Published:Updated:

மால்புவா, பாப்சிகல், கேக், கேண்டி, பனகோட்டா... ஆரஞ்சுப்பழத்தில் அட்டகாச வீக் எண்டு விருந்து

வீக் எண்டு ஸ்பெஷல்

ஆரஞ்சுப்பழம் இப்போது எல்லா நாள்களிலும் கிடைக்கிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஜூஸை தவிர வேறென்ன செய்துவிட முடியும்? இந்த வார வீக் எண்டை ஆரஞ்சு ஸ்பெஷலில் அசத்தத் தயாரா?

Published:Updated:

மால்புவா, பாப்சிகல், கேக், கேண்டி, பனகோட்டா... ஆரஞ்சுப்பழத்தில் அட்டகாச வீக் எண்டு விருந்து

ஆரஞ்சுப்பழம் இப்போது எல்லா நாள்களிலும் கிடைக்கிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஜூஸை தவிர வேறென்ன செய்துவிட முடியும்? இந்த வார வீக் எண்டை ஆரஞ்சு ஸ்பெஷலில் அசத்தத் தயாரா?

வீக் எண்டு ஸ்பெஷல்

எப்போதாவது சீசனில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த ஆரஞ்சுப்பழம் இப்போது எல்லா நாள்களிலும் கிடைக்கிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஜூஸை தவிர வேறென்ன செய்துவிட முடியும் என்று அதைத் தவிர்ப்பவர்களுக்காகவே இந்த ஸ்பெஷல் ரெசிப்பீஸ்... மால்புவா தொடங்கி, பாப்சிகல் வரை இந்த வார வீக் எண்டை ஆரஞ்சு ஸ்பெஷலில் அசத்தத் தயாரா?

ஆரஞ்சு மால்புவா

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்

ரவை, சர்க்கரை – தலா அரை கப்

சோம்பு – 2 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு டிரிங்க் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ச்சி ஆறவைத்த பால் – 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

ஆரஞ்சு மால்புவா
ஆரஞ்சு மால்புவா

செய்முறை:

ரவையுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பாலுடன் சோம்பு, ஆரஞ்சு டிரிங்க் பவுடர், சர்க்கரை, மைதா மாவு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஊறவைத்த ரவை, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும் (மிகவும் கெட்டியாகவோ மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது). வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சிறிது நேரம் ஆறவிட்டுப் பரிமாறலாம். அதிக இனிப்பு தேவைப்பட்டால் மேலே சிறிதளவு சுகர் சிரப் விட்டுப் பரிமாறவும்.

ஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல்

தேவையானவை:

தயிர் – அரை கப் (மூட்டைக்கட்டி தொங்கவிட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)

ஆரஞ்சுச் சாறு – அரை கப்

எலுமிச்சைச் சாறு – அரை கப்

ஆரஞ்சுத் தோல் துருவல் – அரை டீஸ்பூன்

எலுமிச்சைத் தோல் துருவல் – அரை டீஸ்பூன்

சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல்
ஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைத் தோல் துருவல், தயிர், எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.

பாப்சிகல் மோல்டில் கால் பங்களவுக்கு ஆரஞ்சுக் கரைசலை நிரப்பி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்க் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். மோல்டு நிறையும் வரை இதேபோல் மாற்றி மாற்றி செய்யவும். பிறகு மோல்டை குழாய் நீரில் சிறிது நேரம் காட்டி பாப்சிகலை மோல்டில் இருந்து வெளியே எடுத்துப் பரிமாறவும்.

ஆரஞ்சு சாக்கோ கேக்

தேவையானவை:

மைதா மாவு – 2 கப்

பொடித்த சர்க்கரை – ஒரு கப்

பேக்கிங் பவுடர் – இரண்டரை டீஸ்பூன்

ஆளி விதை – 2 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சுத் தோல் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டித் தயிர் – கால் கப்

காய்ச்சி ஆறவைத்த பால் – கால் கப்

ஆரஞ்சுச் சாறு – கால் கப்

எண்ணெய் – 1/3 கப்

உப்பு – கால் டீஸ்பூன்

ஆரஞ்சு எசென்ஸ் – அரை டீஸ்பூன்

செர்ரி (அ) உலர்திராட்சை – அரை கப்

சாக்கோ சிப்ஸ் – கால் கப்

வெண்ணெய் - சிறிதளவு

அலங்கரிக்க:

ஐசிங் சுகர் – முக்கால் கப்

ஆரஞ்சுச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு சாக்கோ கேக்
ஆரஞ்சு சாக்கோ கேக்

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரே அல்லது மோல்டுகளில் வெண்ணெய் தடவவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துச் சலிக்கவும். அதனுடன் ஆளி விதை, சர்க்கரை சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய், தயிர், பால், ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

அதனுடன் மைதா கலவை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு செர்ரி (அ) உலர் திராட்சைத் துண்டுகள், சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் ட்ரே அல்லது மோல்டுகளில் மைதா கலவையை ஊற்றவும். இதை அவனுள் வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுத்து ஆறவிடவும். (டூத்பிக்கால் குத்திப் பார்த்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து எடுக்கவும்). ஐசிங் சுகர், ஆரஞ்சுச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்தச் சிரப்பை கேக்கின் மேல் தெளித்துப் பரிமாறவும்.

ஆரஞ்சு பீல் கேண்டி

தேவையானவை:

ஆரஞ்சுப் பழத்தின் தோல் – ஒன்று (ஒரு பழத்தின் தோல்)

சர்க்கரை – அரை கப்

தண்ணீர் – அரை கப்

ஆரஞ்சு பீல் கேண்டி
ஆரஞ்சு பீல் கேண்டி

செய்முறை:

ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்துத் தோலை எடுத்து, தோலில் உள்ள நாரை நீக்கவும். தோலை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீருடன் ஆரஞ்சுத் தோல் துண்டுகள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, மீண்டும் பாத்திரத்தில் புதிதாகத் தண்ணீர்விட்டுத் தோல் துண்டுகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். இதே போல மூன்று முறை வேகவைத்து எடுத்து வடிகட்டவும் (தோலில் உள்ள கசப்புத்தன்மை நீங்கவே இவ்வாறு செய்யப்படுகிறது).

சர்க்கரையுடன் தண்ணீர்விட்டுச் சூடாக்கி சுகர் சிரப் தயாரிக்கவும். அதனுடன் ஆரஞ்சுத் தோல் துண்டுகள் சேர்த்து, தண்ணீர் வற்றி, துண்டுகள் சுகர் சிரப்பை நன்றாக உறிஞ்சிக்கொள்ளும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு பாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து, வயர் ரேக்கில் மூன்று நிமிடங்கள் அல்லது கேண்டி காயும் வரை வைத்து எடுக்கவும். மேலே சர்க்கரை தூவி 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்துச் சுவைக்கவும்.

குறிப்பு: இதை கேக் செய்யும்போது பயன்படுத்தலாம். துண்டுகளாக்கி, ஃப்ரூட் கேக் செய்யும்போது பயன்படுத்தலாம். காற்றுபுகாத டப்பாவில் சேகரிக்கவும். ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

ஆரஞ்சு பனகோட்டா

தேவையானவை:

காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்

ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்

கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்

ஆரஞ்சுச் சுளைகள் – சிறிதளவு (தோல், கொட்டை நீக்கவும்)

ஜெலட்டின் – ஒரு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – சிறிதளவு

ஆரஞ்சு எசென்ஸ் – சிறிதளவு

ஆரஞ்சுச் சாறு – ஒரு கப்

ஆரஞ்சு பனகோட்டா
ஆரஞ்சு பனகோட்டா

செய்முறை:

ஜெலட்டினுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் கண்டென்ஸ்டு மில்க், க்ரீம் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் ஜெலட்டின் கரைசல் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஆரஞ்சு எசென்ஸ், வெனிலா எசென்ஸ் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மோல்டுகளில் நிரப்பி ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

பானில் (pan) ஆரஞ்சுச் சாறுடன் சர்க்கரை, ஆரஞ்சுச் சுளைகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, கொஞ்சம் கெட்டியாகும் வரை ஆறவிடவும். மோல்டில் இருந்து பனகோட்டாக்களை வெளியே எடுத்து மேலே சிறிதளவு ஆரஞ்சுச் சாறு சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.