மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

அரிவாளுக்கு பயப்படாத பொண்ணுரிமோட் ரீட்டா, படம்: எம்.உசேன்

ம்ம சன் டி.வி நிஷா, ரொம்ப நாளா ரீட்டா பார்வையில மிஸ்ஸிங். ஒரு விசிட்டை போட்டேன்.  

'என்னம்மா நிஷா, பார்த்து ரொம்ப நாளாச்சே..?!''

'ரொம்ப நாள் எல்லாம் இல்லை ரீட்டா. ஒன்றரை மாசம்!''

கேபிள் கலாட்டா!

'என்னது ஒன்றரை மாசமா..?!'

'ஸ்வீட் ராங்கி... உன் சில்லி ஜோக் நல்லாயில்ல. சரி, எங்க போனேன்னு சொல்றேன் கேளு. ஒன்றரை மாசமா நான் மட்டும் தனியா ட்ரக்கிங்காக யூரோப் போயிட்டு வந்தேன்!'

'தனியாவா?!'

'இதுக்கே ஆச்சர்யமானா எப்படி? எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படித்தான் ட்ரக்கிங் கிளம்பிடுவேன்!''

''பார்த்தா பல்லிக்குப் பயப்படுற பொண்ணு மாதிரியில்ல இருக்கே!''

''ஆனா, நான் அரிவாளுக்கே பயப்படாத மதுரைப் பொண்ணு ரீட்டா. படிச்சு வளர்ந்தது சென்னையில. ப்ளஸ் டூ முடிச்சதும் டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, அந்த ரெண்டு மாச லீவுல மாடலிங் பண்ணிட்டிருந்தேன். 'நீ டாக்டருக்குப் படிக்கணும்னா... மாடலிங்கை நிறுத்திடு. மாடலிங் பண்ணணும்னா, அது சம்பந்தமா படி!’னு வீட்டுல ஆர்டர் போட்டுட்டாங்க. சரினு விஸ்காம் சேர்ந்துட்டேன். அப்புறம் மாடலிங். அப்படியே 'கனா காணும் காலங்கள்’ சீரியல் ஆடிஷனுக்குப் போனேன். அதுல கலந்துக்கிட்ட 10,000 பேர்ல தேர்வானது 19 பேர். அதுல நானும் ஒருத்தி. செம்ம இல்ல!

அப்புறம் அப்படியே சன் டி.வியில 'சூரிய வணக்கம்’, 'சன் சிங்கர்’, இப்போ மகாபாரதத்துல திரௌபதி கேரக்டர்னு போயிட்டிருக்கு. அப்படியே 'நான் சிவப்பு மனிதன்’, 'இவன் வேற மாதிரி’னு படங்கள்லயும் தலை காட்டினேன். ட்ரக்கிங், மாடலிங், டி.வி, சினிமானு லைஃப் ஜாலியா போயிட்டிருக்கு ரீட்டா!'

'எனக்கு வேலையே வைக்காம, மடமடனு பேசி, நீ ஒரு டி.வி ஆங்கர்னு நிரூபிச்சுட்டடி நிஷா கண்ணு! கலக்கு கலக்கு!'

சூப்பர் பிஸி ரக்‌ஷன்!

சூர்யா, ஆர்யா போன்ற ஹீரோக்களோட ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை, கலைஞர் டி.வியில தொகுத்து வழங்கும் ரக்‌ஷன், சீக்கிரமே ஹீரோ. அட ஆமாங்க! சார், இப்போ ஒரு படத்துல நடிச்சுட்டிருக்காரு. ''இப்பவே ஒரு ஹேண்ட்ஷேக் போட்டு வெச்சுக்கிறேன். அப்புறமா உங்கிட்ட ஆட்டோகிராஃப் மட்டும்தான் கேட்க முடியும்!''னு சொன்னா, அடக்கமா சிரிக்கிறாரு.

''வெள்ளித்திரைக்கு போயாச்சு... சின்னத்திரைக்கு 'குட் பை’யா..?''

''நான் வெள்ளித்திரைக்குப் போனாலும், சின்னத்திரையை விடமாட்டேன். ஏன்னா, என்னோட கனவே நல்ல ஆங்கர் என்பதாத்தான் இருந்துச்சு. ராஜ் மியூசிக்ல அறிமுகமாகி கிட்டத்தட்ட அந்த சேனல்ல எல்லா ஷோக்களுமே பண்ணியிருக் கேன். இப்ப கலைஞர் டி.வியில சினிமா புரமோஷனல் நிகழ்ச்சிகள் பண்ணிட்டிருக்கேன். பலரும் எங்கிட்ட, 'நீ சினிமாவுல நடிக்கலாமே!’னு சொல்வாங்க. முயற்சி பண்ணினேன். கிடைச்ச சான்ஸ்தான், 'வெத்துவேட்டு’ படம். ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கேன்!''

கேபிள் கலாட்டா!

'டி.வியோட களம் வேற... சினிமாவோட களம் வேற... எப்படி சமாளிக்கிறே?'

'சினிமா படப்பிடிப்பு முடிஞ்சா... போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் முடிஞ்சு, ரிலீஸ் ஆகறதுக்கு மாசக் கணக்குல, சமயத்துல வருஷம்கூட ஆகலாம். ஆனா, டி.வியில தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள், அதுவும் லைவ் நிகழ்ச்சிகளா இருந்துட்டா, அடுத்த செகண்ட்லயே மக்கள்கிட்ட ரீச் ஆகிடலாம். சினிமாவுல டயலாக்ஸ் எல்லாமே இயக்குநர் சொல்லிக் கொடுத்துடுவார். டி.வியில 'இதான் ஷோ’ அப்படீனு சொல்லி தள்ளிவிட்டுடு வாங்க. டைமிங் சென்ஸோட நாமளேதான் நிகழ்ச்சியைக் கொண்டு போகணும்கிறது சேலஞ்சிங்கா இருக்கும். இப்படி நிறைய வித்தியாசங்கள் இருக்குதான். ஆனாலும் சினிமாவை ஆசையோட கத்துக்கிறேன்!''

''அடுத்த அப்டேட்?''

''விஜய் டி.வியில வர்ற 'அது இது எது’ நிகழ்ச்சி யோட இயக்குநர் தாம்ஸன் சார், 'சிரிச்சா போச்சு’ ரவுண்ட்ல எனக்கு சான்ஸ் கொடுத்திருக்கார் ரீட்டா. காமெடியா நடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு இப்பதான் புரியுதுனாலும், ரொம்ப இஷ்டப் பட்டு செய்றேன்! சின்ன வயசுல இருந்தே ’வேஸ்ட், உதவாக்கரை’ ரேஞ்சுக்கு என்னை ட்ரீட் பண்ணின வங்க எல்லாம் இப்போ பெருமையோட பார்க்கறதே, இப்ப கிடைச்சிருக்கிற இந்தப் பெருமையாலதானே!''

'அது சரி... நீ நடிச்சுட்டிருக்கற படம் 'வெத்து வேட்டு’தானே?'

'ஏய்... ரீட்டா என்ன கலாய்க்கிறியா?!''  

கேபிள் கலாட்டா!

''ஓகே... பை!''

'மேட்’ போய் ’மேஜிக் ஸ்கூல்’ வந்தது டும்டும்டும்டும்!

போகோ சேனலின் 'மேட்’ நிகழ்ச்சியில் கலக்கி வந்த ராப், இப்போ அதே சேனலில் 'மேஜிக் ஸ்கூல்’ எனும் புது நிகழ்ச்சியை நடத்துறார். முழுக்க முழுக்க ஜாலியான மந்திர தந்திரங்களைச் சொல்லி, கலகலனு நிகழ்ச்சியைக் கொண்டு போகும் ராப், மீண்டும் போகோ சேனலின் ஃபேவரைட் ஹீரோ ஆகிட்டார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் கண்முன்னே நேரடியா மேஜிக் செய்து காட்டுறார் ராப். அவரோட ஃபன் ப்ளஸ் கிரியேட்டிவ் நிகழ்ச்சியான 'மேட்’ போல, 'மேஜிக் ஸ்கூல்’ நிகழ்ச்சியும் ஃபன் ப்ளஸ் இன்ஃபர்மேட்டிவ்வா இருக்கிறதால, குழந்தைகள் ரொம்பவே விரும்புறாங்க. உங்க வீட்டு வாண்டூஸ் பார்க்கிறதுக்கும், கத்துக்கிறதுக்குமான இந்த டூ இன் ஒன் ஷோ, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 மணிக்கு போகோ சேனலில்!

டோன்ட் மிஸ் இட்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

'நேரத்தை உருவாக்குங்கள்!’

“புதுயுகம் சேனலில் ஒளிபரப்பான 'இனியவை இன்று’ நிகழ்ச்சியில் நேரத்தின் அருமை பற்றி இறையன்பு ஐ.ஏ.எஸ் அருமையாகப் பேசினார். நேரமில்லை என்று கூறுவது தவறு; நேரத்தை உருவாக்குபவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற அரிய கருத்தை கூறினார். இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை பிற சேனல்களும் ஒளிபரப்ப வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெயலட்சுமி வசந்தராசன்.

ஆர்வத்தைக் கூட்டும் 'மூலிகை சமையல்’!

“உடம்பை நோய் நொடியில்லாமல் வைத்துக்கொள்வதற்கு பெரிதும் உதவுபவை மூலிகை உணவுகள். நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த அத்தகைய உணவுகளை மிக எளிய முறையில் கற்றுத்தருகிறது ஸ்ரீசங்கரா டி.வியின் 'மூலிகை சமையல்’ நிகழ்ச்சி. சனிக்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில்... எந்தெந்த மூலிகை உணவுகள் என்னென்ன நோய்களுக்கு தீர்வு தருகின்றன என்ற குறிப்புகளும் இடம்பெறுவது, அந்த உணவின் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது'' என்று நெகிழ்கிறார் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜி.ராமநாதன்.

'டூ இன் ஒன்’ கலக்கல்!

“சன் டி.வியில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தியில் 'சிறப்பு பார்வை’ நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. அதில், 'ஹேர்டை’ உபயோகப் படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கேஸ் அடுப்பை பாதுகாப்பாக கையாளும் வழிமுறை கள், நடைபயிற்சியின் அவசியம் என மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் பல பயனுள்ள செய்திகள் இடம் பெறுகின்றன. பொது செய்திகள், சிறப்பு செய்திகள் என 'டூ இன் ஒன்’னாக கலக்கும் சன் டி.விக்கு சபாஷ்!'' என்று பாராட்டு கிறார் சேலத்தில் இருந்து லதா.