''மிடில் கிளாஸ் பொண்ணு!''ரிமோட் ரீட்டா
வசந்த் டி.வியோட 'மண்பேசும் சரித்திரம்’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீலேகா, மலையாளப் பெண்குட்டி. நேர்ல பார்த்ததும் 'எண்ட பேரு ஸ்ரீலேகா, எண்ட ஊரு கேரளா’னு சம்சாரிக்கும்னு பார்த்தா, தமிழ்ல சும்மா பொளந்து கட்டுது பொண்ணு!
'சொந்த ஊரு கேரளானாலும் படிச்சு வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அதனால நான் தமிழ்ப் பெண்குட்டியும் கூட! 16 வயசுலயே பொது நிகழ்ச்சிகள்ல காம்பியர் பண்ண ஆரம்பிச்சுட்டேனே''னு குஷியான பொண்ணுகிட்ட... குடும்பத்தைப் பத்திக் கேட்டேன்.

”மிடில்கிளாஸுக்கும் கீழ உள்ள ஃபேமிலிதான் என்னோடது. அப்பா, செக்யூரிட்டி வேலை பார்த்து ரிட்டயர் ஆகிட்டாரு. அம்மா கார்மென்ட் கம்பெனியில சூப்பர்வைசர். ஒரு அக்கா, கல்யாணம் ஆகிடுச்சு. பத்தாவது படிக்கிற வரை நான் அதிகமா பேச மாட்டேன். ப்ளஸ் ஒன் படிக்கும்போது ஸ்கூல் பீப்பிள் லீடரா மைக் புடிக்க ஆரம்பிச்சேன். அந்தப் பழக்கத்துல காலேஜ், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள்ல காம்பியரா தொடர்ந்து மைக் புடிச்சேன். இந்த வருமானத்துல என் படிப்பு செலவுகளை நானே கவனிச்சுக்கிட்டேன். கூடவே, குடும்பத்தையும் கவனிச்சுக்க ஆரம்பிச்சுட்டேன்!'
'சூப்பர்மா! அதுசரி மீடியா பக்கம் எப்படி?'
'பொது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறதைப் பார்த்துட்டு மீடியாவில் வாய்ப்பு கிடைச்சது. முதல்ல சுட்டி டி.வி, அப்புறம் வசந்த் டி.வியில நியூஸ் ரீடர் ஆனேன். கூடவே 'விளையாட்டு உலகம்’, 'மண் பேசும் சரித்திரம்’ நிகழ்ச்சிகள்னு கலக்க ஆரம்பிச்சுட்டேன். சேலஞ்சிங்கான ரோல் கிடைச்சா, சினிமாவிலும் கலக்கக் காத்திருக்கேன்!''னு சின்னத்திரை பொண்ணுங்களுக்கே உரித்தான ஆசையை லேசா எடுத்துவிட்டாங்க.
'அதுசரி, இந்த ’மண் பேசும் சரித்திரம்’ நிகழ்ச்சிக்காக மலைமலையா ஏறுன மாதிரியெல்லாம் காட்டறீங்களே எல்லாம் செட்டப்தானே?'
'இப்படியெல்லாம் கிளப்பி விடாதே ரீட்டா. இதுக்காக நான் நிறைய மெனக்கெட்டிருக்கேன். நெஜமாவே மலைமேல ஏறி, நிறைய முறை ஸ்லிப்பாகி விழுந்து அடியெல்லாம் பட்டிருக்கு. நான் ஒரு கபடி பிளேயர். அதனாலதான் அட்வென்ச்சர் டைப் நிகழ்ச்சியான 'மண் பேசும் சரித்திரம்’ என்னோட ஆல் டைம் ஃபேவரைட். ஆனா, இதுல ஒரு விஷயம் மட்டும்தான் எனக்கு அலர்ஜி. சாதாரணமா வீட்ல கரன்ட் போயிட்டாலே அலறி அலப்பறையைக் கொடுத்துடுவேன். இருட்டுனா அவ்ளோ பயம். ஆனா, இந்த நிகழ்ச்சிக்காக ராத்திரி 12 மணி இருட்டுல சுடுகாட்டுக்கெல்லாம் போயிருக்கேன் தெரியுமா?'
'சரி சரி செட்டப் இல்லைனு ஒப்புக்கிறேன்... இப்ப ஹேப்பிதானே!'
''ரொம்ப ஹேப்பி ரீட்டா. யூ நோ ஒன் திங்... நான் புது கார் வாங்கி இருக்கேன். கூடிய சீக்கிரம் வீடு வாங்கிடணும். அடுத்த நாலு வருஷத்துல கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிடணும். இதெல்லாம் நடந்துட்டா ஹேப்பியோ ஹேப்பி!'
'அட்வான்ஸ் வாழ்த்துகள்.'
எலிமினேஷன்... திக் திக் திக்!
நம் ஊரு ரியாலிட்டி ஷோ, கேம் ஷோக்களை எல்லாம் பார்த்து போரடிச்சுடுச்சேனு, சேஞ்சுக்காக ஏ.எக்ஸ்.என் சேனலை ரிமோட்ல அழுத்தினா... சும்மா சொல்லக்கூடாது, பிரமாண்டமா நடத்துறதுல ஏ.எக்ஸ்.என் சேனலை அடிச்சுக்க முடியாதுதான்!

அந்த ஷோவோட பேரு... 'ஒன் நாட் ஒன் வேஸ் டு லீவ் எ கேம் ஷோ’! வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல மட்டும் ஒளிபரப்பாகுது. மொத்தம் எட்டு போட்டியாளர்கள் கலந்துக்கிற இந்த நிகழ்ச்சியில, பொதுஅறிவுக் கேள்விகளை கேட்கிறாங்க. உதாரணமா, 'சிங்கத்துக்கு எத்தனை பற்கள்?’. சரியான பதில் அல்லது நெருக்கமான பதில் சொல்ற போட்டியாளர்கள வரிசைப்படுத்தி, கடைசி போட்டியாளரை எலிமினேட் செய்யறாங்க. இந்த எலிமினேஷன் எப்படிங்கறதுதான் த்ரில்லே!
300 அடி உயரத்தில் எட்டு பேரையும் நிறுத்திட்டு, யாரெல்லாம் சரியான பதில் சொன்னாங்களோ அவங்க பேரை சஸ்பென்ஸா வரிசையில் சொல்லி, போட்டியாளர்களோட ஹார்ட் பீட்டை எகிற வெக்கிறாங்க. வரிசையில் கடைசியா இருக்கும் போட்டியாளரை, அந்த உயரத்திலிருந்து விழவைக்கிறதுதான் 'எலிமினேஷன்’ ஸ்டைல். இப்படி இன்னும் டிசைன் டிசைனா ஐடியா பண்ணி, பார்க்கிறவங்களோட ஹார்ட் பீட்டையும் சேர்த்து எகிற வைக்கிறாங்க. பட், இட்ஸ் ரியலி ஸோ த்ரில்லிங் யூ நோ!
வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
எளிமை... அருமை!
''சணல் பொருட்கள், பாக்குமட்டை தட்டு தயாரிப்பு போன்ற சிறுதொழில்களைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளை அதிகம் படிக்காதவர்களும் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி சொல்லித் தருகிறது 'புதிய தலைமுறை’ சேனலின் 'சிக்கனம் + சேமிப்பு = செல்வம்’ நிகழ்ச்சி. தினமும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் உற்பத்திப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கான வழிமுறைகளையும் வழங்குவது வீட்டிலிருந்தே சிறுதொழில் செய்ய விரும்புவோருக்கு பயன் தரும்'' என்று பாராட்டுகிறார் தஞ்சாவூரில் இருந்து எஸ்.நித்யலக்ஷ்மி.
அருவருக்க வைத்த 'சாதனை’!
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு ஒரு தொலைக்காட்சியில் சாதனை நிகழ்வுகள் காட்டப்பட்டன. அதில் ஒருவர் ஒரு பவுல் நிறைய புழுக்களைத் தன் வாயினால் கவ்வி எடுத்து அருகில் உட்கார்ந்திருக்கும் பெண்மணியின் தலையில் போட்டு பவுலை காலி செய்தார். பார்க்கவே அருவருப்பாக இருந்தது. பரிசுக்காக ஆசைப்பட்டு அவர் இதையெல்லாம் செய்தாலும், பார்ப்பவர்களை குமட்ட வைத்துவிட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட வைக்கலாமே' என்று சம்பந்தப்பட்ட சேனலுக்கு ஆலோசனை வழங்குகிறார் ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரம் ராம்குமார்
மற்றவர்களை மட்டம் தட்டாதீர்!
''பிரபல பற்பசை கம்பெனியின் விளம்பரத்தில், தாங்கள் தயாரிக்கும் பற்பசைதான் உயர்ந்தது என்றும், வேறு எந்த பற்பசையை உபயோகித்தாலும் சாப்பிட்ட பொருட்கள் பற்களில் ஒட்டிக்கொண்டு அப்படியே இருக்கும் என்றும் விளம்பரப்படுத்துகின்றனர். இது மற்ற பற்பசை கம்பெனிக்காரர்களை அவமானப் படுத்துவதுபோல் இல்லையா? விளம்பரம் செய்பவர்கள் அடுத்தவர் தயாரிக்கும் பற்பசையை மட்டம் தட்டாமல், தங்கள் தயாரிப்பிலிருக்கும் சிறப்புகளைப் பட்டியலிடலாமே' என்று அறிவுரை சொல்கிறார் சென்னை, மேற்கு தணிகாசலம் நகரில் இருந்து பிரேமாவதி.