
‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் செஃப் தாமு...
சொந்தமாக ஒரு தொழில் என்றவுடன், உணவகம் என்பதே மூளை தரும் முதல் சாய்ஸ். ஆக, உணவகம் தொடங்கும் ஆர்வம் இருப்பவர்கள் அதில் வெற்றிபெற என்னென்ன செய்ய வேண்டும்?

உங்கள் உணவகம் தெருவிலா, பிரதான சாலையிலா அல்லது நெடுஞ்சாலையிலா எந்த இடத்தில் அமையப்போகிறது என்பது முக்கியம். அதைக் கொண்டுதான் நம் உணவகம் எந்த மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருக்கப் போகிறது என்பதைத் தீர்மானிக்க முடியும். சைவமா, அசைவமா, எந்த வகை உணவுகளை வழங்கப்போகிறோம் என முடிவு செய்துவிட்டு, அதற்கேற்றாற்போல் ஏதாவதொரு தீமின் கீழ் உணவகத்தை வடிவமைக்க வேண்டும். இதன் மூலம் நிறைய இளம் வாடிக்கையாளர்களைக் கவரலாம். இப்போதுள்ள வாடிக்கையாளர்கள் உணவகத்தில் உணவின் ருசியைத்தாண்டி வேறு சுவாரஸ்யமான அம்சங்களையும் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல், பார்க்கிங் வசதியும் மிக முக்கியமானது.
அடுத்ததாக, நீர் வசதி. நீர் இல்லாமல் உணவகம் மூடப்பட்ட சம்பவங்களை சமீபத்தில் பார்த்திருக்கிறோம். எனவே, தங்குதடை இல்லாத தண்ணீர் வசதியும் ஓர் உணவகத்திற்கு மிக முக்கியமான ஒன்று. தண்ணீரைத் தேவையான அளவு மட்டும் சிக்கனமாய்ப் பயன்படுத்துவது அதைவிட முக்கியமான ஒன்று. உணவகத்தின் உட்புறம் காற்றோட்டம் இருக்க வேண்டியது அவசியம். தரமான, ஈர்க்கும்படியான ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். உணவு அருந்த அசௌகரியமாக இருக்கும் ஃபர்னிச்சர்கள், எவ்வளவு கவர்ச்சிகரமாய் இருந்தாலும் தவிர்த்துவிடுங்கள். சமையல் செய்யும் கருவிகள் மற்றும் பாத்திரங்கள் தரமானதாக, பாதுகாப்பானதாகப் பார்த்து வாங்குங்கள்.

ஓர் உணவகம் நினைவுகூரப்படுவது அதன் ருசியைப் பொறுத்துதான். எனவே, திறமையான சமையல் கலைஞர்களைப் பணியில் அமர்த்துங்கள். என்னதான் உணவு ருசியாக இருந்தாலும், அதைச் சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்யவேண்டும். அதனால், நல்ல சர்வர்களைப் பணியில் அமர்த்துங்கள். மொத்தத்தில், செஃப்பில் ஆரம்பித்து பாத்திரம் கழுவுபவர் வரை திறமையான தொழிலாளர்களை வேலையில் அமர்த்துங்கள்.
மெனுவில் புதுமையைப் புகுத்துங்கள். அடிப்படையான உணவு வகைகளும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். எந்தெந்த உணவுகள் அதிகம் விற்கின்றன, எது உங்களது ஸ்பெஷாலிட்டியான உணவு, எந்தெந்த உணவுகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதைக் கவனித்து, மெனுவை அவ்வப்போது மாற்றி அமையுங்கள். உங்கள் உணவகம் அமையப்போகும் இடத்திற்கு ஏற்ப, உங்களின் வாடிக்கையாளர் யார் என்பதற்கேற்பவே உணவுகளை டிசைன் செய்யப்போகிறார்கள் என்றாலும், அதில் ஒரு தனித்துவத்தை, புதுமையைக் கூட்டுங்கள்.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால், உணவகத்திற்கு விளம்பரம் நிச்சயம் தேவை. சமூகவலைதளங்களை சமயோசிதமாய்ப் பயன்படுத்தி உணவகத்தை விளம்பரப் படுத்துங்கள். உள்ளூர் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுங்கள். புதிதாக உணவகம் ஆரம்பித்ததை முன்னிட்டு சிறப்புச் சலுகைகள் கொடுப்பது, உணவு விழாக்கள் நடத்துவது போன்ற முயற்சிகளை முன்னெடுக்கலாம். ருசியான உணவும் நல்ல சர்வீஸும் இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களே உங்களின் விளம்பரதாரர்களாக மாறிவிடுவார்கள். `சித்திரமும் கைப்பழக்கம்’ என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே அகலக்கால் வைக்காமல், பொறுமையாய்த் தொடங்குங்கள். கிடைக்கும் அனுபவங்கள் உங்களையும் உணவகத்தையும் உயர்த்தும்..!