Published:Updated:

ரக்‌ஷாபந்தன் அன்று சகோதர்களுக்கு மட்டும் ராக்கி கட்டுவது ஏன்?

ரக்‌ஷா பந்தன்
ரக்‌ஷா பந்தன் ( commons.wikimedia.org - carrotmadman6 )

சகோதர - சகோதரிகளின் பாசத்தையும் பந்தத்தையும் வெளிப்படுத்தும் உன்னதத் திருவிழாவாக மதம், ஜாதி, இனம், மொழி என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து கொண்டாடப்படும் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்தத் திருவிழா.

இந்தியாவின் கலாசாரப் பெருமைகளை உலகுக்கு உணர்த்தும் பண்டிகைகள் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமானது ‘ரக்‌ஷா பந்தன்’. சகோதர - சகோதரிகளின் பாசத்தையும் பந்தத்தையும் வெளிப்படுத்தும் உன்னதத் திருவிழாவாக மதம், ஜாதி, இனம், மொழி என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து கொண்டாடப்படும் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்தத் திருவிழா.

ஸ்ராவண மாதம் எனப்படும் ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரை வரும் சந்திர மாதத்தில் வரும் பௌர்ணமியே ரக்‌ஷாபந்தன் எனக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்தவருக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு நெருக்கமானவர்களைச் சகோதரர்களாக நினைத்து வண்ணக் கயிறைக் (ராக்கி) கையில் கட்டியும், பரிசளித்தும் மகிழ்வர். ராக்கிக் கயிற்றைக் கட்டிக்கொள்வதென்பது, `ராக்கி கட்டிய பெண்ணை சகோதரியாகப் பாவித்து கடைசிவரை அவளது பாதுகாப்புக்கும், நலனுக்கும் உறுதுணையாக இருப்பேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வதற்குச் சமம்.

ஆண் - பெண் சகோதரத்துவத்தைப் போற்றும் இந்தப் பண்டிகை கிருஷ்ணன் - திரௌபதியின் மீது வைத்திருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். பகவான் கிருஷ்ணனுக்கு ஒருமுறை அடிபட்டுக் கையில் ரத்தம் வழிந்தது. வலியால் துடித்த கிருஷ்ணனின் துயரத்தைப் பார்த்த திரௌபதி, தன் புடவையைக் கிழித்து அவரது கையில் ஏற்பட்ட காயத்துக்குக் கட்டு போட்டாள்.

திரௌபதி - கிருஷ்ணா
திரௌபதி - கிருஷ்ணா
Ramanarayanadatta astri

திரௌபதியின் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போன கிருஷ்ணன் அவளைத் தன் சகோதரியாகப் பாவித்து 'இனி உன்னை அனைத்துத் துன்பத்திலிருந்தும் காப்பேன்' என்று உறுதியளித்தார். இந்த வாக்குறுதியே திரௌபதியை சூதாட்டச் சபையில் கிருஷ்ணன் காப்பாற்றுவதற்குக் காரணமானது. திரௌபதி கிருஷ்ணன் கையில் துணியைக் கட்டிய அந்த நாளே 'ரக்‌ஷாபந்தன்' என்று சொல்லப்படுகிறது. ஆவணி மாதப் பௌர்ணமி நாளில்தான் யமனின் தங்கையான யமுனை தன் சகோதரனுக்குக் கையில் புனிதமான ராக்கிக் கயிற்றைக்கட்டி இறப்பில்லாத அமரத்துவத்தைப் பெற்றாள். 'இந்த நாளில் பெண்கள் தன் சகோதரர்கள் கையில் ராக்கி கயிறு கட்டினால், சகோதர சகோதரிகள் நல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்கள் வாழ்வார்கள்’ என்று யமுனை வரமளித்ததாகக் கூறுகின்றன புராணங்கள்...

வட இந்தியாவில் இந்தப் பண்டிகை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

உத்ரகாண்ட் மாநிலம், நைனிடால் அருகேயுள்ள ருதார்புர் பகுதியைச் சேர்ந்த ராதா கோஹ்லியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

ராதா கோஹ்லி
ராதா கோஹ்லி

“வருடத்தில் பல பண்டிகைகள் வந்தாலும் ரக்‌ஷாபந்தன் திருவிழா எங்களுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்தது. ரக்‌ஷா பந்தன் அன்று காலையிலேயே பூ, இனிப்பு, விளக்கு, மஞ்சள், குங்குமம், ராக்கிக் கயிறு ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து ‘ஆர்த்தி தாலி’ என்னும் ஆரத்தித் தட்டைத் தயார் செய்வோம். விளக்கை ஏற்றி உடன் பிறந்த சகோதரர்களுக்கு ஆர்த்தி எடுத்து, கடவுளை வழிபடுவதைப் போலவே வழிபடுவோம். அதன்பிறகு மஞ்சள் மற்றும் குங்குமத்தை சகோதரர்களின் நெற்றியில் திலகமிட்டு, ராக்கிக் கயிற்றைக் கையில் கட்டி அவர்களுக்கு இனிப்பை ஊட்டுவோம். அதன்பிறகு சகோதரர்கள் எங்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருளை வழங்குவார்கள். திருமணமாகி கணவர் வீட்டுக்கு வந்தபிறகு நான் கொண்டாடும் முதல் ரக்‌ஷா பந்தன் இது. என் சகோதரனிடம் பரிசுப் பொருளைப் பெற ஆவலுடன் இருக்கிறேன்” என்றார் மகிழ்ச்சியுடன். ரக்‌ஷா பந்தன், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் கொண்டாடப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் கொண்டாடப்படுகிறது.

  • மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ‘ஜுலான் பூர்ணிமா’ எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் மற்றும் ராதையை மக்கள் இந்த நாளில் வணங்கி வழிபடுவார்கள்.

  • மகாராஷ்டிராவில் ரக்‌ஷா பந்தனுடன் சேர்ந்து 'நரலி பூர்ணிமா' என்னும் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இங்கு வாழும் மீனவர்கள் வருண பகவானை வழிபடும் பண்டிகையாக இருக்கிறது.

ஆரத்தித் தட்டு
ஆரத்தித் தட்டு
  • ஜம்மு உள்ளிட்ட பகுதியில் பட்டம் விட்டு ரக்‌ஷாபந்தனைக் கொண்டாடுவார்கள்.

  • ஹரியானாவில் ரக்‌ஷா பந்தனுடன் ‘சலோனோ’ எனும் பண்டிகையையும் கொண்டாடுகிறார்கள். சகோதரர்கள் கையில் தாயத்துகளைக் கட்டுவதன் மூலம் தீய சக்திகள் விலகும் என்பது இவர்கள் நம்பிக்கை.

  • நேபாளத்தில் 'ஜனை பூர்ணிமா' அல்லது 'ரிஷிதார்பனி' எனும் பண்டிகைகளும் ரக்‌ஷா பந்தனுடன் சேர்த்துக் கொண்டாடப்படுகிறது. இது இந்துக்கள் மற்றும் புத்தர்கள் ஆகிய இருதரப்பைச் சேர்ந்த மக்களும் கொண்டாடும் பண்டிகைகளாக விளங்குகிறது.

ரக்‌ஷா பந்தன் தொடர்புடைய சில ஆதாரமற்ற, வரலாற்றுக்கால சம்பவங்களும் மக்கள் மத்தியில் புழங்கி வருகின்றன. அவை...

அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்தபோது அவரைப் போரஸ் எனும் மன்னன் எதிர்த்தார். போரஸின் படை பலத்தைப் பார்த்த அலெக்‌சாண்டரின் மனைவி ரோக்ஷனா பயந்துபோய், ‘தன் கணவனுக்கு எதுவும் ஆகக்கூடாது’ என்று அவன் கையில் புனித நூல் ஒன்றைக் கட்டிவிட்டாளாம். அலெக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தபோது, போரஸ் அந்தப் புனித நூலைப் பார்த்துவிட்டு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டாராம்.

வரம் அருளும் விஷ்ணு காஞ்சி #Iraiyarul #Ebook
ரக்‌ஷா பந்தன் ராக்கி
ரக்‌ஷா பந்தன் ராக்கி

குஜராத்தை ஆண்ட பகதூர் ஷா சித்தூர் நாட்டை ஆட்சி செய்த கர்ணாவதியின் மீது போர் தொடுத்தார். இதைக் கேள்விப்பட்ட ராணி, முகலாயப் பேரரசர் ஹுமாயூனுக்கு ‘ராக்கி’ எனும் புனிதக் கயிற்றை அனுப்பி வைத்து உதவி கேட்டாள். சித்தூர் ராணியின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த ஹுமாயூன், அவளைக் காப்பாற்ற பெரும்படையைத் திரட்டி வந்தார். ஆனால், அதற்குள் பகதூர் ஷா சித்தூரை வெற்றி பெற்றிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு