Published:Updated:

முட்டை மிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா....? இதுதான் இப்போ டிரெண்டிங்

முட்டை மிட்டாய்
News
முட்டை மிட்டாய்

கோயில்பட்டிக்குக் கடலைமிட்டாய், மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் என்று ஒரு புது ரெசிப்பி பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

Published:Updated:

முட்டை மிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா....? இதுதான் இப்போ டிரெண்டிங்

கோயில்பட்டிக்குக் கடலைமிட்டாய், மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் என்று ஒரு புது ரெசிப்பி பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

முட்டை மிட்டாய்
News
முட்டை மிட்டாய்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம் என்பது நாம் யாவரும் அறிந்ததே. என்னதான் இல்லங்களில் தினம் தினம் புதுப் புது வகையான உணவுகளைச் சமைத்துப் பரிமாறினாலும் பலருக்கும் உணவகங்களில் உணவு உண்பதில் தனிப்பிரியம். இன்னும் சிலருக்கு சுவைமிகுந்த இனிப்புப் பொருள்கள் குறிப்பிட்ட இடங்களில்தான் கிடைக்கும் என்றால், அப்பகுதிக்குச் செல்லும்போதெல்லாம் செல்லும் காரியத்தைவிட அப்பொருளின் மீதான ஆவலே அதிகமாக இருக்கும்.

கடலைமிட்டாய்
கடலைமிட்டாய்

கோயில்பட்டிக்குக் கடலைமிட்டாய், மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் என்று ஒரு புது ரெசிப்பி பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிமலை மேல் உள்ள ராஜா, ராணி கோட்டைகள் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் அற்புதமான மன்னர் கால அமைப்புகள். செஞ்சி என்றால் கோட்டை என மக்கள் கூறிய காலம் மாறி… செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் என்று பலராலும் கூறப்படும் அளவுக்கு ஆகிவிட்டது. இவ்வாறு பலரின் மனம் கவர்ந்த முட்டை மிட்டாய் பற்றி அறிந்துகொள்ள செஞ்சி அருகே உள்ள அப்பம்பட்டுக்கு விசிட் அடித்தோம்.

Egg Mittai
Egg Mittai

ஊரின் நடுப்பகுதியில் சாலையோரமாக 50 வருடப் பாரம்பர்யம் எனும் பதாகையுடன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த சையத் முட்டை மிட்டாய் கடையை அடைந்தோம். 2020-ம் ஆண்டு ஐம்பதாம் ஆண்டைக் கொண்டாட உள்ளது அந்தக் கடை. முகம் முழுதும் புன்னகையோடு வரவேற்ற கடை உரிமையாளர் சையத் உஸ்மானிடம் பேசினோம்.

``என் அப்பா சையத் அப்துல் கப்பார், முட்டை மிட்டாயை இங்கு அறிமுகப் படுத்தினார். இப்போது கடை இருக்கும் இடத்தில்தான் 1970-ல் சிறிய தொழிலாகத் தொடங்கினார். அதற்குமுன் இஸ்லாமியர்களின் சுபநிகழ்ச்சிகளிலும் பண்டிகைகளிலும்தான் இதைச் செய்துவந்தனர். பின் அந்தச் சுவையை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொடங்கிய முயற்சிதான் இந்த முட்டை மிட்டாய் கடை. எவ்விதமான மாவுப் பொருளும் இல்லாமல் உருவாக்கப்படுவதுதான் இந்த முட்டை மிட்டாயின் சிறப்பு. பால், முட்டை, சர்க்கரை, நெய் ஆகியவையே இந்த மிட்டாயின் உட்பொருள்கள். நாங்க பாக்கெட் பாலைப் பயன்படுத்துவதில்லை. என் அப்பா தொடங்கியபோது இருந்த அதே தரத்தை நிலைப்படுத்த நேரடியாக விவசாயிகளிடம் பாலைக் கொள்முதல் செய்கிறோம்.

சையத் உஸ்மான்
சையத் உஸ்மான்

இந்த முட்டை மிட்டாயை என் அப்பா அவரது காலத்தில் கையால் செய்து வந்தார். இப்போது மெஷினில் செய்கிறோம். ஆனால், தரம் மாற்றப்படவில்லை. 1995-ல் வாடிக்கையாளர்கள் அதிகமாகவே, என் அப்பா பயன்படுத்திய அதே கடையைச் சற்று விரிவுபடுத்தியுள்ளேன். இந்த மிட்டாயைத் தயார் செய்வதற்கு இரண்டு நாள்களில் மொத்தமாக ஏழரை மணி நேரம் வரை ஆகும். பால்கோவா செய்வதுதான் முதல் நிலை. முதல் நாளில் 6 மணி நேரம் வரை இந்த நிலை எடுத்துக்கொள்ளும். மறுநாள் காலை 4.30 மணிக்கு அடுத்த செய்முறையைத் தொடங்குவோம். ஏனெனில், பால்கோவா சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும்.

பின்னர், மூலப்பொருள்களைச் சேர்த்து அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சுவையான முட்டை மிட்டாய் தயாராகிவிடும். தயாரிக்கப்பட்ட முட்டை மிட்டாய், எவ்விதமான பதப்படுத்தும் முறை இல்லையென்றாலும், 5 நாள்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு வைத்திருப்பதில்லை. அன்று செய்வதை அன்றன்றே விற்பனை செய்துவிடுவோம்.

Preparation
Preparation

குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பதால் பதப்படுத்தும் பொருள்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை. மலையனூர் அங்காளம்மன் கோயில், திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள், செஞ்சிக்கோட்டையைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விரும்பி வாங்கிச் செல்வார்கள். இந்த மிட்டாயை 100 கிராம் முப்பது ரூபாய்க்குத் தருகிறோம்.

செஞ்சின்னா.. முட்டை மிட்டாய் என அண்மையில் பலராலும் சொல்லப்படுவதற்குக் காரணம், ‘நாம ஒரு விஷயத்தை முழு ஈடுபாட்டுடன் செய்தால் அந்தப் பொருள் மிகவும் நன்றாக இருக்கும்.’ இதைத்தான் நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.

Muttai Mittai
Muttai Mittai

`வரும் காலங்களில் உலகின் பல பகுதிகளுக்கும் இந்த மிட்டாயைக் கொண்டுசேர்க்க வேண்டும். அதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்... குறிப்பாக, மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு' என்பதுதான் என்னுடைய ஆசை” என்றார். அங்கு முட்டை மிட்டாய் வாங்குவதற்கு வந்திருந்த பெண்மணி ஒருவரிடம் பேசினோம்.

``நான் முட்டை சாப்பிட மாட்டேன். இந்த மிட்டாயில் முட்டை சேர்ப்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் இங்கு வரும்போதெல்லாம் வாங்கிச் சாப்பிடுவேன். மிகவும் பிடித்திருக்கிறது” என்றார். இனி செஞ்சிக்குச் சென்றால் சுவையான முட்டை மிட்டாயை மிஸ் பண்ணாதீங்க