புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினமான டிசம்பர் 31-ம் தேதி இரவு மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளனர் என்று Zomato மற்றும் Swiggy உணவு டெலிவரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நிறுவனங்கள் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன.
அதில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவுகளை ஆர்டர் செய்திருந்த நிலையில் பிரியாணி மற்றும் பீட்சா ஆகியவை பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 3.5 லட்சம் பேர் பிரியாணியும், 2.5 லட்சம் பேர் பீட்சாவும் ஆர்டர் செய்துள்ளனர். இதில் 75 சதவிகிதம் பேர் ஹைதராபாத் பிரியாணி, 14 சதவிகிதம் பேர் லக்னோ பிரியாணி, 10 சதவிகிதம் பேர் கொல்கத்தா பிரியாணி ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.

ஹைதராபாத் பிரியாணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பவார்ச்சி மட்டும் 15 ஆயிரம் கிலோ பிரியாணியை தயாரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 12,344 ரவா உப்புமாவை ஆர்டர் செய்திருக்கின்றனர். கடந்த ஆண்டை விட புத்தாண்டு தினத்தன்று 47 சதவிகிதம் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.
முன்னதாக, 2022-ம் ஆண்டில் ஒரு நிமிடத்துக்கு மட்டும் 186 பிரியாணி ஆர்டர்களை Zomato பெற்றதாகவும், அதேபோல் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 137 பிரியாணி ஆர்டர்களை Swiggy பெற்றதாகவும் அந்த இரண்டு நிறுவனங்களும் தெரிவித்திருந்தன.