Published:Updated:

மதுர மக்கள்: புரோட்டா போட ஒரு கோச்சிங் சென்டர்; அந்த ஐபிஎல் விளம்பரம்?! - இது முகமது காசிம்மின் கதை

மதுர மக்கள் | புரோட்டா கோச்சிங் சென்டர்
News
மதுர மக்கள் | புரோட்டா கோச்சிங் சென்டர்

"பதினஞ்சு வயசுல இருந்து அறுபத்தஞ்சு வயசு வரைக்கும் ஆளுங்க வந்து சேருறாங்க. இங்க ஆண் பெண் பேதமில்ல. எந்தக் கல்வித்தகுதியும் தேவையில்ல... கேட்டரிங் முடிச்ச இளைஞர்கள் வர்றாங்க."

Published:Updated:

மதுர மக்கள்: புரோட்டா போட ஒரு கோச்சிங் சென்டர்; அந்த ஐபிஎல் விளம்பரம்?! - இது முகமது காசிம்மின் கதை

"பதினஞ்சு வயசுல இருந்து அறுபத்தஞ்சு வயசு வரைக்கும் ஆளுங்க வந்து சேருறாங்க. இங்க ஆண் பெண் பேதமில்ல. எந்தக் கல்வித்தகுதியும் தேவையில்ல... கேட்டரிங் முடிச்ச இளைஞர்கள் வர்றாங்க."

மதுர மக்கள் | புரோட்டா கோச்சிங் சென்டர்
News
மதுர மக்கள் | புரோட்டா கோச்சிங் சென்டர்

”தாத்தா காலத்தில இருந்தே எல்லாருக்கும் ஓட்டல்தான் தொழிலே. தாத்தா, அப்பான்னு அவுங்ககிட்ட இருந்து நானும் தொழில் கத்துக்கிட்டேன். இன்னைக்கு தேதிக்கு புரோட்டா மாஸ்டருக்கு இருக்கிற டிமாண்ட், அப்பப்ப வர்ற விளம்பரங்கள பார்த்தாலே உங்களுக்குப் புரியும். புரோட்டா மாஸ்டருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் அறுநூறு ரூபாய்ல இருந்து ஆயிரத்து இருநூறு வரைக்கும் கிடைக்குது. சம்பளம் குடுக்க ஆள் இருந்தாலும் வேலைக்கு ஆள் கிடைக்கிறதில்ல. அதனால நாமளே ட்ரெயினிங் குடுக்கலாம்னு மூணு வருசத்துக்கு முன்ன செல்பி புரோட்டா கோச்சிங் சென்டர்னு ஆரம்பிச்சேன். வருஷத்துக்கு முந்நூறுல இருந்து ஐந்நூறு பேரு வரைக்கும் தொழில் கத்துக்கிட்டு வெளிய போயி நல்ல சம்பளத்துல இருக்காங்க. மனசுக்கு சந்தோசமா இருக்கு’’ எனப் பூரிப்புடன் பேசத் தொடங்குகிறார். மதுரையில் புரோட்டா மாஸ்டருக்கான கோச்சிங் சென்டர் நடத்திவரும் முகமது காசிம்.

புரோட்டா போட கோச்சிங் சென்டர்... ஐடியாவே வித்தியாசமா இருக்கு. எப்படி இருந்துச்சு ஆரம்பக்கால நாள்கள்?

ஐபிஎல் விளம்பர ஷூட்
ஐபிஎல் விளம்பர ஷூட்

மதுரைல கூடல்நகர்லதான் எனக்கும் சொந்தமா ஓட்டல் இருக்கு. அதுக்கு முன்ன ரோட்டுக்கடைல இருந்து ஸ்டார் ஓட்டல் வரைக்கும் மாஸ்டரா வேல பார்த்திருக்கேன். என்னோட கடைக்கு மாஸ்டர் வரலைன்னா நானே புரோட்டா மாஸ்டாரகிப்பேன். ஆளும் யாரும் கிடைக்கிறது இல்ல. நாளு பேருக்குக் கத்துக்குடுக்கலாம். கோச்சிங் சென்டர் மாதிரி வைக்கப்போறேன்னு சொன்னப்ப எங்க வீட்டுலயே என்னய வித்தியாசமாப் பார்த்தாங்க. ஆனாலும் நான் விடாப்பிடியா நின்னேன். வெறும் தொண்ணூறு ரூபாய் வச்சு, பிட் நோட்டிசு அடிச்சு நானே விநியோகம் பண்ணினேன். இருபத்தஞ்சு பேரு வந்தாங்க. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்னு ஒரு மாசம் பயிற்சி, ஆயிரம் ரூபாய்க் கட்டணத்துல ஆரம்பிச்சேன். இப்போ தினம் காலையில ரெண்டு மணி நேரம், சாயாங்காலம் ரெண்டு மணி நேரம்னு பத்தே நாள்ல பக்காவான புரோட்டா மாஸ்டரை உருவாக்கி அனுப்பிடுறோம்.

புரோட்டாவுக்கு அப்படி என்னென்ன கோச்சிங் கொடுக்கிறீங்க..?

இங்க 90 சதவிகிதம் செயல்முறைப் பயிற்சியும் பத்து சதவிகிதம் தியரியும் சொல்லிக்குடுக்குறோம். புரோட்டான்னா வெறும் புரோட்டா மட்டும் இல்ல. பன் புரோட்டா, வீச்சு புரோட்டா, கொத்து புரோட்டா, ரோல் புரோட்டான்னு பன்னிரண்டு வகைக்கும் சொல்லிக்குடுக்குறோம். கூடவே தோசை, கறி தோசைன்னு எக்ஸ்ட்ராவாவும் சொல்லிக்குடுக்குறோம்.

புரோட்டா கோச்சிங் சென்டர் முகமது காசிம் மற்றும் நண்பர்கள்
புரோட்டா கோச்சிங் சென்டர் முகமது காசிம் மற்றும் நண்பர்கள்

மைதா மாவையே நீங்க பார்த்ததில்லையா, பரவாயில்லை, கத்துக்க ஆர்வம் இருந்தா பத்து நாள் போதும். முதல் ரெண்டு மூணு நாளைக்கு உங்களுக்கு மாவு செட்டே ஆகாது. எப்படிப் பதம் பார்க்கணும் என்ன அளவுல உப்பு சேர்க்கணும் எவ்வளவு தண்ணி ஊத்தணும்னு ஒரு கணக்கப் புடிச்சிட்டீங்கனாவே மாவுக்கும் உங்களுக்கும் ஒரு பிணைப்பு வந்துரும். நீங்க மாவுல எந்த அளவுக்கு கவனம் செலுத்துறீங்களோ அதே அளவுக்கு புரோட்டா போடுற கல்லு மேலயும் கவனம் இருக்கணும். எந்த அளவு சூட்டுல எப்ப எப்டி திருப்பணும்னு தெரிஞ்சுக்கணும். இதுபோக, மாவு பிசைவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி உடற்பயிற்சி முறைகளையும் நடத்திவர்றோம். துணி துவைக்கிற முறையைப்போல மாவு பிசைவதற்குப் பயிற்சிகளையும் குடுக்கிறோம்.

எப்படி இருக்கு வரவேற்பு?

பதினஞ்சு வயசுல இருந்து அறுபத்தஞ்சு வயசு வரைக்கும் ஆளுங்க வந்து சேருறாங்க. இங்க ஆண் பெண் பேதமில்ல. எந்தக் கல்வித்தகுதியும் தேவையில்ல. கேட்டரிங் முடிச்ச இளைஞர்கள் வர்றாங்க. ஐடில லட்சங்கள்ல சம்பளம் வாங்குனவங்க கேட்டரிங்க மையமா வச்சு புதிய தொழில் முனைவோராக விருப்பமுள்ளவங்க வர்றாங்க. முழுக்க முழுக்க பிராக்டிகல் அதிகமா இருக்கு. அதனால மாவுச் செலவே அதிகமா இருக்கு. இப்போ நாலாயிரம் ரூபா கட்டணமா வாங்கிட்டிருக்கோம். எனக்கு சப்போர்ட்டா நாகா ஸ்கில் சென்டர்கூட இணைஞ்சு இன்னும் பெருசா பண்ணிட்டிருக்கேன்.

புரோட்டா கோச்சிங் சென்டர் முகமது காசிம் மற்றும் நண்பர்கள்
புரோட்டா கோச்சிங் சென்டர் முகமது காசிம் மற்றும் நண்பர்கள்

வீட்டுல புரோட்டா போட்டா மிருதுவா வர்றதுக்கு ஒரு டிப்ஸ் கொடுங்களேன்?

ஒரு கிலோ புரோட்டா மாவுக்கு இருபது கிராம் உப்பு, 550 மில்லி தண்ணி விட்டுப் பிசைஞ்சு, சரியான பக்குவத்துல மாவ உப்ப வச்சு ஊற வச்சு, வீசி எடுத்தோம்னா மிருதுவான புரோட்டா தயார். என்ன பக்குவத்துல மாவ ஊற வைக்கிறோம், உப்ப வைக்கிறோம்ங்கிறதுலதான் மாஸ்டரோ மேஜிக் இருக்கு.

ஐபிஎல் விளம்பர வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

விளம்பரத்துல புரோட்டோ மாவை தூரத்துல இருந்து கல்லுல வீசுறதுக்கு ஆள் தேடிட்டிருந்திருக்காங்க. வழக்கமா இது வேளாங்கண்ணி பகுதில உள்ள கடைகள்ல சில மாஸ்டர்கள் பண்ணுவாங்க. ஆனா அவுங்க யாரும் ஷூட்டிங்குக்கு வரலன்னும் சொன்னதோட இல்லாம, வேற எங்கயும் ஆளு இ்ல்லைன்னும் சொல்லியிருக்காங்க. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜன்ட் டீம்ல இந்த விசயத்த கேள்விப்பட்ட நண்பர்தான் என்னய அவுங்களுக்குச் சொல்லிருக்காரு. ஒரு ட்ரையல் வீடியோ அனுப்பச் சொன்னாங்க. அனுப்புன உடனே சென்னைக்கு ஷூட்டிங் வரச் சொல்லிட்டாங்க. 'சூரரைப் போற்று' படத்தோட கேமரா மேன்தான் இந்த விளம்பரத்துக்கும் கேமரா மேன். டைரக்‌ஷன் டீமில் எல்லாரும் ரொம்ப ஹேப்பி. எனக்கும்தான்.

ஐபிஎல் விளம்பர ஷூட்
ஐபிஎல் விளம்பர ஷூட்

எதிர்கால பிளான் என்ன?

இருபதாயிரம் இருந்தா தள்ளுவண்டில ஓட்டல் போட்டுப் பொழைச்சுக்கலாம். கையில காசே இல்லையா, தினம் எண்ணூறு ரூபா சம்பளம்னு வேலைக்குப் போயி பொழைச்சுக்கலாம். வாழ ஆயிரம் வழி இருக்கு, அதுக்கு நாம ரெடியா இருக்கோமான்னுதான் நம்மளக் கேட்டுக்கணும். அப்படி வந்தவங்க எல்லாரும் இப்போ வெளில போயி கைநிறைய சம்பாதிக்கிறேன்னு சொல்றப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்பவே சென்னை, தெலங்கானா, கேரளான்னு வெளி மாநிலத்துல இருந்தெல்லாம் ஆளுங்க வர்றாங்க. இப்போ மதுரைல இருக்கிற இந்தப் பயிற்சி நிறுவனத்த இன்னும் தமிழ்நாட்டுல கோவை, சென்னைன்னு விரிவுபடுத்தணும். இதான் ஆசை.