மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

வீட்டுக்குத் தெரியாம ‘விஜே’! ரிமோட் ரீட்டா

விஜய், கலைஞர், ராஜ் மியூசிக், மக்கள், புதுயுகம், மூன், பெப்பர்னு பாரபட்சமே இல்லாம எல்லா சேனல்களிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குறாங்க ஸ்ரீஉஷா!

‘‘என்ன உஷா... வீட்ல அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கச்சி எல்லோரும் நல்லா இருக்காங்களா?’’னு பேட்டியை ஆரம்பிச்சேன்.

“என்ன ரீட்டா, டெக்னிக்கலா டீடெய்ல் கலெக்ட் பண்றதா நெனப்பா? சரி விடு, நானே சொல்றேன். அம்மா தேவி, அப்பா அசோக். அவங்களோட ஒரே செல்லப் பொண்ணு நான். என்னோட லைஃபே அவங்கதான்!’’

கேபிள் கலாட்டா!

“வெரிகுட்! அப்புறம் சீரியல், சினிமா பிளான் எல்லாம் எப்போம்மா?”

“ஒரே ஒரு சீரியல்ல தலை காட்டினேன். ஆனா, எனக்கு அழத் தெரியல. அதனால இப்போதைக்கு சீரியலை கொஞ்சம் ஒதுக்கி வெச்சிருக்கேன். ஆனா, சினிமாவுக்கு ஸ்ட்ரிக்ட்லி நோ! மத்தபடி மாடலிங் பண்ணிட்டிருக்கேன் ரீட்டா.”
 
‘‘ஓ... மாடலிங் ஆல்பம் பார்த்துதான் சேனலுக்கு அழைச்சாங்களா..?’’

“அதுதான் இல்ல. நான் டென்த் படிச்சுட்டு இருக்கும்போது சன் டி.வி ‘மஸ்தானா மஸ்தானா’ நிகழ்ச்சியில காம்பியர் ஆடிஷன்ல செலக்ட்  ஆனேன். ஆனா, வீட்ல நோ சொல்லிட்டாங்க. காலேஜ் முடிச்சதும் வீட்டுக்குத் தெரியாம ராஜ் மியூசிக் சேனல்ல தேர்வாகி... அப்பா, அம்மாவுக்குத் தெரியாம ஒரு லைவ் ஷோவும் பண்ணிட்டேன். என் நேரம், அந்த ஃபர்ஸ்ட் ஷோவையே என் வீட்ல பார்த்துட்டாங்க. பயந்துட்டே வீட்டுக்குப் போனா, அம்மா சிரிச்சுக்கிட்டே திருஷ்டி சுத்தி போட்டாங்களே! அப்புறம் என்ன, க்ரீன் சிக்னல் கெடச்சாச்சேன்னு எல்லா சேனல்லயும் கலக்க ஆரம்பிச்சுட்டேன்.
இப்போ கரஸ்ல எம்.பி.ஏ பண்றதால ராஜ் டி.வி-யில ‘பெண்கள் நேரம்’ நிகழ்ச்சியும், செலிப்ரிட்டி நேர்காணல்களும் மட்டும் பண்ணிட்டிருக்கேன். அப்பப்போ நேரம் கிடைக்கும்போது மாடலிங்ல யும் பிஸியாயிடுவேன்!”

கில்லாடி பொண்ணு!

அவனா நீ..?!

கேபிள் கலாட்டா!

ஸ்மார்ட்டா ‘இன்றைய செய்திகள்’ சொல்லி சமர்த்தா நியூஸ் வாசிக்கிறவங்க எல்லாரும் உண்மையிலேயே சமர்த்துனு நம்பிடக் கூடாது. அதுக்கு உதாரணம், நம்ம பாலிமர் சேனல் நியூஸ் ரீடர் ரஞ்சித்.
 
‘‘ஏன் ரீட்டா எனக்கு இப்படி ஒரு டெரர் இன்ட்ரோ? சரி போகட்டும். ஒரு நியூஸ் ரீடரை பேட்டி எடுக்க வந்ததுக்கு, முதல்ல தேங்க்ஸ். பொதுவா எல்லாரும் ஆர்ட்டிஸ்ட்களைத்தான் வளைச்சு வளைச்சு போட்டோ எடுப்பாங்க. நாங்களும் அதே சேனல்லதான் வேலை பார்க்கிறோம். ஆனா, எங்களை மீடியா கவனிக்கிறதே இல்லையா... அந்த ஆதங்கம்தான்!’’

“அதான் கவனிக்க வெச்சுட்டியே ரஞ்சித்! நியூஸ் வாசிக்கிற, டான்ஸ் ஆடுற, வாய்ஸ் ஓவர் கொடுக்கிற, நடிக்கிற... சகலகலாவல்லவனா இருக்கியே!’’

“எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி... ஸ்கூல் நாட்கள்ல நான் பிரேயர்ல நியூஸ் வாசிச்சதுதான் ரீட்டா. அப்போ டீச்சர்ஸ் எல்லோரும் ‘நியூஸ் ரீடர் மாதிரி சூப்பரா வாசிக்கிறே!’னு பாராட்ட, வீட்டுலயும் நியூஸ் பேப்பரை கையில வெச்சுக்கிட்டு சத்தமா வாசிக்கிற அளவுக்கு அதில் கிறுக்காகிக் கிடந்தேன். ஸ்கூல் முடிச்சதுல இருந்து சேனலுக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு வருஷ முயற்சிக்கு அப்புறம் சன் டி.வி-யில வாய்ஸ் ஓவர் சான்ஸ் கிடைச்சு, அப்படியே நியூஸ் ரீடராயிட்டேன். இப்ப பாலிமர்.’’

“ரஞ்சித் இப்போ ஹேப்பியா?!’’

‘‘அதை ஏன் கேட்கிற ரீட்டா! காலேஜ் கல்சுரல் நிகழ்ச்சிகளுக்கு நடுவரா என்னைக் கூப்பிடுவாங்க. ‘என்னை யார்னு தெரியுதா?’னு கேட்டா, ஒரு 30 பர்சன்ட் பேர் கையைத் தூக்குவாங்க. உடனே நான் மைக் பிடிச்சு, ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’, ‘இந்த வாரம், காதல் வாரம்’னு பேசிக்காட்டினதும், ஆடிட்டோரியமே ‘ஓ அவனா நீ..!’னு அப்ளாஸ் கொடுப்பாங்க. அந்த அங்கீகாரம், ரொம்ப சந்தோஷமா இருக்கும்!’’

‘‘ஓ... நெஜமாவே அவனா நீ..!”

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

உண்மைக்கு சபாஷ்!

‘‘தொலைக்காட்சிகளில், முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்களே வியாபித்திருக்கும் இன்றைய நிலையில், சமீபகாலமாக ஒளிபரப்பாகி வரும் ‘கின்லே’ விளம்பரம் சபாஷ் போட வைக்கிறது. தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு ஊட்டி சென்ற மகளுக்கு மனம் உறுத்தியதால் தூக்கம் வர மறுக்க, தந்தைக்கு போன் செய்து உண்மையைச் சொல்லி ‘ரிலாக்ஸ்’ ஆகும் அந்தத் தருணம்... ‘உண்மையைச் சொல்றதுல எவ்வளவு நிம்மதி’ என்று ஒலிக்கும் குரல்... சபாஷ்!’’ என்று வாழ்த்துகிறார் காயக்காட்டில் இருந்து ரம்யா ராம்கி.

முதியோரை புறம்தள்ளலாமா?

‘‘சன் செய்தி ‘சிறப்புப் பார்வை’யில் முதியோர் இல்லங்கள் பற்றி காட்டப்பட்டது. வயதான ஒரு தாய், ‘என் மகன் எனக்கு 300 ரூபாய் மருத்துவச் செலவு செய்ததை கணக்கு காட்டி அதைத் தரும்படி கேட்டான். என்னால் ஏற்க முடியவில்லை. அதனால்தான் இந்த முதியோர் காப்பகத்துக்கு வந்தேன். பத்து மாதம் கருவில் சுமந்த தாய்க்கு ஒரு மகன் 300 ரூபாய் கூடவா செலவு செய்யக்கூடாது’ என்று கண்ணீர் ததும்ப கேட்டதைப் பார்த்தபோது எனக்கும் கண்ணீர் பொங்கியது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் முதியோரை புறம்தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை! ‘சிறப்பு பார்வை’, நிச்சயம் பலரின் மனதை மாற்றியிருக்கும்’’ என்று நெகிழ்கிறார் கோவிலாம்பூண்டியில் இருந்து பி.கவிதா.

விமானம் தயாரிப்பது எப்படி?

‘‘டிஸ்கவரி சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ‘ஹவ் டூ தே டூ இட்’ என்ற நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விமானங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பது முதல்... குளிர்பானங்கள், உரங்கள், கம்ப்யூட்டர், பெர்ஃப்யூம்கள், வாகன இன்ஜின்கள் என நம்மால் எளிதில் தெரிந்துகொள்ள முடியாத பொருட்கள் ஆரம்பம் முதல் கடைகளுக்கு வருவது வரை துல்லியமாக காட்டப்படுவது பாராட்டுக்குரியது’’ என்கிறார் சேலத்தில் இருந்து பி.கீதா ஆறுமுகம்.