Published:Updated:

5 பைசா, கொலை, விபத்து, மந்தி, 40 ஆயிரம் ரூபாய்... 2019-ன் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

2019-ன் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!
Listicle
2019-ன் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

`இதுதான் பிரியாணியா சார்?’ என்று ஆச்சர்யமாகப் பார்த்ததுடன், `சார், எங்க வீட்டுக்கு இதைக் கொஞ்சம் எடுத்துட்டுப் போகட்டுமா!’ எனக் கேட்டு வாங்கியும் சென்றுள்ளனர் குழந்தைகள்.


`ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும்! பிரியாணி எப்போது சாப்பிடுவோம்!' என்று வார இறுதிக்காகக் காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பிரியாணி சாப்பிட வீக் எண்டுவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தெருவுக்கு ஒரு பிரியாணி கடை இருக்கிறது. பக்கத்தில் கடை இல்லை என்றாலும் பரவாயில்லை, கைகளில் பல உணவு டெலிவரி ஆப்ஸ் இருக்கின்றனவே. ஆர்டர் தட்டிவிட்டால் போதும், நினைத்த நேரத்தில், இருந்த இடத்தில் இருந்தே பிரியாணியை சுவைத்து மகிழலாம். அதிலும், சிக்கன், மட்டன், காடை, மீன், இறால் என பிரியாணிகளின் வெரைட்டி ஏராளம். சிறப்பு நிகழ்ச்சி, விருந்து என எதுவாக இருந்தாலும் அது பிரியாணி இல்லாமல் முடிவதில்லை. மக்களை ஈர்ப்பதற்காக விதவிதமான விளம்பர யுக்திகள் முதல் முதன்முதலாக பிரியாணியை சுவைத்து மகிழ்ந்த குழந்தைகளின் நெகிழ்ச்சி கதைவரை 2019-ம் ஆண்டில் பிரியாணியால் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு இதோ..


1
25 பைசாவுக்கு பிரியாணி

25 பைசாவுக்கு பிரியாணி வாங்கிய 200 பேர்!:

வேலூரில் சிறிய ஹோட்டல் ஒன்றை வைத்து வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார் ரவி. தரமான உணவை மக்களுக்குத் தொடர்ந்து வழங்கி வந்ததால் அவரின் வியாபாரம் சூடு பிடித்தது. அதனால், பெரிதாக புதிய ஹோட்டல் ஒன்றைத் திறக்க முடிவு செய்து ஆரணி சாலையோரம் ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம் என்ற பெயரில் புதிய ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார் ரவி. கடை திறந்த முதல் நாளே அவரின் வருமானம், இருநூறு `25 பைசாக்கள்'. அதற்குக் காரணம், `25 பைசா கொண்டுவருபவருக்கு பிரியாணி பார்சல்' என்ற வித்தியாச விளம்பரம்தான்.

100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் 25 பைசாவுடன் வந்திருந்தனர். எதிர்பாரா கூட்டத்தைக் கண்டு தடுமாறிய நிர்வாகத்தினரால், 200 பேருக்கு மட்டுமே பிரியாணியை வழங்க முடிந்தது. சிலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இன்னும்கூட 25 பைசா நாணயங்களை இத்தனை பேர் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்களே, அடடே!


2
தொப்பி வாப்பா பிரியாணி

`5 பைசா’ பிரியாணி ரகசியம்:

25 பைசாகூட 90'ஸ் கிட்ஸ் பார்த்திருப்பார்கள். ஆனால், ஐந்து பைசா?அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினம். வழக்கத்தைவிட இந்நாளில் ஏராளமான சலுகைகளைக் கொடுத்து மக்களைத் திண்டாட வைத்தனர் ஹோட்டல் உரிமையாளர்கள். அந்த வரிசையில் வித்தியாசமான விளம்பரம் ஒன்று வாட்ஸ்-அப் க்ரூப்களில் வேகமாகப் பரவி வந்தது. அதுதான், `தொப்பி வாப்பா பிரியாணிக் கடையில் 5 பைசா நாணயத்தைக் கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள்' என்ற விளம்பரம். இதைத்தொடர்ந்து ஐந்து பைசா நாணயம் இருக்கிறதா என்று தனிப்பட்ட முறையில் ஏராளமானோர் குறுஞ்செய்திகளைத் தட்டிவிட்டது தனிக் கதை.

தொப்பி வாப்பா உரிமையாளர்கள், முதலில் இலவசமாக பிரியாணி கொடுக்கலாம் என்றுதான் நினைத்தார்களாம். கொஞ்சம் வெரைட்டி காட்டுவோமே என்று நினைத்து '5 பைசாவுக்கு பிரியாணி' என்று அறிவித்தனர்.

'அஞ்சு பைசாவுக்கு எங்கடா போவேன்' - மைண்டு வாய்ஸ் பாஸ்!


3
Mandi Biriyani

அரபு நாட்டின் மந்தி பிரியாணி! விலை 12,000 மட்டுமே!:

ஆட்டுக்கால் சூப், போட்டி, ஈரல் பொரியல் எனத் தனித் தனியே பரிமாறப்படும் கிடா விருந்தில் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், முழு ஆட்டை அப்படியே சமைத்து பந்தியில் வைத்து உண்ணும் மந்தி பிரியாணி சாப்பிட்டு இருக்கிறீர்களா?

ஒரு முழு ஆட்டின் தலையை வெட்டி, தோலை உரித்து, குடலை நீக்கி முழுமையாகச் சுத்தப்படுத்தி, அதன்மேல் அரேபிய மசாலாவை உடல் முழுதும் பூசி ஒருமணி நேரம் முதலில் ஊறவைக்கின்றனர். பிறகு இந்த மசாலாவை தேவையான அளவு பிரியாணி அரிசியுடன் கலந்து, குடல் நீக்கிய ஆட்டின் வயிற்றுப்பகுதியில் வைத்து அடைத்துவிடுகின்றனர். இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஸ்டாண்டில் ஆட்டை நின்ற நிலையில் வைத்து, சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேகவைத்து எடுப்பதுதான் மந்தி பிரியாணி. ஆட்டினுள் இருக்கும் தண்ணீராலேயே அரிசி வெந்துவிடும். முழு ஆடு கொண்டு செய்யப்படும் இந்த மந்தி பிரியாணியை 20 பேர் வரை சாப்பிடலாம். இதன் விலை சுமார் 12,000 ரூபாய்.

இதற்கென்று சில வழிமுறைகள் இருப்பதனால், முன்கூட்டியே ஆர்டர் செய்தால்தான் மந்தி பிரியாணியை பந்தியில் பார்க்க முடியும்.

பந்திக்கு முந்து


4
Online Cheating

`ஒரு பிரியாணியின் விலை ரூ.40,076!:

வடசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 76 ரூபாய் பிரியாணியை ஆன்லைனில் 40,076 ரூபாய்க்கு வாங்கி ஏமாந்துள்ளார். ஆன்லைன் ஆப் மூலம் பிரியாணியை ஆர்டர் செய்த அந்த மாணவி, சுடச்சுட பிரியாணி வருமெனக் காத்திருந்தார். ஆனால், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவரின் ஆர்டர் கேன்சல் செய்யப்பட்ட குறுஞ்செய்திதான் மொபைலில் வந்தது. இதைத்தொடர்ந்து, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கேட்பதற்காக, இணையத்திலிருந்து வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொலைபேசி எண் ஒன்றை எடுத்து, அதற்குத் தொடர்புகொண்டுள்ளார். எதிர்முனையில் பேசியவர், மாணவி கூறிய விவரங்களைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, மாணவியிடம் பிடிக்கப்பட்ட தொகை 100 ரூபாய்க்குள் இருப்பதால் அதைத் திரும்ப அனுப்ப முடியாது என்றும் அவர்களிடம் குறைந்தபட்ச பேலன்ஸ் 5,000 ரூபாய் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திரும்ப அனுப்ப முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

அதைக்கேட்ட மாணவி, 76 ரூபாய்க்காக எதிர்முனையில் பேசிய நபர் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு 5,000 ரூபாய் பணம் செலுத்தியிருக்கிறார். 5076 ரூபாய் பணம் திரும்ப வரும் என்று எதிர்பார்த்த மாணவிக்கு மீண்டும் ஏமாற்றமே. மறுபடியும் அதே நம்பரைத் தொடர்புகொண்ட மாணவியிடம், `தொழில்நுட்பக் கோளாறு' என்று கூறி மீண்டும் 5000 ரூபாய் பணம் போடச் சொல்லியிருக்கிறார். அந்த நபரின் பேச்சைக் கேட்டு இதேபோல் 8 முறை 5000 ரூபாயாக மொத்தம் 40,000 ரூபாய் செலுத்தியிருக்கிறார் மாணவி. இதைத் தொடர்ந்து, ஒருகட்டத்தில் அந்த போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி, வங்கி மோசடி பிரிவில் இவரின் பிரியாணி கதையை மத்திய குற்றப்பிரிவில் புகாராக எழுதிக் கொடுத்திருக்கிறார்.

என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா!


5
Murali's restaurant

10 ரூபாய் பிரியாணி:

`5 ரூபாய் காக்கா பிரியாணி' நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால், தேனி மாவட்டத்தின் 10 ரூபாய் பிரியாணி பற்றி தெரியுமா? ஆனால், இது காக்கா பிரியாணியெல்லாம் இல்லைங்க. கடந்த ஆகஸ்ட் மாதம் தேனி மாவட்டம் பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே `முரளி ரெஸ்ட்டாரன்ட்' திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்த பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், முரளி உணவகத்துக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

``பெரியகுளம் பகுதி மக்களில் பலருக்கும் பிரியாணி என்பது பெரிய கனவாகவே இருக்கிறது. ஹோட்டல் திறக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, திறப்பு விழா நாளில், குறைந்த விலையில் மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன் அடிப்படையில், ஒரு ரூபாய்க்குப் பரோட்டாவும், பத்து ரூபாய்க்கு பிரியாணியும் கொடுக்க முடிவு செய்தோம். மொத்தம் 250 பேர் சமையல் வேலைகளைப் பார்த்தனர். ஏழாயிரம் பிரியாணியும், ஏழாயிரம் பரோட்டாவும் கொடுப்பதே எங்களின் இலக்கு. பலர் ஆர்வத்தோடும், ஆசையோடும் பிரியாணி, பரோட்டா வாங்கிச்செல்கிறார்கள். இதைப் பார்க்கும்போது, மன நிறைவைத் தருகிறது.!" என்று கூறிப் பூரித்தார் ஹோட்டல் உரிமையாளர் முரளி.

பெரிய மனசுங்க உங்களுக்கு!


6
Biriyani

மட்டன் பிரியாணி ரூ. 200; சிக்கன் பிரியாணி ரூ.180!:

பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாங்கும் பொருள்களுக்குக் கடந்த மார்ச் மாதம் விலை நிர்ணயம் செய்தது தேர்தல் ஆணையம். அதன்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் 70 லட்சம் ரூபாய் வரையும், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் 28 லட்சம் ரூபாய் வரையும் செலவு செய்யலாம் எனத் தெரிவித்தது. மேலும், வேட்பாளர்கள் செலவிடும் ஒவ்வொரு பொருளுக்கும் கணக்குக் காட்டுவதற்கான விலைப் பட்டியல் என சுமார் 208 பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, தண்ணீர், சால்வை, போஸ்டர், துண்டுப் பிரசுரம் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக விலை வழங்கப்பட்டது. அந்த வரிசையில் மட்டன் பிரியாணியின் விலை 200 ரூபாய் எனவும் சிக்கன் பிரியாணியின் விலை180 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டன.

அதுசரி, வெங்காயம் விலை எப்படி?


7
`வேட்டி இல்லையா, அப்போ பிரியாணி கொடுங்க'!- ஜெ.பிறந்தநாள் விழாவில் துரத்தப்பட்ட அ.தி.மு.க-வினர்!

வேட்டிக்குப் பதிலாக பிரியாணி:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71- பிறந்தநாள் விழா, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் எம்.பி வனரோஜா தலைமையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த விழாவில் வனரோஜாவின் ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாகக் கூறி 500-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்துள்ளனர். அமைச்சர் முன்னிலையில் முதலில் 10 பேருக்கு வேட்டி, சேலை கொடுக்கப்படும் எனவும் மற்றவர்களுக்கு விழா முடிந்ததும் தரப்படும் எனவும் கூறியுள்ளனர். ஆனால், விழா முடிந்ததும் 50 பேருக்கு மட்டுமே வேட்டி சேலைக்கான டோக்கன் கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு வேட்டி, சேலை கிடையாது எனக் கூறியுள்ளார் வனரோஜா. சரி, வேட்டி சேலைதான் இல்லை, பிரியாணியாவது சாப்பிட்டுப் போகலாம் என்று ஆசையாகச் சென்ற ஆதரவாளர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம். காரணம், டோக்கன் உள்ள 50 பேருக்கு மட்டுமே பிரியாணி கொடுக்கப்படும் மற்றவர்கள் மண்டபத்தை விட்டு 'கெட்-அவுட்' என எம்.பி-யின் ஆட்கள் கூறியதுதான்.

என்ன கொடுமை சார் இது!


8
Murder

பிரியாணி தகராறில் கொலை:

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்றுப் பகுதியைச் சேர்ந்த ரவி, தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்திவந்தார். இவரின் கடையில் ஒருமுறை ரேடியோ விஜி என்பவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். மேலும், ரவியின் கழுத்தில் கத்தியை வைத்து ரேடியோ விஜி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த ரவியின் உறவினர் ஒருவர் பிரியாணி கரண்டியால் ரேடியோ விஜியை தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீஸார், ரேடியோ விஜியைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த ரேடியோ விஜி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேனியம்மன் தெருவில் வைத்து ரவியை வழிமறித்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். நொடி நேரத்தில் அங்கிருந்து ரேடியோ விஜய் மற்றும் அவரின் கூட்டாளிகள் தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ரவி, உயிரிழந்தார்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பிளேட் பிரியாணிக்கு கொலையா!


9
Student Manjunath

வார்டனுக்கு பிரியாணி வாங்கச் சென்ற மாணவன் விபத்தில் பலி:

திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் ஹாஸ்டலில் மெடிக்கல் கேம்ப் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மெடிக்கல் கேம்ப் முடிந்ததும் டாக்டர் மற்றும் நர்ஸ்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி விடுதி வார்டன்கள், அங்கு தங்கிப் படிக்கும் மஞ்சுநாத் என்ற மாணவனிடம் இருசக்கர வாகனத்தைக் கொடுத்து பிரியாணி வாங்கி வரச்சொல்லி இருக்கின்றனர். 5 கி.மீ தொலைவில் உள்ள பிரியாணி கடைக்கு மஞ்சுநாத் சென்றபோது, வண்டியின் பின்புறம் டிராக்டர் மோதியதால் படுகாயமடைந்தார்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மஞ்சுநாத் பலியானார். `11 வகுப்பு படிக்கும் என் மகன் மைனர் என்று தெரிந்தும், அவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் அவனிடம் டூவீலரை கொடுத்து பிரியாணி வாங்க அனுப்பியுள்ளனர். ஹாஸ்டலுக்குப் படிக்க அனுப்பிய என் மகனை என் அனுமதியின்றி வெளியே அனுப்பியுள்ளனர். மலைப்பகுதியில் டூவீலரை ஓட்டுவானா ஓட்டமாட்டானா என்ற சிந்தனை கூட இல்லாமல் இவர்கள் செய்த செயலால் என் மகன் இறந்துவிட்டான். அவன் இறப்புக்கு நியாயம் வேண்டும். வார்டன்கள் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவது எந்த வகையில் நியாயம்' என்று அழுதார் மஞ்சுநாத்தின் தந்தை.

விதிமுறைகளைக் கற்றுத்தரக்கூடிய ஆசிரியர்களே விதியை மீறுவது வேதனையளிக்கிறது.


10
Kannan with kids

வாழ்நாளில் முதல் முதலாக பிரியாணியை ருசித்த பழங்குடியின குழந்தைகள்:

திரும்பும் திசையெங்கும் பிரியாணி கடைகள் நிறைந்திருக்கும் இந்தக் காலத்திலும் பிரியாணியின் வாசமே தெரியாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அப்படிப்பட்டவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த கண்ணன்.

டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளரான இவர், ஈரோடு மாவட்டம், பர்கூர் மலையில் உள்ள சுமார் 200 பழங்குடியினக் குழந்தைகளை ஓர் இடத்தில் திரட்டி, அவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார். அவர்களில் பலர், அன்றைக்குத்தான் முதல்முதலாக பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவல், ஸ்வீட், சாக்லேட் என அத்தனையையும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். உணவோடு சேர்த்துப் படிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார் கண்ணன். `இதுதான் பிரியாணியா சார்?’ என்று ஆச்சர்யமாகப் பார்த்ததுடன், `சார், எங்க வீட்டுக்கு இதைக் கொஞ்சம் எடுத்துட்டுப் போகட்டுமா!’ எனக் கேட்டு வாங்கியும் சென்றுள்ளனர் குழந்தைகள்.

ஹாட்ஸ் ஆஃப் கண்ணன்!