"முறுக்... முறுக்... மணப்பாறை அரிசி முறுக்..." புகைவண்டியானாலும் சரி, பேருந்தானாலும் சரி... திண்டுக்கல்-திருச்சி மார்க்கத்தில் பயணம் செய்தவர்கள் மேற்கண்ட வார்த்தைகளைக் கேட்காமல் பயணித்திருக்க முடியாது. எந்த ஊரில் தயாரிக்கப்பட்ட முறுக்காக இருந்தாலும் 'மணப்பாறை முறுக்கு' என்றே விற்பனை செய்வார்கள் விற்பனையாளர்கள். அந்த அளவுக்கு ஆண்டுகள் பல கடந்தும் மனதில் நிற்கிறது, மணப்பாறை முறுக்கு.

நொறுக்குத் தீனிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது முறுக்குதான். முறுக்குகளில் பல விதங்கள் இருந்தாலும், அவற்றில் முதலிடம் மணப்பாறை முறுக்குக்குத்தான். பெட்டிக் கடைகளிலும், மளிகைக்கடைகளிலும் கண்ணாடி பாட்டில்களுக்குள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் முறுக்குகளை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே பள்ளிக்குப்போன அனுபவம் பலருக்கும் இருக்கும்.
திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது, மணப்பாறை. ஆதிகாலத்தில் இருந்து இந்த மண்ணுக்கு பெருமை சேர்ப்பது இப்பகுதியில் பிரத்யேகமாக வளரும் நாட்டு மாடுகள். அவற்றுக்கு மணப்பாறை மாடு என்றே பெயர். தற்போது அப்பெருமையை பின்னுக்குத்தள்ளி முந்தி நிற்கிறது, மணப்பாறை முறுக்கு.

சுவைக்கும், மணத்திற்கும் பெயர் பெற்றது மணப்பாறை முறுக்கு. சீரகம், ஓமம், எள் ஆகியவற்றுடன் அரிசி மாவைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கின் வாசமே நம்மைச் சாப்பிடத் தூண்டும். மொறுமொறுவென இதமாக நாவில் கரையும் பதமும், சுண்டியிழுக்கும் சுவையும்தான் மணப்பாறை முறுக்கின் சிறப்பு. கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகத் தயாரித்து வரும் மணப்பாறை முறுக்குக்குத் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
முறுக்கு தயாரிப்பது, அதனை விற்பது, கூடவே முறுக்கை வாங்க வரும் மக்கள் என மக்கள் கூட்டத்துடன் களைகட்டிக் காணப்படுகிறது மணப்பாறை. வார நாள்கள், விடுமுறை நாள்கள் என எப்போதும் பரபரப்புடன் விற்பனை ஆகும் மணப்பாறை முறுக்கை நோக்கி நமது வண்டியை விட்டோம்.

மணப்பாறைக்குள் வந்ததுமே சாலையின் இருபுறமும் முறுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அடுத்தடுத்து முறுக்குக் கடைகள், முறுக்குக் கடலாகக் காணப்பட்டன. கடைகளின் முன்புறம்தான் முறுக்கு சுடும் அடுப்பே இருந்தது.
எந்தச் செயற்கைப் பொருளையும் சேர்க்காமல், எந்தக் கலப்படமும் செய்யாமல், பதமான மாவை எடுத்து ஒருவர் நன்றாகக் கொதித்த எண்ணெய்யில்... இல்லையில்லை எண்ணெய்க் குளத்தில் (ஆமாங்க, அவ்வளவு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் காய வைக்கப்பட்டிருந்தது) பிழிய, மற்றொருவர் அதனைத் திருப்பி போட்டு, பக்குவமாகப் பொரித்து எடுக்கின்றனர். இவ்வாறு முறுக்கு சுடுவதற்கு என்றே மணப்பாறையில் தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியிலிருந்து இங்கு வந்த கிருஷ்ண ஐயரால் மணப்பாறை ரயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட முறுக்கு, தொடர்ந்து மணி ஐயர் என்பவரால் ’மணப்பாறை முறுக்கு’ எனப் பிரபலமடைய ஆரம்பித்தது. கூடவே அவரின் முறுக்கின் ருசிக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆரம்பித்தனர்.

இப்படிப் பிரபலமாகிக் கொண்டிருந்தபோது, மணி ஐயர் முறுக்கு விற்பனையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழலில், அவரின் கீழ் வேலை செய்து வந்த பணியாளர்கள் முறுக்குத் தயாரிப்பைக் கைவிட மனமில்லாமல், இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இந்த மணப்பாறை முறுக்கின் ருசியை வேற எந்த முறுக்காலும் அடித்துக் கொள்ளவே முடியாது. நிறைய நிறையத் தின்பண்டங்களும், சிப்ஸுகளும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, நினைத்தவுடன் கைகளில் கிடைத்தாலும் முறுக்கின் ருசியே அலாதியானது.

குழந்தைகளில் ஆரம்பித்து, பெரியவர்கள்வரை அனைவராலும் இன்றளவும் கொண்டாடப்படும் முறுக்கை அதனின் சொர்க்க பூமியான மணப்பாறையிலேயே சுடச் சுட சாப்பிட்டால் எப்படி இருக்கும்? முறுக்கின் இந்த ருசிக்குக் காரணமாக அவர்கள் கூறுவது, தண்ணீரைத்தான்.

ஆம், மணப்பாறை நீரிலே இயல்பாகவே இருக்கும் உப்புத்தன்மைதான் காரணம். என்ன, நீர்தான் இத்தனை சுவைக்குக் காரணமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், ’திருநெல்வேலி அல்வா’வின் ருசிக்கு எப்படி தாமிரபரணி நீர் பக்குவத்தை தருகிறதோ அதே மாதிரி மணப்பாறை முறுக்கிற்கு எங்க ஊரு தண்ணீர்தாங்க காரணம் என, அருகிலிருந்த பெரியவர் மெய்சிலிர்த்துப் பேசினார்.
’இசைப்பிரியா ரிலாக்ஸ்’ முறுக்கு கடையின் உரிமையாளர் ஜேம்ஸிடம் பேசினோம், ஒருபுறம் முறுக்குக்கு மாவு தயார்செய்வது, மறுபுறம் முறுக்கை எண்ணெய்யில் பொரிப்பது, அதனை பாக்கெட்டுகளில் அடைப்பது, விற்பனை செய்வது எனக் கடை விறுவிறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் நமக்காக முறுக்கைப் பற்றி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

"25 வருடங்களுக்கு மேலாக இந்தக் கடையைத் இங்க கடை நடத்திட்டு வர்றேன். இந்த முறுக்குக்கடை ஆரம்பிக்கும் போது எனக்கு 25 வயசு. நான் சாப்பிட்டு சந்தோஷப்பட்ட இந்த முறுக்கோட சுவையை எல்லாரும் அனுபவிக்கணும்னு நினைச்சேன். இப்போ வரைக்கும் அதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.
சரியான விகிதத்தில் பச்சரிசியையும், உளுந்தையும் அளவான தண்ணீர் சேர்த்து அதனுடன் எள், ஓமம், சீரகத்தைப் போட்டு மாவை பக்குவமாப் பிசையணும். விறகடுப்பில் காய வைத்த எண்ணெய்யில் கைப்பிடி மாவை முறுக்குக்குழலில் போட்டுச் சுற்றி, முறுக்கைப் பிழிந்து பொன்னிறத்தில் பொரித்து எடுக்க வேண்டும். இதில் முக்கியமே பொரிக்கும் பக்குவம்தான்.

கவனக்குறைவா இருந்தா எண்ணெய் அதிகமா கொதிச்சு முறுக்கு கருகிடும். முதலில் மாவைப் பிழிந்து ஒருமுறை பொரித்து எடுப்போம். அடுத்த சில நிமிடங்கள்ல திரும்பவும் இன்னொரு தடவை எண்ணெய்யில பொரித்து எடுப்போம். இரண்டு முறை எண்ணெய்யில் வேகவைத்து எடுப்பதுதான் மணி அய்யர் காலத்து ரகசியம். இதனால், முறுக்கின் மொறு மொறுப்புத்தன்மையும் கூடுகிறது. மாவைப் பக்குவமாகப் பிசைவதும், பதமாகப் பொரித்து எடுப்பதும்தான் இதன் சுவைக்கான சீக்ரெட்.
முறுக்கின் சுவைக்கு முதற்காரணமே அரிசிதான். நல்ல தரமான பச்சரிசியை பார்த்துப் பார்த்து வாங்குறோம். எள், ஓமம், சீரகம் எல்லாமே முதல் தரமானதுதான். ஒருமுறை பயன்படுத்துற எண்ணெய்யை அடுத்தமுறை பயன்படுத்துறதில்ல. நெய் சேர்க்குறனால கூடுதல் சுவையா இருக்கும். விசேஷ ஆர்டர்களுக்கு வெண்ணெய் சேர்த்துப் பிசைஞ்சு பொரிக்கிறோம். இப்போ புதுசா பூண்டு முறுக்கு, புதினா இஞ்சி சேர்த்த முறுக்கு, கம்பு முறுக்கு, கார முறுக்குன்னு நெறைய வெரைட்டி இருக்கு.

ஆனா, எல்லாத்தையும் விட ஒரு மைல்டான டேஸ்டா, சூப்பர் வாசமா இருக்குற பாரம்பர்யமான ‘மணப்பாறை முறுக்கு’தான் எல்லாருக்கும் பிடிக்கும். நம்ம கடையில மட்டும் 20 பேர் வேலை செய்றாங்க, இங்க முறுக்க மட்டுமே பலநூறு குடும்பங்கள் இருக்காங்க. நான் வளந்தது, என் குழந்தைங்க படிக்கிறது எல்லாமே இந்த முறுக்காலதான்” என நெகிழ்கிறார்.
முறுக்கு வாங்க வந்திருந்திருந்த அமுதனிடம் பேசினோம். "எனக்கு நாமக்கல்தான் சொந்த ஊரு. வேலை விஷயமா அடிக்கடி மணப்பாறை வந்துட்டுப் போவேன். மணப்பாறையை நெருங்கினாலே முறுக்கு ஞாபகம் வந்துடும்.

இங்க இருந்து முறுக்கு வாங்கிட்டு போயி, வீட்டுல கொடுப்பேன். என் அம்மா, அப்பால இருந்து, என் குழந்தைங்க வரைக்கும் இந்த முறுக்கின் சுவைக்கு அடிமைன்னே சொல்லலாம். ரொம்ப நல்ல மணத்துடன் மொறு மொறுப்பா இருக்கும். எண்ணெய்ப் பலகாரம் என ஒதுக்கி வச்சுடாம், தரத்துலயும் எந்தக் குறையும் இல்லாததுனால குழந்தைகளுக்கும் தைரியமா கொடுக்கிறேன்” என்றார்.
மணப்பாறை வந்தால்... யோசிக்கவே யோசிக்காமல் ’மணப்பாறை முறுக்கை’ச் சுவைத்துப் பாருங்கள்!