'மதுரையில் ஏன் உணவுப்பல்கலைகழகத்தை ஏற்படுத்தக் கூடாது' என்று உணவுப் பிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு வெரைட்டியான உணவுகளை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள் மதுரைக்காரர்கள்.

எல்லா ஊர்களிலும் வழக்கமாக கிடைக்கிற உணவுகள்தான். ஆனால், அதே உணவுகள் மதுரைக்காரர்கள் தயாரிக்கும்போது செய்நேர்த்தியும் தனிச்சுவையும் வந்து விடுகிறது.
அசைவத்துக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல் சைவ உணவுகளிலும் கரகம் ஆடுகிறார்கள் மதுரைக்காரர்கள். அப்படி பிரபலமாக விளங்கும் பல சைவ உணவகங்களுக்கு மத்தியில் 'ஐயப்பன் தோசை கடை' தனித்து தெரிகிறது.
சைவ உணவகங்களில் பத்தோடு பதினொன்றாக இருக்கும் தோசையை, மெயின் அயிட்டமாக வைத்து, பல விதமான தோசைகளை இக்கடையில் சுட்டு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியவர், சிறியவர், டயட்டில் இருப்பவர் என அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வகை வகையான தோசைகள்.

தோசை, ஸ்பெஷல் தோசை, மசால் தோசை, நெய் தோசை, ரவா தோசை, பொடி தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம் போன்றவற்றை மட்டும் பரவலாக அறிந்தவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஐயப்பன் தோசை கடையில் தோசைகளின் அணிவகுப்பையே நடத்துகிறார்கள்.
நெய் வெங்காய ஊத்தப்பம், சின்ன வெங்காய ஊத்தப்பம், தக்காளி ஊத்தப்பம், கேரட் மல்லி ஊத்தப்பம், நெய் கறிவேப்பிலை பொடிதோசை, வெண்ணெய் அடை, பாஸ்தா மசாலா தோசை, பீட்சா தோசை, சாக்கோ தோசை, 3 அடுக்கு தோசை, பனீர் பாஸ்தா மசாலா தோசை, நெய் முந்திரி ரவா தோசை, நெய் முந்திரி தேங்காய் தோசை, வெண்ணெய் வெங்காய தோசை, வெண்ணெய் பொடி தோசை, நெய் தேங்காய் துருவல் தோசை, ஸ்வீட் ரவா தோசை, ஸ்பெஷல் பனீர் பீட்சா தோசை, கார வெண்ணெய் தோசை, ஸ்பெஷல் காளான் பீட்சா தோசை, பூண்டு பீட்சா தோசை, சன்னா பீட்சா தோசை, சீஸ் தோசை, கோவா தோசை, கிட்ஸ் ஸ்பெஷல் பட்டர் ஜாம் தோசை... இன்னும் பட்டியல் நீளுகிறது.

அவர்களின் தோசை வெரைட்டிகளை கேட்டால் மலைப்பு ஏற்படுகிறது. இது பேருக்கு மெனு கார்டில் மட்டுமல்ல, நீங்கள் கேட்டவுடன் இல்லை என்று சொல்லாமல் உங்கள் மேஜைக்கு ஆவி பறக்க நாலு வகை சட்னியுடன் அனைத்து தோசைகளும் வருகின்றன.
இப்படி அசத்தலான சுவையில் புதிய வடிவங்களில் விலை குறைவாக தோசைகளைத் தயாரித்து வழங்கும் மதுரை பாண்டிய வேளாளர் தெருவிலிருக்கும் ஐயப்பன் தோசை கடைக்குக் குடும்பம் குடும்பமாக மக்கள் வருகிறார்கள். வெளியூர், வெளிநாட்டு மக்களும் விரும்பி வந்து உண்டு சொல்கிறார்கள். இவர்களின் தோசை புரட்சியைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு கௌரவித்துள்ளன.

மாலை 7 மணிக்கு தொடங்கும் தோசைக்கடை இரவில் பிஸியாக இயங்குகிறது.
அதிலும் இக்கடையின் நெய் வெங்காய ஊத்தப்பம், கறிவேப்பிலை பொடி தோசைகளை விரும்பி மக்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள்.
குழந்தைகளுக்கென பாஸ்தா மசாலா சோசை, நெய் முந்திரி ரவா தோசை, ஸ்வீட் ரவா தோசை, பீட்சா தோசை, கோவா தோசை, பட்டர் ஜாம் தோசை என்று தனியாக தோசைகள் வைத்து கவர்கிறார்கள்.

கடை உரிமையாளர் கார்த்திகேயனிடம் பேசினோம், "1976-ல எங்கப்பா ஆரம்பிச்ச ஹோட்டல். எல்லா வகையான டிபன் ஐயிட்டங்களும் கொடுத்துட்டு இருந்தோம். 90-க்குப் பிறகு தோசையை மெயின் ஐயிட்டமாக வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினோம்.
நான் எம்.ஏ படித்துவிட்டு அப்பா செய்த ஹோட்டல் வியாபாரத்தை கவனிக்க வந்தேன். மதுரையில் ஃபேமஸான இட்லிக்கடைகள் நிறைய உள்ளன. அதுபோல் தோசைகளை பிரபலமாக்க நினைத்து, புதுபுது தோசைகளாக உருவாக்கினோம். ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பணிபுரிந்தோம்.
எங்கள் கடையை பொருத்தவரை உணவுகளில் அஜினமோட்டோ, கலர்கள் சேர்ப்பதில்லை.
தரமான கலப்படமில்லாத நல்ல சமையல் எண்ணெய், நெய் பயன்படுத்துகிறோம். என்னதான் புதுப்புது வெரைட்டிகளை கொடுத்தாலும் உணவு தயாரிப்பு வீட்டுப் பக்குவத்தில்தான் இருக்கும்.
அதுபோல் மக்கள் அனைவரும் வாங்கும் வகையில் 20 ரூபாய் முதல் 70 ரூபாய் வரைக்கும் தோசைகளின் விலைகளை வைத்திருக்கிறோம். குடும்பத்தோடு வருகிறவர்களுக்கு ஆளுக்கு ஒரு டேஸ்ட் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் தோசைகளைத் தயாரிக்கிறோம்.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளைக் கவரவே பீட்சா தோசை, பட்டர் ஜாம் தோசை, கோவா தோசை இனிப்பு தோசைகளை வழங்குகிறோம். ஆனால், அதை பெரியவர்களும் விரும்புகிறார்கள் என்பதுதான் அதன் வெற்றியாக உள்ளது.
சமீப காலமாக வெரைட்டி சப்பாத்தி, இடியாப்பம், வெஜ் சைனீஸ் உணவுகளையும் வழங்குகிறோம். அனைத்து வகையான தோசைகளுக்கும் தேவையான பொருள்களை ரெடியாக வைத்திருப்போம். கஸ்டமர் கேட்கும் எந்த தோசையும் இல்லை என்று சொல்ல மாட்டோம்" என்கிறார்.

தோசைகளின் தலைநகரமாக மதுரையை மாற்ற கார்த்திகேயன் பாடுபட்டு வருகிறார். மதுரை வருகிறவர்கள் ஒரு எட்டு ஐயப்பன் தோசை கடைக்கு வந்துட்டு போங்க!
காதலர் தின ஸ்பெஷல்: உங்களது Flames பொருத்தத்தைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.