Published:Updated:

மஞ்சள் வாழைப்பழத்தில் ரசாயனம் பூசி செவ்வாழைப் பழமாக மாற்றுவது உண்மையா? #Video

சாதாரண வாழைப்பழத்தில் சிவப்பு நிறம் பூசி செவ்வாழை என விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ உலவுகிறது. அதில் உள்ள உண்மை என்ன என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.

செவ்வாழைப் பழம்
செவ்வாழைப் பழம்

சமீபத்தில் வைரலான வாட்ஸ் அப் வீடியோ அது. செவ்வாழைப் பழத்தை பாத்திரம் தேய்க்கும் ஸ்டீல் கம்பி மற்றும் பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் சோப்பால் தேய்க்கிறார் ஒருவர். செவ்வாழைப் பழத்தின் மீது உள்ள சிவப்பு நிறம் மறைந்து பழம் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது. 'மஞ்சள் பழத்தின் மீது ரசாயனம் பூசி செவ்வாழைப் பழமாக மாற்றப்படுகிறது. இந்தப் பழத்தை சாப்பிடுபவர்களுக்கு ஆபத்து' என அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவியதால் மருத்துவ குணம் நிறைந்த செவ்வாழைப் பழத்தின் மீது, 'இது ஒரிஜினலா, சாயம் பூசப்பட்டதா' என மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தேய்த்துக் கழுவினால் மஞ்சளாகும் செவ்வாழை
தேய்த்துக் கழுவினால் மஞ்சளாகும் செவ்வாழை

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்க மங்கலம் பகுதியில் இயற்கை வாழைப்பழங்கள் விற்கும் கடைக்குச் சென்றோம். அங்கு குலை குலையாக செவ்வாழை, ரசகதலி, மட்டி என விதவிதமான பழங்கள் இருந்தன. அத்தனையும் அந்தப் பகுதியில் வாழைத்தோட்டங்களிலிருந்து நேரடியாகக் கடைக்கு வந்தவை. அங்கிருந்த ஒரிஜினல் செவ்வாழைப் பழத்தை எடுத்து பாத்திரம் கழுவும் சோப்பு கலந்த ஸ்டீல் கம்பியால் தேய்த்தோம். பழத்தின் மேல் பகுதியில் உள்ள சிவப்பு லேயர் உரிந்து சென்று மஞ்சள் நிறமாக மாறியது செவ்வாழை. சோப்பு மட்டும் தேய்த்தால் செவ்வாழையில் நிற மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், சோப்பு இல்லாமலே பாத்திரம் தேய்க்கும் ஸ்டீல் கம்பியால் தேய்த்தால் செவ்வாழையின் மேல்பகுதி லேயர் உரிந்து மஞ்சளாக மாறுகிறது. நம் கைகளாலேயே செவ்வாழையின் மீது சுரண்டினால் மேல் பகுதியில் உள்ள மெல்லிய லேயர் உரிந்து வருகிறது. அடிப்பகுதியில் உள்ள மஞ்சள் பகுதி வெளியே தெரிகிறது.

"வடிவம் மற்றும் ருசியை வைத்தே செவ்வாழை பழத்தைக் கண்டுபிடித்துவிடலாம். ரசாயனம் பூசினால் கழுவும்போது தண்ணீரும் சிவப்பு நிறமாக மாற வேண்டுமே. அந்த வீடியோவில் அப்படித் தண்ணீர் சிவப்பாகவில்லை. யாரோ வேண்டுமென்றே தவறாக இதைப் பரப்புகிறார்கள். செடிகள் பச்சையாக இருக்க குளோரோஃபில் (Chlorophyll) என்ற தன்மை இருப்பது போன்று, ஆந்தோசயனின் (Anthocyanin) என்ற நிறமிதான் செவ்வாழையின் சிவப்பு நிறத்துக்குக் காரணம்.

முனைவர் அரிஹரன்
முனைவர் அரிஹரன்
`எகிப்து வெங்காயம் மக்களுக்குப் பிடிக்கல!' - காரணம் கூறும் வியாபாரிகள்

வாழைமரங்களின் மூட்டில் வளரும் கன்றுகளைப் பிடுங்கி மறு நடவு செய்வதன் மூலம் இனவிருத்தி நடக்கிறது. ஒரு செவ்வாழை மரத்தின் மூட்டில் இருந்து கன்றை அகற்றாமல் அப்படியே வளர்த்தால் இரண்டு முறைக்கு மேல் முளைக்கும் கன்றுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அதனால் ஆந்தோசயனின் தன்மை குறைந்து, அந்த வாழையில் இருந்து கிடைக்கும் காய் பச்சை நிறத்திலும், பழம் மஞ்சள் நிறத்திலும் மாறிவிடும். ஆனால், சுவையிலும் குணத்திலும் செவ்வாழைப் பழத்தை ஒத்திருக்கும். அப்படிக் கிடைக்கும் மஞ்சள் வாழைப்பழத்துக்கும் நல்ல விலை கிடைக்கும் என்பதால் அதன் மீது சிவப்பு ரசாயன சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் இயற்கை சார்ந்து ஆய்வு செய்யும் முனைவர் அரிஹரன்.

குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன், செவ்வாழையின் மஞ்சள், சிவப்புத் தன்மைக்குப் பின் இருக்கும் அறிவியல் பற்றி விரிவாகப் பேசினார்.

''செவ்வாழையும் வெளியே காணப்படும் சிவப்பு நிறத் தோலுக்குக் கீழே மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். மற்ற வாழையில் இல்லாத சிறப்பு, இந்தச் செவ்வாழையில் இருக்கும் லூட்டின் மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும்தான். இவை இரண்டும் இருப்பதால் மஞ்சள் தோலுக்கு மேல் கூடுதலாகச் சிவப்பு நிறம் இருக்கும். செவ்வாழை பழத்தை வாங்கி, விரல் நகத்தால் கீறினால் உள்ளே மஞ்சள் தோல்தான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு'' என்றவர் செவ்வாழை அறிவியல் பற்றிப் பேசத் தொடங்கினார்.

செந்தூர்குமரன்
செந்தூர்குமரன்

'' 'லூட்டின்' என்னும் சாந்தோபில் வகையைச் சேர்ந்த நிறமிகள் பழங்களுக்கு இயற்கையாகவே மஞ்சள் நிறத்தை வழங்கக்கூடியவை. சில பழங்களில் பீட்டா கரோட்டின் அதிகம் இருக்கும். அந்தப் பழங்கள் சிவப்பாக இருக்கும். செவ்வாழையில் இந்த இரண்டும் உள்ளன. இவை இரண்டும் சேர்ந்துதான் பழத்தோலின் கீழ் அடுக்கில் மஞ்சளையும் மேல் அடுக்கில் சிவப்பு நிறத்தையும் உருவாக்குகின்றன. அதனால் பழத்தின் மேல் தோல் சிவப்பு நிறமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த வகை வாழைப்பழங்களைச் செவ்வாழை என்கிறோம்.

பொதுவாக அனைத்து வாழையிலும், வாழைக்காய் உருவாகும்போது ஸ்டார்ச் என்ற மாவுப் பொருள் சேரும். அப்போது அதில் நிறமிகள் உள்ளிட்ட எந்தப் பொருளும் இருக்காது. காய் வளர்ச்சி அடையும் நேரத்தில் ஸ்டார்ச், சாதாரண சர்க்கரையாக மாறும். அப்போது பச்சையம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். அதனால் காய் வெளுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் லூட்டினும் அதோடு சேர்ந்த ஆல்பா கரோட்டினாய்டும் வளர்சிதை மாற்றத்தில் பழத்தோலில் உருவாக ஆரம்பிக்கும். இதனால் பழத்தின் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறும். இது பொதுவாக, அனைத்து ரக வாழைப்பழங்களிலும் நடக்கும் ரசாயன மாற்றம். அதே நேரத்தில், செவ்வாழையில் கூடுதலாக ஒரு நிறமி மாற்றம் நிகழும்.

செவ்வாழை
செவ்வாழை

மஞ்சள் வாழைப் பழத்தில் ரசாயனம் பூசி செவ்வாழைப் பழமாக மாற்றுவது உண்மையா! #RedBanana

Posted by Vikatan EMagazine on Tuesday, December 17, 2019

செவ்வாழை ரகத்தில் ஆந்தோசயனின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டு நிறமிகளும் கூடுதலாக இருப்பதால் மஞ்சள் நிறத்துக்கு மேலே சிவப்பு நிறம் படியும். இது செவ்வாழையில் இயல்பாக நடக்கக்கூடிய ரசாயன மாற்றம். இயற்கையாகவே செவ்வாழைப் பழத்தில் நகத்தை வைத்துச் சுரண்டினால் அதன் கீழே உள்ள மஞ்சள் நிறம் தெரியும். இதுதான் அறிவியல். இதை நீங்களே உணர்ந்துகொள்ள முடியும். ஒரு சிவப்பு வாழையை வாங்கி நகத்தால் கீறினால் மஞ்சள் தெரியத்தான் செய்யும். இந்த அறிவியலை மறைத்துத் தவறான தகவலைச் சமூக வலைதளங்களில் சிலர் பரப்புகிறார்கள்'' என்றவர், செவ்வாழையில் உள்ள சத்துகள் தொடர்பாகச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

செவ்வாழையில் உள்ள சத்துகள்!

* 120 கிராம் செவ்வாழையில் கலோரி 90 கிராம், மாவுச்சத்து 21 கிராம், புரோட்டீன் 1.3 கிராம், நார்ச்சத்து 3 கிராம் ஆகியவை உள்ளன.

* பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம் ஆகிய நான்கு சத்துகள்தான் வாழைப்பழத்தின் முக்கியமான சத்துகள். இந்தச் சத்துகள் மற்ற வாழையைவிடச் சிவப்பு வாழையில் அதிகம்.

* செவ்வாழையில் பொட்டாசியம் 9 %, வைட்டமின் பி-6 20 %(RDI), வைட்டமின் சி 9 %, மெக்னீசியம் 8 % இருக்கின்றன.

* அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பொட்டாசியம் சத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் நடந்த ஓர் ஆய்வில் அதிக ரத்த அழுத்தமுள்ள 22 நபர்களுக்குத் தொடர்ந்து சிவப்பு வாழைப்பழம் கொடுத்துவந்தபோது, அவர்களுக்கு 7 mm Hg அளவுக்கு சிஸ்டோலிக் அழுத்தம் குறைந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

செவ்வாழை
செவ்வாழை

லூட்டின், பீட்டா கரோட்டின் இரண்டும் சேர்ந்து இருக்கிற சிறப்புமிக்க பழம் செவ்வாழைப்பழம். செவ்வாழையில் இந்த நிறமி சத்துகள் இருப்பதால் இவை இரண்டும் சேர்ந்து வயதான காலத்தில் கண் குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கின்றன. தினமும் 100 கிராம் அளவுக்குச் செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு வயதான காலத்திலும் கண் தொடர்பான பிரச்னையே வராது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

* செவ்வாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது. பொதுவாக, ஃப்ரீ ராடிகிள் உடம்பில் அதிகம் பெருக்கவிடக் கூடாது. அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். செவ்வாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஃப்ரீ ராடிகிள் பெருகாமல் தடுக்கிறது.

* செவ்வாழையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது; அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். உடலில் ரத்தச் சிவப்பணுக்கள் குறையாமல் பார்த்துக்கொள்ளும். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 இரண்டும் சேர்ந்து இந்த வேலையைச் செய்யும்.

* இதில் உள்ள 'ப்ரக்டோ ஆலிகோ ஸாக்கரைட்ஸ்' என்ற நார்ச்சத்து நமது உணவுக்குழாயில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும். அதனால் செரிமானம் சீராக இருப்பதோடு மலச்சிக்கல் வராமலும் தடுக்கும்'' என்றார்.

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை
சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை
சுவையில்லை, மணமில்லை... எகிப்து வெங்காயத்தில் என்னதான் பிரச்னை?

செவ்வாழையின் தாயகம் தென்கிழக்கு ஆசியா; குறிப்பாக இந்தியா. இங்கிருந்துதான் உலகம் முழுவதும் பரவியது. 3,000 ஆண்டுகளுக்கு முன்பே வாழைப்பழத்தை மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். கி. மு 327-ம் ஆண்டில் அரேபியப் படையெடுப்பின்போது இந்தியாவிலிருந்து கரீபியன் கணவாய் வழியாகப் பிற நாடுகளுக்குப் பரவியது. பெரிய அளவில் வாழை சாகுபடி, 1834-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போதும் செவ்வாழையை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். காரணம் அதன் நிறம். 1880-ம் ஆண்டுதான் உணவுப் பொருளாகச் செவ்வாழையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.''