயகர் சதுர்த்தி’ எனக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முழு முதற்கடவுளான விநாயகருக்குப் பிடித்த சுண்டல், கொழுக்கட்டை, மோதகம் முதலிவற்றை நைவேத்தியமாகச் செய்து படைப்போம். அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாகச் செய்து அசத்த வெரைட்டியான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக...

பால்கோவா மோதகம்

தேவையானவை:

பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 80 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - சிறிதளவு
மோதக மோல்டு - தேவையான அளவு.

பால்கோவா மோதகம்
பால்கோவா மோதகம்

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பாதியாகச் சுண்டி வந்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறவும். இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பால்கோவா பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியவுடன், கட்டிகள் இல்லாமல் நன்றாகப் பிசைந்துகொள்ளவும். மோதக மோல்டில் (அச்சு) நெய்யைத் தடவி, பால்கோவாவை வைத்து மூடி, திறந்தால், பால்கோவா மோதகம் ரெடி.

குறிப்பு:

இந்த மோதகத்தை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே செய்து வைக்கலாம். நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்

கஜூர் மோதகம்

தேவையானவை:

பேரீச்சம்பழம் - 20
முந்திரி - 20
பாதாம் - 20
பிஸ்தா - 20
நெய் - அரை டீஸ்பூன்.

கஜூர் மோதகம்
கஜூர் மோதகம்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் விட்டு சூடானதும் முந்திரி, பாதாம், பிஸ்தாவைச் சேர்த்து லேசாக வறுத்து ஆறவைக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழ விழுது, அரைத்த பருப்புக் கலவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து பிசைந்துகொள்ளவும். மோதக அச்சில் சிறிது நெய்யைத் தடவி பிசைந்து வைத்திருக்கும் கலவையை வைத்து மூடியெடுத்தால், ரிச்சான கஜூர் மோதகம் ரெடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓட்ஸ் பால் கொழுக்கட்டை

தேவையானவை:

ஓட்ஸ் - அரை கப்
பால் - ஒரு கப்
நாட்டுச்சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
பாதாம் - 4
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - சிறிதளவு.

ஓட்ஸ் பால் கொழுக்கட்டை
ஓட்ஸ் பால் கொழுக்கட்டை

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அரைத்த ஓட்ஸ் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது உருட்டி வைத்துள்ள ஓட்ஸ் உருண்டைகளைச் சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் உருண்டைகள் நன்கு வெந்தவுடன் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும். பாலில் நாட்டுச் சர்க்கரை கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஓட்ஸ் பால் கொழுக்கட்டை மேல் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

ஓட்ஸ் மாவை உருண்டைகளாக உருட்டும்போது, கையில் மாவு ஒட்டிக்கொண்டால், சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு உருட்டவும்.

செர்ரி ஃபிரைடு மோதகம்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்
தண்ணீர் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை

பூரணத்துக்கு:

ஸ்வீட் கோவா - 100 கிராம்
செர்ரிப்பழம் - 10
பாதாம் பருப்பு - 6
டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்

பொரிக்க:

எண்ணெய் - தேவையான அளவு.

செர்ரி ஃப்ரைட் மோதகம்
செர்ரி ஃப்ரைட் மோதகம்

செய்முறை:

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பாதாம், செர்ரிப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஸ்வீட் கோவாவுடன் நறுக்கிய செர்ரிப் பழம், பாதாம் பருப்பு, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த கோதுமை மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, சப்பாத்தி பதத்துக்குத் தேய்த்துக் கொள்ளவும். பிறகு, தேய்த்த வற்றின் நடுவே சிறிய கிண்ணத்தை வைத்து அழுத்தி, வட்டமான மாவுப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அந்த வட்டத்தின் நடுவே, ரெடி செய்து வைத்துள்ள செர்ரி மற்றும் நட்ஸ் பூரணத்தை வைத்து, கையாலேயே மோதகம் போல செய்யவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும், ரெடி செய்து வைத்துள்ள மோதகங்களைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ரவை ஸ்வீட் கொழுக்கட்டை

தேவையானவை:

ரவை - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
துருவிய தேங்காய் - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்.

ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
ரவை ஸ்வீட் கொழுக்கட்டை

செய்முறை:

ரவையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையுடன் சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, இறக்கி ரவை பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி வேகவிடவும். அது வேகும் வரை அப்படியே மூடிவைக்கவும். சர்க்கரை கரைந்து ரவையுடன் சேர்ந்து ரவை கால் பாகம் வெந்திருக்கும். இத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். ஆறியவுடன் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்

கோதுமை ரவைக் கொழுக்கட்டை

தேவையானவை:

கோதுமை ரவை - ஒரு கப்
தண்ணீர் - 3 கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - 10
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்.

கோதுமை ரவைக் கொழுக்கட்டை
கோதுமை ரவைக் கொழுக்கட்டை

செய்முறை:

கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றைச் சேர்த்து தாளிக்கவும். பிறகு 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் கோதுமை ரவை, ஊற வைத்த கடலைப்பருப்பு, கடைசியாகத் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி வேகவிடவும். கலவை நன்கு வெந்தவுடன் ஆற விட்டு, உருண்டை பிடிக்கவும். பிறகு, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

ஊறவைத்த கடலைப்பருப்பை, கோதுமை ரவையைச் சேர்க்கும் போது சேர்த்து வேகவிடவும்.

ராகி அம்மணிக் கொழுக்கட்டை

தேவையானவை:

ராகி மாவு - அரை கப்
தண்ணீர் - அரை கப்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்னெய் - 2 டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.

ராகி அம்மணிக் கொழுக்கட்டை
ராகி அம்மணிக் கொழுக்கட்டை

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து ராகி மாவைச் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அரை கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு, வறுத்து வைத்துள்ள மாவில் ஊற்றி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வேகவைத்த ராகி அம்மணிக் கொழுக்கட்டை, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

சர்க்கரை, தேங்காய்த்துருவல் சேர்த்து, இனிப்பு அம்மணிக் கொழுக்கட்டையும் செய்யலாம்.

கம்பு அவல் காரக் கொழுக்கட்டை

தேவையானவை:

கம்பு அவல் - ஒரு கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

கம்பு அவல் காரக் கொழுக்கட்டை
கம்பு அவல் காரக் கொழுக்கட்டை

செய்முறை:

கம்பு அவலை கழுவி, அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். தாளித்தவற்றை ஊறிய கம்பு அவலில் சேர்த்து உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பிசைந்த அவலை கொழுக்கட்டை களாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

வரகு பிள்ளையார்பட்டி மோதகம்

தேவையானவை:

வரகு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
துருவிய தேங்காய் - கால் கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 3 கப்.

வரகு பிள்ளையார்பட்டி மோதகம்
வரகு பிள்ளையார்பட்டி மோதகம்

செய்முறை:

வரகு, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக (ரவை பதத்துக்கு) அரைத்துக் கொள்ளவும். அரைத்த ரவையுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து வேகவிடவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். இடையிடையே கிளறி விடவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி வெந்த ரவையில் ஊற்றிக் கிளறவும். கடைசியாக ஏலக்காய், தேங்காய்த்துருவல், நெய் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும். ஆறியவுடன் உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைக்கவும்.

குறிப்பு:

ரவை வேகும்போது, தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை சுடவைத்து ஊற்றவும்.

அவல் மோதகம்

தேவையானவை:

கெட்டி அவல் - ஒரு கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

அவல் மோதகம்
அவல் மோதகம்

செய்முறை:

அவலைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தூளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கெட்டியாகும்போது இறக்கி வடிகட்டவும். அவலைத் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் தண்ணீர் இல்லாமல் வடியவிடவும். பாத்திரத்தில் அவலுடன் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெல்லக் கரைசலைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசையவும். பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

விரும்பினால் சிறிதளவு சுக்குத்தூள் சேர்க்கலாம். சரியாக உருட்ட வரவில்லை என்றால் மேலும் சிறிதளவு ஊறவைக்காத அவலைச் சேர்த்துப் பிசையலாம்.

வெஜிடபிள் மோதகம்

தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - ஒரு கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெந்நீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய

எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு - தலா கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய கேரட், முட்டைகோஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

வெஜிடபிள் மோதகம்
வெஜிடபிள் மோதகம்

செய்முறை:

பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து நைஸாக இடிக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இடித்த பச்சை மிளகாய் - கறிவேப்பிலை, கேரட், முட்டைகோஸ் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இடியாப்ப மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரைச் சேர்த்துப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவுக்குக் கையால் தட்டவும். ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணத்தை வைத்து, மேலே மற்றொரு பூரியால் மூடி ஓரங்களை ஒட்டவும். குக்கி கட்டரால் ஓரங்களை விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். இதை ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

பலாப்பழ மோதகம்

தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - அரை கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

கொட்டை நீக்கிய பலாச்சுளை - 3 (துருவவும்)
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள் - கால் கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

பலாப்பழ மோதகம்
பலாப்பழ மோதகம்

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். இடியாப்ப மாவு (அ) அரிசி மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசையவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி தேங்காய்த் துருவல், பலாப்பழத் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சுருள கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை மோதக அச்சில் வைத்து அழுத்தவும். அதன் நடுவில் பலாப்பழப் பூரணத்தை வைத்து மாவால் மூடவும் (மோதகத்தை நன்றாக மூடவில்லையென்றால் வேகும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பிறகு, மோதகங்களை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

பலாச்சுளையைத் துருவுவதற்குப் பதிலாக மிக்ஸியில் பல்ஸ் மோடில் (Pulse mode) ஒரு நிமிடம் விட்டுவிட்டு அரைத்துத் தூளாக்கிக்கொள்ளலாம். பலாச்சுளை நன்கு பழுத்திருந்தால் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.

பேக்டு மோதகம்

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - 2 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

பாதாம், முந்திரி - தலா 10 (சிறிய துண்டுகளாக்கவும்)
உலர் தேங்காய்த் துருவல் (டெசிகேட்டடு கோகனட்) - 6 டீஸ்பூன்
பிரவுன் சுகர் - 3 டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

பேக்டு மோதகம்
பேக்டு மோதகம்

செய்முறை:

மைதா மாவுடன் 2 டீஸ்பூன் உருக்கிய நெய், உப்பு சேர்த்துப் பிசிறவும். அதனுடன் தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். மோதக மோல்டில் சிறிதளவு நெய் தடவி தேவையான அளவு மைதா மாவை வைத்து அழுத்தவும். அதன் நடுவே சிறிதளவு பூரணம் வைத்து, மைதா மாவால் சிறிய தட்டு போல் செய்து நன்றாக அழுத்தி மூடவும் (சரியாக மூடவில்லையென்றால் பேக் செய்யும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பேக்கிங் ட்ரேயில் சிறிதளவு நெய் தடவி மோதகங்களை இடைவெளிவிட்டு அடுக்கவும். இதை 180 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனில் வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்ததும் சூடாக இருக்கும்போதே அதன் மீது சிறிதளவு நெய் தடவவும்.

* இது 10 நாள்கள் வரை நன்றாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு