லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

‘வேளாவேளைக்குச் சாப்பிட லைன்னா அல்சர் வந்துடும்...’ என்ற எச்சரிக்கையையும் கேட்கிறோம்.

‘பசித்தபின் புசி’ என்றும் படித்திருக்கிறோம்.

நேரத்துக்குச் சாப்பிடுவது சரியா...

பசியெடுத்த பிறகு சாப்பிடுவது சரியா...

எது எடைக்குறைப்புக்கு உதவும்?

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!

அவள் விகடன் வாசகி ஒருவர் சமீபத்தில் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருந்தார். நம்மில் பலருக்கும் இதே சந்தேகம் உண்டு. தவிர சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது, சர்க்கரை சேர்த்த உணவுகளை அறவே தவிர்ப்பது போன்றவை எடைக்குறைப்புக்கு உதவுமா போன்ற சந்தேகங்களையும் சிலர் கேட்டிருந்தனர். அனைத்துக்குமான விளக்கங்கள் இங்கே...

சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது...

உங்கள் உயிரியல் கடிகாரம், வளர்சிதை மாற்றம், செரிமானத் திறன்... இவை மூன்றும் வேறு வேறு மாதிரி இயங்கக்கூடியவை. அதாவது என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம் என்பதே இதன் அர்த்தம்.

உணவு உட்கொள்ளும் நேரத்துக்கும், அன்றைய தினம் முழுவதும் ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உதாரணத்துக்குக் காலையில் சீக்கிரம் உணவு உண்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் குறைவான அளவு உணவே உண்பார்கள். அதுவே தாமதமாக உணவு உட்கொள்பவர்கள், அன்றைய நாள் முழுவதும் அதிக அளவில் உணவு உட்கொள்வார்கள். காலையில் உணவருந்தும்போது வயிறு நிறைந்த உணர்வை முழுமையாக உணர முடியும். அதன் தொடர்ச்சியாக அந்த நாள் முழுவதும் குறைவான அளவே உட்கொள்ளவும் அது வழிசெய்யும். அதுவே இரவில் தாமதமாக உட்கொள்ளும்போது அந்த திருப்தி உணர்வும் வயிறு நிறைந்த உணர்வும் ஏற்படுவதில்லை. அதன் தொடர்ச்சியாக உணவின் மீதான தேடலும் அதிக அளவில் உட்கொள்வதும் தொடர்கிறது.

உணவு உட்கொள்ளும் நேரமானது முறை தவறும்போது அது நம் உடலின் உயிரியல் கடிகாரச் சுழற்சியை பாதிக்கும். அது உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளையும் பாதிக்கும். இது டைப் 2 டயாபடீஸ், இதயநோய்கள் மற்றும் பருமன் எனப் பலவிதமான பிரச்னைகளுக்கும் காரணமாகும்.

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் மூலக்கூறின் கடிகாரம் இருக்கிறது. உடலுக்குள் நடைபெறும் ஒவ்வோர் இயக்கம் மற்றும் நடத்தையின் நேரத்தையும் அந்தக் கடிகாரம்தான் முறைப்படுத்துகிறது. அதாவது, ஹார்மோன்கள் மற்றும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்களின் வெளியேற்றம் முதல் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுவரை எல்லாவற்றையும். உங்களுக்கு அதிகமான தூக்கம் வருவது, மன அழுத்தம், அதீத ஜாக்கிரதை உணர்வு போன்றவற்றைக்கூட இதுவே முறைப்படுத்துகிறது.

உணவிலிருந்து கொழுப்புகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் போன்ற சிக்கலான செயல்முறைகளுக்கு குடல், கல்லீரல், கணையம், தசை மற்றும் கொழுப்புத் திசுக்களில் நிகழும் ஏராளமான செயல்முறைகளின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.

இன்சுலின் தொடர்பான நம் உணர்திறன் தான் நாம் உண்ணும் உணவிலுள்ள குளூக்கோஸானது நம் செல்களுக்குள் நுழைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலாகப் பயன்படச் செய்கிறது. இந்த இயக்கமானது இரவைவிட காலையில் சிறப்பாக இருக்கும். நேரம் கடந்து உண்ணும்போது உணவிலுள்ள குளூக்கோஸானது ரத்தத்தில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். அது அதிகரிக்க அதிகரிக்க டைப் 2 டயாபடீஸுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

பெரும்பாலான தருணங்களில் நாம் உணர்வுகளில் ஏற்படும் தடுமாற்றத்தையும், சில உணவுகளின் மீதான தேடல்களையும் பசி உணர்வு எனத் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு.

பசித்தபின் சாப்பிடுவது...

உடல் உணர்த்தும் அடிப்படையான அறிகுறிகளில் முக்கியமானது பசி. சாப்பிடுவதற்கான நேரம் வந்துவிட்டதை வயிறே நமக்குப் பரிச்சயமான சத்தத்துடன் தெரியப்படுத்தும். கிரெலின் என்ற ஹார்மோன், கணையம் மற்றும் வயிற்றின் உட்புற லைனிங் பகுதிகளில் உற்பத்தியாகிறது. அதுதான் பசி உணர்வை ஏற்படுத்துகிறது.

ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் உண்டாலும் சரி, அதுவே ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட்டாலும் சரி... வயிறு போதும் என்று சொன்னால் அதை கவனிக்கத் தவறாதீர்கள்.

பசி உணர்வை கவனித்துச் சாப்பிடுவதைப் போலவே, `போதும்' என்ற உணர்வையும் கவனித்து நிறுத்திக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

பெரும்பாலான தருணங்களில் நாம் உணர்வுகளில் ஏற்படும் (பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டும்) தடுமாற்றத்தையும், சில உணவுகளின் மீதான தேடல்களையும் பசி உணர்வு எனத் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு. சுருக்கமாகச் சொல்வதென்றால், உடலின் சிக்னலுக்கு மதிப்பளியுங்கள். பசிக்கும்போது சாப்பிடுங்கள்... போதும் என்ற உணர்வு ஏற்படும்போது நிறுத்திக்கொள்ளுங்கள்.

உணவின்போது தண்ணீர் அருந்துவது சரியானதா?

தண்ணீரில் கலோரிகள் கிடையாது. உணவு மற்றும் திரவங்களின் முறையற்ற காம்பினேஷன் என்பது உங்கள் எடைக் குறைப்பு முயற்சிகளை பாதிக்கலாம். காரணம், நச்சு நீக்கச் செயல்பாட்டில் அவை ஏற்படுத்துகிற விளைவு. உடலின் நச்சு நீக்கம் என்பது கல்லீரல், செரிமானப் பாதை, சிறுநீரகங்கள், நிணநீர் இயக்கம் மற்றும் சருமம் என அனைத்தும் சம்பந்தப்பட்டது. இது முறையாக நடைபெற வேண்டுமானால் உணவு இடைவெளிகளில் நீர் அருந்துவதே சரி. பலரும் சாப்பிடும்போது கூடவே நீர் அருந்துவார்கள். இது செரிமானத்துக்குக் காரணமான நொதிகளை நீர்க்கச் செய்துவிடும். உணவை முறையாக செரிக்க இயலாமல் வயிறு உப்பிக்கொள்ளும். செரிமானமாகாத உணவுகள் உடலால் சரியாக கிரகிக்கப்படாமல் போகும். எனவே, உணவு உட்கொள்ளும்போது தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் அருந்தலாம். தினமும் மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

உணவு உட்கொள்ளும்போது இடை யிடையே நீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படக் காரணம் அதிகமாக வேகவைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளே. அவற்றில் நொதிகளும் நீர்ச்சத்தும் குறைவாக இருப்பதன் விளைவு இது.

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

உணவிலிருந்து சர்க்கரையை முழுவதுமாகத் தவிர்ப்பது சரியா?

சர்க்கரை மற்றும் இனிப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அது இன்னும் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை மூளையில் ஏற்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரைக்கும் இயற்கையான சர்க்கரைக்கும் வித்தியாசம் உண்டு. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகம் சாப்பிடும்போது அது தலைவலி, குறைந்த எனர்ஜி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

சர்க்கரையைத் தவிர்ப்பதால் எடை குறையுமா?

எடை குறையும். அது மட்டுமல்ல...

  • சருமப் பளபளப்பு கூடும்.

  • ஆற்றல் அதிகரிக்கும்.

  • வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேராது.

  • நீரிழிவு அபாயம் குறையும்.

  • கவனத்திறன் கூர்மையாகும்.

  • ட்ரைகிளிசரைடு எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

  • இதயநோய்களுக்கான அபாயம் குறையும்.

  • முழுமையான உணவுகளின்மீதான தேடல் அதிகரிக்கும்.

  • பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

சில மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவால் எடை அதிகரிப்பைத் தவிர்க்க முடியுமா?

மருந்துகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் எடை அதிகரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு.

சில மருந்துகள் பசி உணர்வைத் தூண்டுவதால் அதிகம் சாப்பிடத் தோன்றும், அதன் விளைவாக எடை கூடும்.

சில மருந்துகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். அதனால் கலோரிகள் எரிக்கப்படுவது தாமதமாகி எடை அதிகரிக்கும்.

இன்னும் சில மருந்துகள் சர்க்கரைச் சத்தையும், பிற ஊட்டங்களையும் உடல் கிரகித்துக்கொள்ளும் முறையை பாதிக்கும்.

வேறு சில மருந்துகள் சோர்வையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதனால் உடற்பயிற்சி செய்வது தவிர்க்கப்படும். இதனாலும் எடை அதிகரிக்கலாம்.

சில மருந்துகள் உடலில் நீர்ச்சத்தைத் தேக்கிவைப்பவை.

மருந்துகள் எடுத்துக்கொள்ளும் முன்பு அவை ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகளைப் பற்றியும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

(நம்மால் முடியும்!)