Published:Updated:

கற்பனையில் உருவான இனிப்பு! திகட்டாத திருவையாறு அசோகா அல்வா

அசோகா அல்வா
பிரீமியம் ஸ்டோரி
News
அசோகா அல்வா

ராமய்யர் என்பவர்தான் இந்த ஸ்வீட் கடையை நடத்திவந்தார். அவர் செய்யற அல்வா இப்பகுதியில் ரொம்பவே பிரபலம்.

கைப்பக்குவத்தில் டேஸ்ட்டியா இருக்கும் உணவுகள் நிறைய இருக்கும். `வாவ், ரொம்ப நல்லா இருக்குது'ன்னு அதை நாம் சப்புக்கொட்டிச் சாப்பிட்டிருப்போம். ஆனால், கற்பனையில் உருவான ருசிமிகுந்த இனிப்பு பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?

கலைகள்தான் கற்பனையில் உருவாகும். சாப்பிடுகிற உணவும் கற்பனையில் உருவாகுமா என நீங்களும் எங்களை மாதிரியே ஆச்சர்யப்பட்டீங்கதானே..?

காவிரிக்கரையில் உள்ள புனிதத்தலமான திருவையாறு, தெற்கு வீதியில் அமைந்துள்ள ஆண்டவர் அல்வா கடையில் செய்யப்படுகிற `அசோகா அல்வா'தான் அவர்களின் கற்பனையில் உருவாகியிருக்கிறது. சுவையான காவிரித் தண்ணீரில் விறகு அடுப்பில் கைப்பக்குவத்துடன் செய்யப்படும் அசோகா அல்வாவின் ருசியும் மணமும் பலரையும் திருவையாறு நோக்கிச் சுண்டி இழுக்கிறது.

கற்பனையில் உருவான இனிப்பு! திகட்டாத திருவையாறு அசோகா அல்வா

எப்படி உருவானது இந்த `அசோகா அல்வா'? வாங்க இனிக்க இனிக்கத் தெரிஞ்சுக்குவோம்...

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, காவிரி ஆறு கடந்து செல்லக்கூடிய செழிப்பான பகுதி. பழைமையான, பாரம்பர்யமான நகரம் என்ற சிறப்பைப் பெற்ற திருவையாற்றின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக ஆண்டவர் அல்வாக் கடை மாறியிருக்கிறது. அந்த வழியாகச் செல்பவர்கள் அசோகா அல்வாவை ருசி பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். வாழை இலையில் அசோகா அல்வாவை சாப்பிடக் கொடுக்கிறார்கள். இலையின் மணம் அதன் சுவையை மேலும் கூட்டுகிறது.

கடையின் உரிமையாளரான கணேசமூர்த்தியின் மகள் மகேஷ்வரி வியாபாரத்தில் பிஸியாக இருந்தார். அவரிடம் பேசினோம்... ``ராமய்யர் என்பவர்தான் இந்த ஸ்வீட் கடையை நடத்திவந்தார். அவர் செய்யற அல்வா இப்பகுதியில் ரொம்பவே பிரபலம். `50 ஆண்டுகளுக்கு முன்பு ராமய்யர்கிட்ட இருந்து என் அப்பா கணேசமூர்த்தி கடையை வாங்கி நடத்தத் தொடங்கினார். வழக்கமான அல்வா எல்லோருக்கும் தெரிஞ்ச ஒன்றுதானே, அதையே நாம புதுசா ஏதாவது செய்தால் என்ன என்று நினைத்த அப்பாவின் கற்பனையில் உருவானதுதான் அசோகா அல்வா.

கற்பனையில் உருவான இனிப்பு! திகட்டாத திருவையாறு அசோகா அல்வா

வழக்கமான அல்வா செய்யபடுகிற அதே அடிப்படையில் சில புதுமைகளோடு `அசோகா அல்வா'வைச் செய்ய ஆரம்பிக்க, வியாபாரம் சூடு பறந்தது. எங்களுக்குத் தனிப் பெயரையும் பெற்றுத் தந்தது. இப்ப எல்லோரும் அசோகா அல்வா செய்து வந்தாலும் எங்க கடையில் மட்டும் தனிச் சுவையாக இருப்பதற்கு கைப்பக்குவமே காரணம்’’ என்றவர், அசோகா அல்வாவை எப்படிச் செய்கிறார்கள் என்பதையும் விவரித்தார்.

காவிரி ஆற்றுக்கு அருகிலேயே கடை அமைந்திருப்பதால் நிலத்தடியில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரே குழாயில் வருகிறது. ``எங்களோட கைப்பக்குவம், காவிரித் தண்ணீர், விறகு அடுப்பு இவை மூன்றின் கூட்டணியில் `அசோகா அல்வா' நாவை இனிக்க வைக்கிறது. வாயில் வைத்தாலே அதன் சுவை உடம்பு முழுக்கப் பரவுவது தெரியும். பாரம்பர்யம் மாறாமல் இப்போதுவரை விறகு அடுப்பில் மட்டுமே அசோகா அல்வா செய்கிறோம். வாழை இலையில் மட்டுமே சாப்பிடக் கொடுக்கிறோம்.

எந்த ஓர் உணவின் சுவையும், அதைச் செய்கிற கைப்பக்குவத்திலேயே அடங்கியிருக்கிறது. எங்க அசோகா அல்வா டேஸ்டாக இருப்பதற்குக் காரணம் அதுதான்’’ என்றவர் அசோகா அல்வாவை ருசி பார்க்கக் கொடுத்தார். நாங்க சாப்பிட்டுப் பார்த்துட்டோம், நீங்களும் ரசித்து, ருசித்துப் பாருங்க.

கற்பனையில் உருவான இனிப்பு! திகட்டாத திருவையாறு அசோகா அல்வா

தேவையான பொருள்கள்: பாசிப்பருப்பு, மைதா மாவு, பால்கோவா, உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, சாரப்பருப்பு, நெய், உலர்திராட்சை, சர்க்கரை, கல்கண்டு, ஏலக்காய்த்தூள்.

விறகு அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி, பாசிப்பருப்பை வேக வைக்க வேண்டும். நன்கு வெந்து ஜாம் மாதிரி மாறிய பிறகு எண்ணெய்ச் சட்டியில் போட வேண்டும். அதில் தேவையான அளவு நெய் ஊற்றி மைதாவைப் போட்டுக் கிளற வேண்டும். இதில் துளிகூட எண்ணெய் சேர்ப்பது இல்லை, முழுக்க முழுக்க நெய்யில் மட்டுமே செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், சர்க்கரை, முந்திரி, பாதாம், பிஸ்தா, கல்கண்டு என ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் போட்டு பெரிய கரண்டியை வைத்து கட்டி பிடிக்காத வகையில் கிளற வேண்டும். கலருக்காக சிறிது ஆரஞ்சு பவுடர் சேர்க்க வேண்டும்.

ஊற்றப்பட்ட நெய் கொப்பளிக்கும் வரை கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் கழித்து இறக்கினால் ஆவி பறக்க சூடான சுவையான `அசோகா அல்வா’ ரெடியாகிவிடும்.