
டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
உலக சுகாதார நிறுவனத்தின் 2016-ம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி உலக அளவில் 40 சதவிகிதம் பேர் அதிக பருமன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இதில் அதிர்ச்சியளிக்கிற தகவல் என்ன தெரியுமா? பருமனில் முன்னணியில் இருக்கும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னேறிக்கொண்டிருப்பதுதான். `பருமனாக இருந்தால்தான் என்ன' என்ற விவாதங்கள் ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. `பருமன் ஏன் கூடாது' என்பதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. பருமனான பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, இதய நோய்கள், மெனோபாஸுக்குப் பிறகான மார்பகப் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவை தாக்கும் ஆபத்துகள் மிக அதிகம்.

`பருமனைத் தவிர்க்க முடியும் என்பது நல்ல செய்தி. சொல்வது சுலபமாக இருக்கலாம். கேட்கும்போது எங்களுக்கும் பருமனைத் தவிர்ப்பதொன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், நடைமுறை வேறாக இருக்கிறது. எடையைக் குறைக்க நாங்கள் முயலாத விஷயமே இல்லை. டீடாக்ஸ் டிரிங்க் குடிப்பது முதல், உடற்பயிற்சி, பட்டினி கிடப்பதுவரை எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிட்டோம். ஆனால், எடை மெஷினில் ஏறி நின்றால் எடை காட்டும் முள்ளானது வலப்பக்கம் நோக்கித்தான் நகர்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லையே’ என்பது போன்ற புலம்பல்களை எங்களைப் போன்ற டயட்டீஷியன்கள் தினம் தினம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
எடைக்குறைப்புக்கு ஏதேதோ முயற்சிகளைச் செய்துபார்த்த நீங்கள், எப்போதாவது நீண்டகால விரத முறையைப் பின்பற்றிப் பார்த்திருக்கிறீர்களா... எடையைக் குறைக்கப் போராடிக்கொண்டிருக்கும் பலருக்கும் விரதம் என்பது அற்புதமான பலன்களைத் தரும் என்பது தெரிந்திருக்காது. ஆனால், அந்த விரதமானது முறையாக, ஆரோக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
எடைக்குறைப்புக்கும் விரதத்துக்கும் என்ன தொடர்பு?
விரதமிருந்துவிட்டு உண்ணும்போது உடல் தன் குறைகளைப் புறந்தள்ளிவிட்டு, புதிய ஆரோக்கியத்துக்குத் திரும்புவதாகச் சொல்கிறார் அமெரிக்காவின் இயற்கை மருத்துவர் ஹெர்பெர்ட் எம்.ஷெல்டன். விரதமிருப்பதால் இளமை திரும்புவது முதல் மூளையின் ஆரோக்கியம் மேம்படுவதுவரை உங்கள் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான நன்மை எடைக்குறைப்பு. அந்த மேஜிக் எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம்.

விரதமிருக்கும்போது உடல் ஹார்மோன்கள் முறைப்படுத்தப் படுகின்றன. பருமனாக இருப்பவர்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பும் இயக்கமும் கட்டுப்பாடற்று இருக்கும். விரதமிருப்பதால் அவை முறைப்படுகின்றன. எப்படி?
இன்சுலின் அளவுகள் குறைகின்றன!
பருமன் பிரச்னை உள்ள பலருக்கும் அவர்களது ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். உடலில் எந்த ஒன்று அளவு கடந்தாலும், உடலானது அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்தும். அந்த அடிப்படையில் பருமனானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத்திறன் உருவாகும். உடலில் சுரக்கும் இன்சுலினைப் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும்.
சரி, அதற்கும் எடைக்குறைப்புக்கும் என்ன தொடர்பு?
கடுமையான உடற்பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் மேற்கொண்ட பிறகும் எடையைக் குறைக்க முடியாததன் பின்னணியில் இன்சுலின் ரெசிஸ்டன்ஸுக்கு முக்கியப் பங்குண்டு. எனவே, இந்த வகையினரின் முதல் இலக்கு இன்சுலின் அளவைக் குறைத்து, அதன் மூலம் எடைக்குறைப்பை சாத்தியமாக்குவதாகவே இருக்க வேண்டும்.
சாதாரணமாகச் சாப்பிடும்போது நம் உடலில் இன்சுலின் சுரக்கும். இது ஏற்கெனவே உடலில் உள்ள அதிகப்படியான இன்சுலின் சுரப்புக்கு சுமையை ஏற்றுவதாகவே அமையும். விரதமிருக்கும்போது இன்சுலின் சுரப்பு இருக்காது. அதிலும் நீண்டகால விரதமிருக்கும்போது உடலில் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ரிவர்ஸ் செய்யப்படும். வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன் அளவுகள் அதிகரிக்கும்.
எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்போது குரோத் ஹார்மோன் (Growth Hormone) சுரப்பானது 80 சதவிகிதம்வரை தடைப்படும் என்கின்றன ஆய்வுகள். இந்த ஜி.ஹெச் (GH) உடல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கை வகிப்பது. வலுவான எலும்புகள் மற்றும் தசைகளின் உருவாக்கத்துக்கு முக்கியமானது. கொழுப்பைக் கரைப்பதிலும், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதிலும் பெரிய அளவில் உதவுபவை. இந்த ஹார்மோன் குறைவாக இருக்கும்போது உடலில் கொழுப்பு சதவிகிதம் அதிகரிப்பதுடன், தசை அடர்த்தியும் எலும்புகளின் அடர்த்தியும் குறையும். பல விளையாட்டு வீரர்களும், பாடி பில்டர்களும், உடற்பயிற்சி பிரியர்களும் செயற்கையாக இந்த ஹார்மோனை எடுத்துக்கொள்வதுண்டு. தசைகளைத் திரளச் செய்து, கொழுப்பைக் குறைத்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போட அவர்கள் இதைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இது மிகவும் ஆபத்தானது. விரதமிருக்கும்போது இந்த ஜி.ஹெச் உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் என்பது ஆச்சர்யமான தகவல். எனவே, ஆரோக்கியமான உடலைப் பெறவும் இளமையாக இருக்கவும், பருமனைத் தவிர்க்கவும் விரதமிருப்பதை முறையாகப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
அட்ரீனலின் அளவுகள் அதிகரிக்கும்
விரதமிருக்க ஆரம்பித்த முதல் இரண்டு, மூன்று நாள்களுக்கு உடல் சோம்பேறித்தனமாக உணரும். ஆனால், அதைக் கடந்துவிட்டால், உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒரு புத்துணர்வு ஒட்டிக்கொண்டதை உணரலாம். அன்றாட நடவடிக்கைகளில் முன்பு இல்லாத சுறுசுறுப்பையும் எனர்ஜியையும் உணர்வீர்கள். காரணம், விரதம். விரதமிருக்கும்போது உடலில் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கும். விரதமிருக்கும்போது அதிகரிக்கும் அட்ரீனலின் சுரப்பானது உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை உடைத்து எனர்ஜியை அதிகரிக்கும். உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்படும்.

விரதமிருக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
சரியாக, முறையாக மேற்கொள்ளப்படுகிற விரதம் வியத்தகு பலன்களை உங்களுக்குத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
சரிவிகித ஊட்டம்
விரதத்தைத் தொடங்கும்முன் உணவுப் பழக்கம் முறைப்படுத்தப்பட வேண்டும். சரிவிகித ஊட்டமுள்ள உணவுப்பழக்கம் அவசியம். அப்போதுதான் விரதமிருப்பதால் ஏற்படும் திடீர் மயக்கம், ரத்தச் சர்க்கரை அளவில் மாறுதல், சோம்பேறித்தனம் போன்றவை தவிர்க்கப்படும். மைதா, வெள்ளை சாதம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்து, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்த பிரவுன் ரைஸ், சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி, தூயமல்லி அரிசி, கீன்வா போன்றவற்றுக்கு மாறலாம். தால், பனீர், டோஃபு, முட்டை; மீன், சிக்கன், இறைச்சி, தயிர் போன்று புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஃபிளாக்ஸ், சியா, பூசணி, சூரியகாந்தி விதைகள், நட்ஸ், செக்கில் ஆட்டிய எண்ணெய், மீன் எண்ணெய், அவகேடோ போன்று ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பலவண்ண காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் அன்றாடத் தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.
நல்ல நார்ச்சத்துகளை மறந்துவிடாதீர்கள்
நார்ச்சத்தானது ரத்தச் சர்க்கரையின் அளவை முறைப்படுத்தி, நீண்ட நேரத்துக்குப் பசியின்றி வைக்கும். நார்ச்சத்து குறைவான உணவு, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். விரதமில்லாத நேரத்தில் வெள்ளரிக்காய், எளிதில் கிடைக்கும் காய்கறி சாலட், கொத்தமல்லி - புதினா சட்னி, பழத்துண்டுகள், மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள், ஃபிளாக்ஸ். சியா, மெலன் மற்றும் பூசணி விதைகளைச் சாப்பிடலாம்.
நீர்ச்சத்து முக்கியம்
விரதமிருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் உடல் அதன் அத்தியாவசியப் பணிகளைச் செய்வதற்கு தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம். வியர்வை, சிறுநீர் உள்ளிட்ட வழிகளில் வெளியேறும் பின்வரும் வழிகளில் நீர்ச்சத்து மற்றும் தாதுச்சத்து இழப்பை ஈடுகட்டலாம்.
குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்கலாம்
வெள்ளரிக்காய், தக்காளி, தர்பூசணி, கீரை, சுரைக்காய், பூசணிக்காய், சிட்ரஸ் வகை பழங்கள், வாழைப்பழம் போன்று நீர்ச்சத்தும் தாதுச்சத்துகளும் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். நீர்மோர், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், இளநீர் போன்றவற்றை அருந்தலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிருங்கள்
விரதமிருப்பதன் மூலம் உண்மையான பலன்களைப் பெற விரும்பினால் விரதமல்லாத நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். சமோசா, கட்லட், வடை, பஜ்ஜி, போண்டா, கேக், டோனட்ஸ், சர்க்கரை சேர்த்த பானங்கள் போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குடல் ஆரோக்கியம் முக்கியம்
குடலை நம் இரண்டாவது மூளை என்றே சொல்லலாம். ஆரோக்கியமான உடல் எடைக்கு, குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாவின் பேலன்ஸ் மிக முக்கியம். அது மட்டுமல்ல, உங்கள் விரதம் தடைப்படாமலிருக்கவும் அது முக்கியம். இரைப்பை அழற்சி மற்றும் அஜீரணம் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க விரதமில்லாத நேரத்தில் அதிகம் உண்பதையும் பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
விரதமிருக்கும்போது தலைவலி ஏற்படக் கூடும். கஃபைன் உணவுகளைத் தவிர்ப்பதன் விளைவாக அதைத் தவிர்க்கலாம். விரதத்தைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே டீ மற்றும் காபியின் அளவை மெள்ள மெள்ளக் குறைத்து வருவது அவசியம். விரதத்தைத் தொடங்குவதற்கு முன் ஸ்ட்ராங்கான டீ அல்லது காபி குடிப்பது 12 மணி நேரத்துக்கு உங்களுக்குத் தலைவலி இல்லாமல் காக்கும்.
‘விரதமிருப்பது என்பது நோய்களுக்கான சிகிச்சையல்ல... ஆரோக்கியத்துக்கான சிகிச்சை' என்கிறார் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் நிபுணர் ஜேசன் ஃபங்.
விரதமிருக்கும் அனுபவத்தை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும். ஆரோக்கியத்துக்கான பழைமையான முறையான விரதத்தை இப்போதே ஆரம்பிக்கலாம். உங்கள் உடல் அதற்கு நன்றி சொல்வதை உணர்வீர்கள்.
(நம்மால் முடியும்!)