Published:Updated:

அமெரிக்காவில் சமைத்ததும் அபாய அலாரம் அடித்ததும் | விருந்தோம்பல் | வெஜ் மோமோஸ்

Veg Momos
News
Veg Momos

இரண்டு நாள்களுக்குப் பின் அமெரிக்க சமையல் களத்தில் இறங்கியாச்சு. முதல் நாள் புளிக்குழம்பு செய்யலாம் என்று வறுக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஃபயர் அலாரம் ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது. பதற்றம் தொற்றிக்கொண்டது.

அமெரிக்காவில் சமைத்ததும் அபாய அலாரம் அடித்ததும் | விருந்தோம்பல் | வெஜ் மோமோஸ்

இரண்டு நாள்களுக்குப் பின் அமெரிக்க சமையல் களத்தில் இறங்கியாச்சு. முதல் நாள் புளிக்குழம்பு செய்யலாம் என்று வறுக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஃபயர் அலாரம் ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது. பதற்றம் தொற்றிக்கொண்டது.

Published:Updated:
Veg Momos
News
Veg Momos

2005-ம் ஆண்டு திருமணத்துக்குப் பின் சென்னையிலிருந்து அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா சென்றதுதான் என் முதல் விமானப் பயணம். சென்னையிலிருந்து ஜெர்மனி வரை முதல் பயணம். பின் ஜெர்மனியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ். நாங்கள் சென்றது ஏர் இந்தியா விமானம் என்பதால், பயணம் தொடங்கியது முதல் இறங்கும் வரை நம் நாட்டு உணவுகளே வகை வகையாகக் கிடைத்தன. ஒவ்வொரு வேளையும் சிறிய டிரே, பௌல், அதற்கேற்ற குட்டி ஸ்பூன், ஃபோர்க் வைத்து பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.

லாஸ் ஏஞ்சல்ஸில் இறங்கியதும் எங்கு பார்த்தாலும் புதிய முகங்கள், மிதமான குளிர் என வித்தியாசமான சூழல். சில இடங்களில் நம் மக்களைக் காணமுடிந்தது. ஏர்போர்ட்டில் நாம் எடுத்துச் சென்ற பொருள்களை சோதனை செய்த பிறகு, ஒருவழியாக வெளியே வந்தோம்.

Roseville
Roseville

பிறகு, சான் ஃபிரான்சிஸ்கோ சென்று அங்கிருந்து நாங்கள் வசிக்கப்போகும் இடத்துக்கு வந்தோம். இப்படியாகக் கிட்டத்தட்ட இருபத்தியாறு மணி நேரம் பயணித்து சேக்கிரமென்டோவில் (Sacramento) உள்ள ரோஸ்வில் (Roseville) என்ற ஊருக்கு சென்றோம்.

நண்பர்கள் வீட்டில் உணவருந்தியதும் வீட்டுக்குச் சென்றோம். முற்றிலும் வித்தியாசமான அமைதியான புதிய சூழலில் ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுநாள் காலைதான் வெளியே சென்று பார்த்தேன். நாம் படங்களில் காண்பதுபோல மாடி மேல் மாடிக் கட்டடங்கள் இல்லை. எல்லாமே இரண்டு அல்லது மூன்று தளங்களைக் கொண்ட மர வீடுகளாக இருந்தன. மரங்கள் அடர்ந்த அழகிய பகுதியின் நடுவில் வீடுகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. பரபரப்பே இல்லாமல் எங்கு பார்த்தாலும் அமைதி. தூரத்தில் செல்லும் கார்களின் சத்தம் மட்டும்தான் கேட்கும்.

முதல் இரண்டு நாள்களுக்கு தூக்கமும் வரவில்லை, பசியும் இல்லை. ஏங்கோ ஒரு தீவில் இருப்பதுபோலவே இருந்தது. அடுத்த நாள் மாலை அங்குள்ள சேஃப்வே (Safeway) என்ற சூப்பர் மார்க்கெட் சென்றோம். போகும் வழியில் அங்குள்ள மக்கள் சாலை விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதைக் கண்டு பிரமித்தேன். கடைக்குள் நுழையும்போது நம்மை ஏற்கெனவே தெரிந்தவர்கள் போல ஒரு பெரிய ஹாய் சொல்லிவிடுவார்கள். அதேபோல கிளம்பும்போது Have a Nice Day என்று சொல்லி அனுப்புவார்கள். முதலில் வித்தியாசமாக இருந்தது. பிறகு, நானும் சேர்ந்து ஹாய் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

Roseville
Roseville

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூப்பர் மார்க்கெட் சென்றதும் உள்ளே பல வண்ணங்களில் காய்கறிகள், பழங்களை அழகாகத் தனித்தனி பிரிவுகளில் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்தேன். சாலட் வகைக் காய்கறிகள், கீரை வகைகள், கேரட் மட்டுமே மூன்று வகைகள், பல வண்ணங்களில் குடைமிளகாய், வெங்காயத்தில் அத்தனை வகைகள், பச்சை மிளகாய் குண்டு குண்டாக சிறிய கத்திரிக்காய் போல இருந்தது. கத்திரிக்காயில் நீளமான கத்திரிக்காய் மற்றும் குண்டான கத்திரிக்காய் மற்றும் பல விதமான பெயர் தெரியாத காய்கறிகளும் பழங்களும் இருந்தன. ஆனால், நம்ம ஊர் தேங்காய், சின்ன வெங்காயம் கிடைக்கவில்லை. பிறகு, நம்ம ஊர் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று பார்த்தேன். அங்கு எல்லாமே கிடைத்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பின் அமெரிக்க சமையல் களத்தில் இறங்கியாச்சு. முதல் நாள் புளிக்குழம்பு செய்யலாம் என்று வறுக்க ஆரம்பித்ததும் சில நிமிடங்களில் ஃபயர் அலாரம் ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது. `சமைக்க ஆரம்பிக்கும்போது எக்ஸ்காஸ்ட் ஆன் செய்ய மறந்து விடாதே’ என்று கணவர் கூறியிருந்ததை மறந்துவிட்டேன். தனியாக என்ன செய்ய வேண்டும் என்று சில நிமிடங்கள் ஓடவில்லை. பிறகு, வேகமாக ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்ததும் சில நிமிடங்களில் ஒலி நின்றது. எதற்கும் முதல் அனுபவம் உண்டு அல்லவா? இப்படித்தான் அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் நாள்கள் செல்லச் செல்ல கற்றுக்கொண்டேன்!

அந்த வார இறுதி நாளில் கணவரின் அமெரிக்க நண்பர் ஒருவர் வெளியே சாப்பிட அழைத்துச் சென்றார். அன்றுதான் அமெரிக்காவில் முதலில் வெளியே சென்று சாப்பிட்ட அனுபவம். Fat's Asia Bistro என்ற உணவகம். அன்றுதான் ஹோட்டல்களில் சைனீஸ், இத்தாலியன், தாய், மெக்சிகன் என்று பல பிரிவுகள் உள்ளது என்பதையே அறிந்தேன். அங்கும் வழக்கம்போல ஒரு ஹாய் சொல்லி வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள். அங்குதான் மக்கள் சத்தத்தை அதிகமாகக் கேட்டேன். ஹோட்டலில் நடுவே அழகிய புத்தர் சிலை.

மெனு கார்டை பார்த்ததும் முதல் பக்கத்திலேயே பெரிய எழுத்தாக இங்கு செய்யும் உணவில் No Added MSG என்ற எழுதியிருந்தது. அதற்கு பின்புதான் Monosodium glutamate என்கிற வேதிச் சுவையூட்டிக்கு அங்கு தடை என்பது தெரியும். நம் ஊர் உணவுகளில் அந்த நேரத்தில்தான் அந்தச் சுவையூட்டியின் பரவல் ஆரம்பித்தது.

நான் சைவம் என்பதால் மெனு கார்டில் இருந்த இரண்டே இரண்டு டிஷ்களான வெஜ் மோமோஸ், வெஜ் ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தேன். மோமோஸை அங்கு டம்பிளிங்க்ஸ் என்றும் கூறுகிறார்கள்.

முதலில் வந்தது ஸ்டார்ட்டரான மோமோஸ். அழகான கறுப்பு நிற செராமிக் தட்டில் சாஸோடு பரிமாறினார்கள். அதை எடுத்துச் சாப்பிட இரண்டு குச்சியும் (Chinese chopsticks) வைத்தார்கள்.

சாப்பிட்டுப் பார்த்தால், அது காய்கறிகளை ஸ்டஃப் செய்த மோதகம் போல இருந்தது. காய்கறிக் கலவையில் லேசான காரத்துடன் வித்தியாசமான சுவையில் நன்றாகவே இருந்தது. ஆவியில் வேகவைத்த அந்த மோமோஸ் பல வடிவங்களில் மிகவும் ருசியாக இருந்தது.

அடுத்து ஃப்ரைடு ரைஸ் வந்தது. நம்மூர் ஹோட்டலில் இருப்பது போல வெள்ளையாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு பிரௌன் நிறத்தில் வித்தியாசமான சுவையில் இனிக்கும் ஃப்ரைடு ரைஸாக இருந்தது.
Fat's Asia Bistro
Fat's Asia Bistro

அடுத்து ஃப்ரைடு ரைஸ் வந்தது. நம்மூர் ஹோட்டலில் இருப்பது போல வெள்ளையாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு பிரௌன் நிறத்தில் வித்தியாசமான சுவையில் இனிக்கும் ஃப்ரைடு ரைஸாக இருந்தது. முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது... பிறகு ஹாட் சாஸ் வைத்து ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தேன்.

உணவுகளை அவர்கள் பரிமாறும் விதமே அழகாக இருந்தது. ஒவ்வொரு முறையும் எல்லா உணவுகளும் சரியாக இருந்ததா என்றும் கேட்பார்கள். கிளம்பும்போது fortune cookies தருவார்கள். Cookies உள்ளே ஒரு சிறிய பேப்பரில் ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார்கள். அதைப் படித்துவிட்டுக் கிளம்பினோம்.

வெறுமனே செய்முறையை மட்டும் கூறிவிட்டுச் செல்லாமல், ரொம்பவும் கேஷுவலாக அவர்கள் வீட்டு கிச்சனில் அல்லது பேக் யார்டில் (தோட்டத்தில்) நடந்துகொண்டோ, காய்கறிகளை நறுக்கிக்கொண்டோ தங்களின் அனுபவம் மற்றும் கதைகளையும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

அங்கு சாப்பிட்ட மோமோஸை வீட்டில் செய்து பார்க்க ஆசையாக இருந்தது. ஒரு நாள் சிறிதளவு கோஸ், கேரட், வெங்காயத்தாள் எல்லாவற்றையும் லேசாக வதக்கி ஸ்டஃப்பிங் தயார் செய்த பின்பு, வெளியே வைத்திருக்கும் மாவைப் பற்றித் தெரியாததால் அரிசி மாவில் செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை.

அங்குள்ள food network சேனலில் 24 மணி நேரமும் சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். வெறுமனே செய்முறையை மட்டும் கூறிவிட்டுச் செல்லாமல், ரொம்பவும் கேஷுவலாக அவர்கள் வீட்டு கிச்சனில் அல்லது பேக் யார்டில் (தோட்டத்தில்) நடந்துகொண்டோ, காய்கறிகளை நறுக்கிக்கொண்டோ தங்களின் அனுபவம் மற்றும் கதைகளையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதில் குறிப்பாக, 30 minutes with Rachel Ray என்ற ஷோ எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி ஒன்றில் பலவிதமான மோமோஸ்களை செய்து காண்பித்தார். அதன் பிறகுதான் மோமோஸ் வெளி லேயருக்கு ஆல் பர்பஸ் மாவு (All purpose flour) பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தேன். பிறகு ஆல் பர்பஸ் மாவு வாங்கி செய்து பார்த்தேன். அது நம் ஊரில் கிடைக்கும் மைதா மாவு போலவே இருந்தது. ஓரளவு சரியாக வந்தது. ஆனால், இன்னும் அங்கு சாப்பிட்டது போலவே வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் செய்து பார்த்தேன்.

Veg Momos
Veg Momos
அங்கு கிடைக்கும் காய்கறிகள், பிற பொருள்களை வைத்து சைனீஸ், இத்தாலியன் என்று ஒவ்வொன்றாகச் செய்து பார்க்கும்போது ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்கும்.

ஒரு முறை செய்யும்போது கணவரும் நானும் சேர்ந்து களத்தில் இறங்கினோம். அவருக்கு சமோசா, பரோட்டா செய்வதில் ஆர்வம். அன்று செய்யும்போது மெல்லிய வெளி லேயர் கொண்டு வருவதற்கு சில முயற்சிகளைச் செய்து பார்த்தார். பிறகென்ன... சக்ஸஸ்தான் (அதன் விவரத்தைக் கீழே குறிப்பில் பார்ப்போம்)! இதுபோல அங்கு கிடைக்கும் காய்கறிகள், பிற பொருள்களை வைத்து சைனீஸ், இத்தாலியன் என்று ஒவ்வொன்றாகச் செய்து பார்க்கும்போது ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்கும். இன்னும் இதுபோல நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. இனி வரப்போகும் பதிவுகளில் காண்போம்.

இதற்கு முன் விருந்தோம்பல் பகுதியில் வெளியான `அருவிக் குளியலும் ஆனியன் தூள் பஜ்ஜியும்’ கட்டுரைக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலரும் ஊரின் வர்ணனை அருமை என்றும் நாங்கள் படிக்கும்போதே சாரல் காற்றை உணர முடிந்தது என்றும் வாழ்த்துகள் அனுப்பினார்கள். மிக்க நன்றி!

இப்போது நாம் வெஜ் மோமோஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

மோமோஸ் மாவு செய்ய

மைதா மாவு - 1 கப்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெஜிடபிள் பூரணம் செய்ய

பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 கப்

பொடியாக நறுக்கிய கேரட் - கால் கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய செல்லரி தண்டுகள் - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளில் உள்ள வெள்ளைப் பகுதி - 1 டேபிள் ஸ்பூன்.

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் பச்சை தண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

சோயா சாஸ் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

ஸ்டெப் 1

அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை ஒரு ஈரத்துணியால் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

ஸ்டெப் 2

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயத்தாளில் உள்ள வெள்ளைப் பகுதி, செல்லரி தண்டுகள் சேர்த்து வதக்கவும். அவை பாதி வதங்கியதும், பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் கோஸ் சேர்த்து வதக்கவும். பின் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, காய்கறிகள் வதங்கியதும் சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். முதலில் சிறிய வட்டமாக மூன்று வட்டங்களைத் தயார் செய்து கொள்ளவும். பின் முதலில் ஒரு வட்டத்தின் மேல் சில துளிகள் எண்ணெய் தடவி சிறிது மைதா மாவை தூவி அடுத்த வட்டத்தை மேலே வைத்து மீண்டும் எண்ணெய் சிறிது மாவை தூவி அடுத்த வட்டத்தை வைத்து அடுக்கிக் கொள்ளவும். இப்போது மீண்டும் அடுக்குகளைக் கொஞ்சம் பெரிய வட்டங்களாகவும் மெலிதாகவும் தேய்த்துக்கொள்ளவும். இப்போது மூன்று வட்டங்களைத் தனித்தனியாகப் பிரித்தால் மெலிதான வட்டங்கள் தயார். இதுதான் அந்த சீக்ரெட். இப்படி செய்யும்போது மோமோஸ் ஸாஃப்டாகவும் மெலிதாகவும் இருக்கும்.

ஸ்டெப் 4

இப்போது ஒவ்வொரு வட்டத்தின் நடுவே 2 டேபிள் ஸ்பூன் காய்கறிக் கலவையை வைத்து மெதுவாக ஓரங்களில் இருந்து நெருக்கமான மடிப்புகளாக மடித்து ஓரத்தை இணைத்துவிடவும். உங்களுக்கு விருப்பமான வடிவில் இதைச் செய்து கொள்ளலாம்.

ஸ்டெப் 5

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் காய்ந்ததும், சிறிது எண்ணெய் தடவிய தட்டில் மோமோஸ்களை வைத்து, 7 முதல் 9 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். சூடாக செஷ்வான் சாஸ் அல்லது நம்மூர் காரச் சட்னி வைத்து பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

  • காய்கறிகளை வதக்கும்போது... நல்ல சூட்டில் வைத்து வேகமாக வதக்கிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் சிறிது துருவிய பனீர் அல்லது டோஃபூ சேர்த்து வதக்கலாம். செலரி தண்டுகளின் வாசம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறிதளவு சேர்த்தால் போதும். சோயா சாஸ் சில துளிகள் சேர்த்தால் போதும்.

  • மோமோஸ் செய்யும்போது வட்ட ஓரங்களில் மெலிதாகவும் நடுவில் சிறிது திக்காகவும் இருக்க வேண்டும்.

  • மோமோஸ்களை அதிக நேரம் வேக வைத்தால் வெளிப்புறம் கடினமாகிவிடும். வேக வைத்த மோமோஸைத் தொட்டுப் பார்த்தால் ஒட்டாமலும், பார்ப்பதற்கு கண்ணாடி பதத்தில் (transparent) இருக்க வேண்டும். அதுவே சரியான பதம்.

நீங்களும் இதேபோல வீட்டிலேயே சூப்பரான வெஜ் மோமோஸை செய்து பாருங்க... திரும்பத் திரும்பச் சாப்பிடத் தோணும்!

சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்
சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism