Published:Updated:

ஆப்பிள் முதல் ஒன்ப்ளஸ் வரை...மொபைல்கள் படையெடுக்கும் டெக்(செப்)டம்பர்!

இந்த மாதம் வெளியாகும் சில முக்கியமான ஸ்மார்ட்போன்கள் இதோ!

1
iPhone 11 Series

iPhone 11 Series

எப்போதும் போல இந்த வருடமும் ஐபோன்கள் மீதான எதிர்பார்ப்புக்குக் குறைவில்லை. கடந்த சில வருடங்களாக ஹார்ட்வேர் விஷயத்தில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லாமலேயே வெளியாகி வருகின்றன ஐபோன்கள். போட்டி நிறுவனங்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளே, ஃபுல் வியூ டிஸ்பிளே எனச் சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஐபோன்கள் இன்னும் நாட்ச்சிலேயே நின்றுகொண்டிருக்கின்றன. இந்த வருடமாவது அதில் ஏதேனும் மாற்றம் வருமா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஐபோன் ரசிகர்கள். ஆனால் தற்போது இணையத்தில் வெளியாகிவரும் ஐபோன்களில் இருக்கும் கேமராவின் வடிவமைப்பே பலருக்குப் பிடிக்கவில்லை. எனவே சமீபகாலமாகச் சரிந்து வரும் ஐபோன் விற்பனையை இந்தப் புதிய போன்களும் சரிகட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வரும் 10 தேதி ஐபோன் 11 சீரிஸ் வெளியாகவுள்ளது.

2
OnePlus 7T series

OnePlus 7T Series

ஆப்பிள் போல இல்லாமல் வருடத்துக்கு இரண்டு போன்கள் என்ற கணக்கில் இதுவரை வெளியாகி வந்தன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள். ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மொபைலும் அதன் பின்னர் சில மாதம் கழித்து செப்டம்பரில் அதன் அப்டேட்டாக ஒரு போனும் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடத் தொடக்கத்திலேயே 7 மற்றும் 7 ப்ரோ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு விட்டது ஒன்பிளஸ் நிறுவனம். அந்த மொபைல்களிலேயே கிட்டத்தட்ட அனைத்து வசதிகளையும் கொடுத்திருந்தது . எனவே இந்த மாதம் 26-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒன்பிளஸ் 7T சீரீஸில் என்ன வசதிகளை ஒன்பிளஸ் நிறுவனம் கொடுக்கப்போகிறது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

3
Realme XT

Realme XT

இந்தியாவில் இப்போதைக்கு ரியல்மீயின் வேகத்தில் போன்களை அறிமுகப்படுத்தும் நிறுவனம் எதுவுமே இல்லை. மாதம் இரண்டு போன்களை சந்தைக்குக் கொண்டு வருகிறது ரியல்மீ. இந்த முயற்சிகள் எல்லாம் முதலிடத்தில் இருக்கும் ஷியோமியை வீழ்த்துவதற்காகத்தான். இந்த மாதமும் இரண்டு போன்கள் விற்பனைக்கு வரவுள்ளன. ஏற்கெனவே ரியல்மீ Q அறிமுகப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் XT வெயிட்டிங். இந்தியாவின் முதல் 64 MP கேமரா ஸ்மார்ட்போனான இது இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

4
LG V60 ThinQ

LG V60 ThinQ

சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி விட்டது, வாவேவும் ஒரு ஃபோல்டபிள் போனைக் கையில் வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது முன்னனி மொபைல் தயாரிப்பு நிறுவனமான எல்ஜி. இன்று வெளியாகும் இந்த போனில் இரண்டு டிஸ்பிளேக்கள் இருக்கப்போகின்றன என்பதை எல்ஜி உறுதிப்படுத்திவிட்டது. மீதமுள்ள விஷயங்கள் இன்று தெரியும். மேலும் இந்த போனில் 5G வசதியும் இருக்கிறது.

5
Xperia 5

Xperia 5

சோனி நிறுவனத்தின் மொபைல்கள் சந்தையில் இருக்கின்றன என்பதே இன்று பலருக்கு நினைவிருக்காது. ஆனால் சோனி தொடர்ந்து பிரீமியம் செக்மென்ட்டில் மொபைல்களை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இன்று Xperia 5 என்ற மொபைலை IFA 2019 நிகழ்வில் சோனி அறிமுகப்படுத்தவுள்ளது. 6.1- இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் Qualcomm’s Snapdragon 855 ப்ராஸசர் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

6
Huawei Mate 30

Huawei Mate 30

வாவேவின் மேட் சீரிஸ் போன்களுடன் கேமரா குவாலிட்டியில் போட்டி போட சில போன்களே தயாராக இருக்கின்றன. அமெரிக்கா விதித்த தடை, அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவு குறைந்தது போன்ற காரணங்களால் சற்று பின்னடைவு இருந்தாலும் தொடர்ந்து போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது வாவே. இந்த போனில் நான்கு கேமராக்கள் மட்டுமன்றி Cine Lens மற்றும் Matrix Camera போன்ற விஷயங்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

7
Samsung Galaxy M30s

Samsung Galaxy M30s

இந்தியாவில் மொபைல் விற்பனையில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து வந்த சாம்சங் நிறுவனத்தை அண்மையில் வீழ்த்தியது ஷியோமி நிறுவனம். எனவே விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட் செக்மென்ட்டில் M சீரிஸை புதிதாகக் கொண்டு வந்தது. அந்த சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து போன்களுமே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது Galaxy M30s என்ற போனை வெளியிடவுள்ளது. இந்த போனில் இதுவரை இல்லாத வகையில் 6000mAh பேட்டரியைக் கொடுத்து அசத்தியிருக்கிறது சாம்சங். இந்த போன் 18-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

8
Vivo Nex 3 5G

Vivo Nex 3 5G

இந்த வருடத்தில் அதிகமாக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் போன்களில் Vivo Nex 3 போனும் ஒன்று. இதில் இருக்கும் டிஸ்பிளேவில் வாட்டர் ஃபால் டிஸைன் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் டிஸ்பிளேவின் இரண்டு ஓரங்களிலும் bezel கள் இருக்காது. மேலும் இதில் 5G வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் வரும் 16-ம் தேதி வெளியாகவுள்ளது.

9
Samsung Galaxy Fold

Samsung Galaxy Fold

கடந்த வருடம் முதல் ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம். அதைப் பயன்படுத்திப் பார்த்த ரிவ்யூவர்கள் அனைவருமே எதிர்மறையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். எனவே சாம்சங் அதிலிருந்த குறைகளைச் சரி செய்த பின்னர் வெளியிடும் முடிவை எடுத்தது. தற்போது கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு இந்த மாதம் Galaxy Fold ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.

10
LG G8X

LG G8X

இன்று வெளியாகவுள்ள எல்ஜியின் முதல் 5G ஸ்மார்ட்போனுக்கு அடுத்த படியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இது வரும் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு வரை எல்ஜி ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேவில் இருக்கும் நாட்ச்சின் அளவு பெரிதாகவே இருந்து வந்தது. அதற்கு மாறாக வாட்டர்டிராப் நாட்ச்சுடன் வெளியாகும் முதல் எல்ஜி ஸ்மார்ட்போன் இது. இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 855 ப்ராஸசர் அல்லது Snapdragon 855+ ப்ராஸசர் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.