கட்டுரைகள்
Published:Updated:

எவர் கிரீன் டேஸ்ட்... விருதுநகர் எண்ணெய் பரோட்டா!

விருதுநகர் எண்ணெய் பரோட்டா!
பிரீமியம் ஸ்டோரி
News
விருதுநகர் எண்ணெய் பரோட்டா!

நாவூறும் விருதுநகர் எண்ணெய் பரோட்டாவின் வரலாறையும், வளர்ச்சியையும் இனி அவர் சொல்லிக் கேட்கலாம். “இந்தியாவுல கோதுமைப் பற்றாக்குறை வந்தப்போ மைதாவை இறக்குமதி செஞ்சு அதிலிருந்து தயாரிச்ச உணவுப்பண்டம்தான் பரோட்டா.

உணவு வகைகளில், ‘ஆசம்' டேஸ்ட்களுக்கு அடிக்கோடிட்டது பரோட்டா என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில், விருதுநகர் எண்ணெய் பரோட்டா, கோழி சால்னா காம்பினேஷனை சுவைக்காதவர்களே இருக்க வாய்ப்பில்லை. நம் சுவை மொட்டுகளை நன்கு விரியச் செய்து, விறுவிறுப்பாக சுவைக்கத் தூண்டும் விருதுநகர் எண்ணெய் பரோட்டாவுக்கு இந்தப் பாண்டிய தேசம் மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாடுமே அடிமை!

நன்றாய் சூடேறிய வட்டக்கல்லில் ஆவி பறக்கும் எண்ணெய்க்குள் ‘மூழ்கவா, மிதக்கவா’ என்ற பக்குவத்தில் பொரிக்கப்பட்ட மூன்று பரோட்டாவை, அடித்து நொறுக்கி வாழையிலையில் பரப்பி, ‘அண்ணனுக்கு கோழி சால்னாவும் தேங்காய்ச் சட்னியும் ஊத்துப்பா' எனப் பணியாள் சொல்லும்போதே நமக்கும் அதைச் சுவைக்கவேண்டுமென்று ஒரு கணம் தோன்றிற்று. இருந்தாலும் வாயில் ஊறிய தேனமுதத்தை விழுங்கிவிட்டு, கடமையைச் செய்ய கல்லாவை நோக்கி நகர்ந்தோம்.

மதிய வேளையில், ‘ஏய்... இந்தாப்பா, மாமாவுக்கு ரெண்டு சிக்கன்‌ பிரியாணி பார்சல் கட்டு, அந்தம்மாவுக்கு ஆறு எண்ணெய் பரோட்டா, ஒரு சில்லி சிக்கன், ரெண்டு ஆம்லெட் பார்சல் கட்டு' என பரபரப்பாய் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார் ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரான சிந்தா ஷேக். வணக்கத்தை வைத்துவிட்டு, வந்த வேலையைப் பார்க்கத் தொடங்கினோம்.

எவர் கிரீன் டேஸ்ட்... விருதுநகர் எண்ணெய் பரோட்டா!

நாவூறும் விருதுநகர் எண்ணெய் பரோட்டாவின் வரலாறையும், வளர்ச்சியையும் இனி அவர் சொல்லிக் கேட்கலாம். “இந்தியாவுல கோதுமைப் பற்றாக்குறை வந்தப்போ மைதாவை இறக்குமதி செஞ்சு அதிலிருந்து தயாரிச்ச உணவுப்பண்டம்தான் பரோட்டா. இத ரொம்ப காலமா எல்லாக் கடையிலேயும் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தாங்க. ஆனால், எண்ணெய் பரோட்டா விற்பனையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினது விருதுநகர்லதான். 1973-ல என் அப்பா முகமது சபிக் தான் அதைத் தொடங்கினார். அப்ப இந்த பஜார்ல எங்க கடையோட சேர்த்து மொத்தமே மூணு சாப்பாட்டுக் கடைதான் உண்டு. எங்க கடையைத் தவிர்த்து மற்ற ரெண்டு கடையிலும் அசைவம், பரோட்டா உண்டு. அதனால பரோட்டாவையே நாங்களும் கொடுத்தா வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாதுன்னு தோணுச்சு. அப்பா யோசிச்சிட்டே இருந்தாரு. அப்போ, சாதாரணமா இல்லாமல் எண்ணெய்ல பொரிக்கவிட்டு ‘பொரிச்ச பரோட்டா'வை நாம் வியாபாரம் பண்ணலாம்னு அப்பா ஐடியா குடுத்தார். கேட்கறதுக்குப் புதுசா இருந்தாலும், மக்கள் விரும்புவாங்களான்னு தெரியல. அதைச் செய்ய தயக்கமா இருந்துச்சு. இருந்தாலும், ஆண்டவனை நம்பி எண்ணெய் பரோட்டாவை அறிமுகம் செஞ்சோம். அதுக்குக் கோழி சால்னா குழம்போடு சேர்த்துத் தேங்காய்ச் சட்னி, எள் சட்னி, மல்லிச் சட்னின்னு மூணு விதமாக ‘சைடிஷ்' கொடுத்தோம். எதிர்பார்த்ததைவிட வியாபாரம் நல்லாவே போச்சு.

அடுத்த ஒரு வருஷத்துக்குள்ளேயே பொரிச்ச பரோட்டாவுக்கு எங்க கடை ஃபேமஸ் ஆகிடுச்சு. ஒரே நேரத்துல ஆம்லேட், சாதாரண பரோட்டா, தோசை, எண்ணெய் பரோட்டா இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ‘வட்டக்கல்' பயன்படுத்துற அளவுக்கு பிசியானோம். எங்க கடைக்குன்னே தனி வாடிக்கையாளர் கூட்டம் உருவாகிச்சு. வெளியூர்ல இருந்து புதுநபர்கள் வந்து எங்க கடையில பொரிச்ச பரோட்டாவை ருசிச்சு சாப்பிட்டுட்டுப் போகும்போது ‘ரொம்ப அருமையா இருந்துச்சு'ன்னு சொல்றப்போ அவ்வளவு பெருமையா இருக்கும்.

எவர் கிரீன் டேஸ்ட்... விருதுநகர் எண்ணெய் பரோட்டா!

அப்பறம் கொஞ்ச, கொஞ்சமா மற்ற கடைக்காரங்களும் எண்ணெய் பரோட்டாவைப் போட்டிக்கு அறிமுகப்படுத்தினாங்க. இப்போ தூத்துக்குடி மாவட்டத்திலேயும் இது பரவலா கிடைக்குது. ஆனா எங்களோட தனித்துவம்தான் இன்னைக்கும் எங்க வாடிக்கையாளர்களை எங்ககிட்ட தக்கவச்சிருக்கு. மற்ற கடைகள் போல, எடுத்த எடுப்பிலேயே வீசிவச்ச பரோட்டாவை எண்ணெய்க்குள்ள விட்டுப் பொரிக்க மாட்டோம். சூடான கல்லின் மேற்பரப்புல கொஞ்ச நேரம் பரோட்டாவை வச்சு ஈரப்பதத்தைக் காயவிட்டு அதுக்கப்புறம்தான் எண்ணெய்க்குள்ள இறக்குவோம். இதனால பரோட்டா, எண்ணெயை அதிகம் உறிஞ்சாது. நல்ல மொறுமொறுப்பும் கிடைக்கும். இந்த பரோட்டாவுக்குக் கோழி சால்னா, தேங்காய்ச் சட்னி வச்சு சாப்பிட்டா சும்மா ருசியும் அட்டகாசமா இருக்கும்’’ என்றார் அவர்.

என்ன ஃப்ரெண்ட்ஸ், விருதுநகர் எண்ணெய் பரோட்டா சாப்பிடத் தயாராகிட்டீங்களா! ம்ம்... சீக்கிரம் ஆரம்பிங்க..!

எவர் கிரீன் டேஸ்ட்... விருதுநகர் எண்ணெய் பரோட்டா!

செய்வது எப்படி?

நல்ல ருசியான பரோட்டா செய்றதுக்கு மாவைப் பதமாக, பக்குவமாகப் பிசையுறது ரொம்ப முக்கியம். தேவையான அளவு மைதாவில் அளவாக உப்புப் போட்டு, தேவையான அளவு எண்ணெய் ஊற்றிப் பிசையணும். பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகும்படி பிசையணும். இந்த மாவை 4 மணி நேரம் ஊறவிடணும். மாவு மிருதுவான பதத்துக்கு வந்தபிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டணும். அதேசமயம் எல்லா உருண்டைகள் மீதும் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் தடவி, ஒரு வெள்ளைத்துணியைத் தண்ணீரில் நனைச்சு அதுமேல போட்டு மூடி வைக்கணும்.

பின் 20 நிமிடம் கழிச்சு அகலமான பரோட்டாப் பலகையில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து வளர்த்து இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடிச்சு வட்டமா செஞ்சுக்கணும். இப்படி எல்லா உருண்டையையும் செஞ்சுவச்சு அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கணும். 15 நிமிடம் கழிச்சு அடுப்பில் கல்/தவாவை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டையையும் கைவிரல்களால் தட்டி எண்ணெயில் போட்டு இருபக்கமும் சிவக்கப் பொரித்து எடுத்தால் சூப்பரான எண்ணெய் பரோட்டா தயாராகிடும்.