
டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
கோவிட்-19, லாக்டௌன், எக்ஸ்டென்ஷன்... கடந்த சில நாள்களாகக் கேட்டுக் கேட்டு சலித்துப் போன வார்த்தைகள் இவை. மிகக் குறைவான உடலியக்கம் அல்லது அது அறவே இல்லாத வாழ்க்கை முறைக்குப் பலரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.
குடும்பத்தார் எல்லோரும் இணைந்து ஒரே இடத்தில் இருக்கிறார்கள். அம்மாக்கள் வழக்கம்போல சமையலறையில் இன்னும் அதிக வேலைகளோடு இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு வேளா வேளைக்கு விதம் விதமாக என்ன சமைத்துக்கொடுக்கலாம் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விதவிதமாகவும் வித்தியாசமாகவும் என்ன சமைப்பது என்பதுதான் இருப்பதிலேயே பெரிய டாஸ்க். தெரிந்த சமையலிலிருந்து திரும்பத் திரும்ப என்ன சமைப்பது எனக் குழப்பம்.

ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நான் எப்போதாவது ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் பக்கத்து வீட்டு மொட்டை மாடிகளில் குழந்தைகள் கண்ணாமூச்சியும் ஐஸ்பாயும் விளையாடும் காட்சி தெரிகிறது. 2020-ல் இருந்து காலம் என்னைப் பின்னோக்கி என் குழந்தைப்பருவத்துக்கு இட்டுச்செல்கிறது. ஆரோக்கியமான பண்டங்களைச் சாப்பிடும் குழந்தைகள் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள். நான் அப்படித்தான் இருந்திருக் கிறேன்.
அதென்ன ஆரோக்கியமான பண்டம்? குழந்தைகள் தினமும் மூன்று வேளைகள் சாப்பிடுகிறார்கள். இதற்கிடையில் அவர்களுக்கு நொறுக்குத்தீனிகள் கொடுக்கும்போது, அவை ஆரோக்கியமான பண்டங்களாகவே இருந்தாலும் அவற்றின் அளவிலும் கலோரி எண்ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். முற்பகலில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை என தினமும் இருவேளைகள் குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனிகள் தரலாம். அப்படிக் கொடுக்கும் பண்டத்தின் கலோரியானது 100 முதல் 200-க்குள் இருக்க வேண்டியது முக்கியம்.

எள்ளுருண்டை, பொரியுருண்டை, கடலை மாவு லட்டு, கடலை உருண்டை (வெல்லப்பாகுடன் கடலையைச் சேர்த்துச் செய்கிற மிக எளிமையான ரெசிப்பி) போன்ற பாரம்பர்ய நொறுக்குத்தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். வெல்லம் சேர்த்த பண்டங்கள் சிறப்பு. வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான சத்துகள் இவை. இவற்றிலுள்ள அத்தியாவசிய உப்புச்சத்து குழந்தைகளின் உடலின் எலெக்ட்ரோலைட் பேலன்ஸை சரியாக வைக்கும். டிரை ஃப்ரூட் லட்டு, தேங்காய்த் துருவல், வெல்லம், நெய் சேர்த்துச் செய்த சத்துமாவு உருண்டை போன்றவையும் குழந்தைகளுக்கு ஏற்றவை.

`உங்களுக்கென்ன... நீங்க சொல்லிடுவீங்க. எள்ளுருண்டையும் கடலை மிட்டாயும் கொடுத்தா எங்க வீட்டு வாண்டுங்க எங்க சாப்பிடுதுங்க? பீட்சாவும் பர்கருமில்ல கேட்குதுங்க..’ என்ற உங்களின் மைண்டுவாய்ஸ் எனக்குக் கேட்கிறது. பீட்சாவையும் பர்கரையும்கூட ஆரோக்கிய வெர்ஷனில் மாற்றிக்கொடுக்கலாம். பர்கருக்கான பன்னை மட்டும் கடையில் வாங்குங்கள். உள்ளே வைக்கிற பட்டீஸை நீங்களே ஆரோக்கியமான முறையில் தயாரிக்கலாம். உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி வைத்துச் செய்யலாம். கடலை மாவில் செய்கிற ஃபலாஃபல், ஹராபரா கபாப் போன்றவற்றையும் யோசியுங்களேன். வெளி உணவுகளுக்கும் விளம்பரங்களில் பார்க்கும் உணவுகளுக்கும் பழகிப்போன 2கே கிட்ஸுக்கு இந்த உணவுகள் நிச்சயம் பிடிக்கும்.

நொறுக்குத்தீனி கேட்கும் குழந்தைகளுக்கு கட்லெட் நல்ல சாய்ஸ். மிக்ஸ்டு வெஜிடபிள் கட்லெட், பனீர் கட்லெட், மீன் கட்லெட், சிக்கன் கட்லெட் போன்றவை ஆரோக்கியமானவை. இதில் கலோரிகளும் கிடைக்கும். கூடவே கட்லெட்டில் சேர்க்கப்படும் காய்கறி மற்றும் அசைவப் பொருள்களின் மூலம் புரதமும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸும் கிடைக்கும்.

2கே கிட்ஸின் விருப்ப உணவுகளில் ஒன்றாகியிருக்கிறது மோமோஸ். மோமோஸ் என்றாலே மைதாவில் செய்வது என நினைத்துப் பெரியவர்கள் பலரும் அதைத் தவிர்ப்பதுண்டு. மைதாவுக்குப் பதிலாக அதை அரிசி மாவிலும் செய்யலாம். பிள்ளையார் சதுர்த்திக்கு வீடுகளில் செய்யும் கொழுக்கட்டையின் இன்னொரு வெர்ஷன்தான் மோமோஸ். கொழுக்கட்டைக்குச் செய்கிற அதே மாவில் மோமோஸ் செய்யலாம். உள்ளே நமக்கு விருப்பமான சைவ, அசைவ ஸ்டஃப்பிங் வைக்கலாம்.
இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு நிச்சயம் சாண்ட்விச் பிடிக்கும். வீட்டில் என்னென்ன காய்கறிகள் இருக்கின்றனவோ அவற்றை வைத்துச் செய்யலாம். இத்துடன் சாஸ் சேர்ப்பது, சாலட் டாப்பிங் செய்வது, கலர் கலர் காய்கறிகள் சேர்ப்பது போன்றவற்றின் மூலம் சாண்ட்விச்சை சுவாரஸ்யமான உணவாகவும் மாற்றலாம். காய்கறிகளே இல்லை என்றாலும் பீநட் பட்டர் அல்லது ஜாம் தடவியும் செய்யலாம்.

சில குழந்தைகளுக்கு சாப்பிடுவதைவிட குடிப்பது பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு வாழைப்பழத்துடன் ஏதோ ஒரு பழம், சிறிது தேன், பாதாம் அல்லது முந்திரி மில்க் சேர்த்து ஸ்மூத்தியாகச் செய்து காலை உணவாகக் கொடுக்கலாம். இதையே ஃப்ரிட்ஜில் வைத்து மாலை உணவாகவும் கொடுக்கலாம். ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி, மேங்கே ஸ்மூத்தி என வெரைட்டியாகக் கொடுக்கலாம். இது மாம்பழ சீஸன் என்பதால் அதைப் பழமாகச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு ஸ்மூத்தி சரியான சாய்ஸ். மாம்பழத்திலுள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பார்வைத் திறனுக்கும், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும். பழங்களுக்குப் பதில் பீட்ரூட், கீரைகள், கேரட் போன்றவற்றில் காய்கறி ஸ்மூத்தியும் செய்யலாம். நுண்ணூட்டச்சத்துகளை முழுமையாகப் பெற காய்கறி ஸ்மூத்தீஸ் சரியான சாய்ஸ்.
ஸ்மூத்தியைப் போலவே நட்ஸ் மில்க்கும் ஊட்டச்சத்து நிறைந்தது. பாதாம் மில்க், முந்திரி மில்க் போன்றவற்றில் நல்ல கொழுப்பும், புரதமும் செறிவாக இருக்கும். நட்ஸ் மில்க்கில் பாதாம், ஃபிளாக்ஸ் சீட்ஸ், தேன் போன்றவற்றைச் சேர்த்தால் சுவை கூடும்.

பழ ஜூஸ், மசாலா மோர் (இஞ்சி, பச்சை மிளகாய், நெல்லிக்காய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்தது), உப்பும் சர்க்கரையும் சேர்த்த எலுமிச்சை ஜூஸ், பானகம் போன்றவையும் குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றவை. வெல்லம், எலுமிச்சைச்சாறு, இஞ்சி, ஏலக்காய், சிறிது மிளகுத்தூள் சேர்த்துச் செய்யும் பானகம், குழந்தைகளுக்கேற்ற மிகச் சிறந்த பானம்.
வெஜிடபிள் அல்லது சிக்கன் நக்கெட்ஸ், பனீர் பால், எனர்ஜி பார், டார்க் சாக்லேட், சத்து மாவுக் கஞ்சி போன்றவைகூட குழந்தை களுக்கான உணவுகளாகப் பரிந்துரைக்கப் படுபவையே.

இனிப்பை விரும்பும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கேக் செய்து தரலாம். கோதுமை மாவு, வெல்லம், வெனிலா எசென்ஸ், எலுமிச்சைச்சாறு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர் , ரீஃபைண்டு ஆயில் சேர்த்த ஆரோக்கியமான கேக் அவர்களது இனிப்புத் தேடலைத் தீர்த்துவைக்கும். பருப்புப் பாயசம், சர்க்கரைப் பொங்கல், தேங்காய்த் துருவலும் சர்க்கரையும் சேர்த்த அவல் கலவை போன்றவையும் ஆரோக்கிய சாய்ஸ்.
‘நாங்க சாட் ஐட்டம் பத்தி யோசிச்சிட் டிருந்தா, நீங்க சொல்றதெல்லாம் வேற மாதிரி இருக்கே..’ இதுதானே உங்கள் கேள்வி? வீட்டிலேயே மினி பூரி செய்து, உள்ளே முளைகட்டிய தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்கு ஸ்டஃப்பிங் வைத்துக் கொடுக்கலாம். நிறைய காய்கறிகள் சேர்த்து வீட்டிலேயே தயாரிக்கும் பேல்பூரியும் சூப்பர் சாய்ஸ்.

உங்கள் குழந்தையின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற உணவுகளைத் தர வேண்டியதும் அவசியம். அசைன்மென்ட்ஸ், ஹோம்வொர்க், எக்ஸாம் எனப் பெரிதாக எந்தக் கவலையும் இல்லாமல் ஓய்வாக இருக்கும் குழந்தைகளுக்கு ஓரளவாவது உடலியக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரம் விளையாட அனுமதியுங்கள். விளையாடச் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுப்பதும், உடலில் நீர்ச்சத்து வற்றிப்போகாமலிருக்க விளையாட்டின் இடையிலும் விளையாட்டுக்குப் பிறகும் திரவ உணவுகளைக் கொடுப்பதும் மிக மிக அவசியம்.
(நம்மால் முடியும்!)