மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஓவியங்கள்: சேகர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200   

அனுபவங்கள் பேசுகின்றன!

மறதியைத் தவிர்க்க மணியான ஐடியா!

காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில், சில சமயம் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் செல்போனை மறந்து, கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். இதைத் தவிர்க்க ஒரு யோசனை தோன்றியது. இப்போதெல்லாம் ஹேண்ட் பேக்குக்குள் செல்போனை வைத்து சார்ஜ் செய்கிறேன். வெளியில் கிளம்பும் சமயம் ஹேண்ட் பேக்கை எடுக்கும்போது, சார்ஜரை நீக்கி செல்போனை மறக்காமல் எடுத்துச் சென்றுவிடுகிறேன். நீங்களும் இப்படிச் செய்யலாமே!

 - விஜிலா தேரிராஜன், அருப்புக்கோட்டை

அனுபவங்கள் பேசுகின்றன!

இயற்கை அறிக்கை!

என் தோழியுடன் ஷாப்பிங் செய்யக் கிளம்பினேன். அதிக வெயில் இல்லை. ஆனால், தோழி குடை எடுத்து வந்தாள். காரணம் கேட்டதற்கு நிறைய தட்டாரப்பூச்சிகள் (தும்பிகள்) தாழ்வாகப் பறக்கின்றன... இதனால் மழை வருவது நிச்சயம் என்றாள். இத்துடன் அவள் வீட்டு வாசற்படியில் நிறைய பிள்ளையார் எறும்புகள் வேறு இடத்துக்கு கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தனவாம். எறும்புகள் நேராகச் செல்லாமல், திட்டு திட்டாக கூட்டமாகச் சென்றால் அதுவும் மழை வருவதற்கான அடையாளம் என்றாள். ஆனால், வானத்தில் கருமேகங்களே இல்லாததால், எங்கள் வீட்டுத் துணிகளை மாடியில் காயவைத்துவிட்டு வந்திருப்பதைப் பற்றி கவலைப்படாமல் சென்றேன்.

நாங்கள் பாதி ஷாப்பிங்தான் செய்திருப்போம். எங்கள் வேலைக்கார அம்மா போன் செய்து ``மழை பெய்யுது. வீடு பூட்டி இருக்கு. அதனால துணிகளை எடுத்து ஜன்னல் வழியாக உங்க வீட்டு ஹாலில் போட்டுட்டேன்’’ என்றாள். நான் அதிசயத்தில் உறைந்தேன். வானிலை அறிக்கையோடு, இதுபோன்ற ‘இயற்கை அறிக்கை’களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் உணர்ந்தேன்.

- எஸ்.அன்னபூர்ணா, போரூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

டூ வீலர் டெரர்!

சமீபத்தில் நான் பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது. பெரியவர் ஒருவர், தான் செல்ல வேண்டிய பஸ் வந்ததும் அதை நோக்கி வேகமாகச் சென்றார். அப்போது அருகில் நின்றிருந்த டூ வீலரில் ஏற எண்ணி அதன் ஓட்டுநர் அவசரமாகக் காலைத்தூக்க, அது பெரியவர் மேல் பட்டு, அவர் நிலை குலைந்து கீழே விழுந்துவிட்டார். நின்றிருந்தவர்கள் அந்தப் பெரியவருக்கு உதவி செய்து, வேறொரு பஸ்ஸில் ஏற்றிவிட்டோம். இதில் கொடுமை என்னவென்றால்... பெரியவரைக் கீழே தள்ளியவர், இதுகுறித்து கொஞ்சம்கூட கவலைப்படாமல் சென்றதுதான்!

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், யாரைப் பற்றியும் எண்ணாமல் ஏறும்போதும் சரி, இறங்கும்போதும் சரி... தன்னிச்சையாக செயல்படுவது நல்லதல்ல! மேலும் பஸ் நிறுத்தத்தில் இவர்கள் வேகத்துடன் இடதுபுறமாக கடந்துசெல்வது, பஸ்ஸில் ஏறுபவர்களுக்கும், இறங்குபவர்களுக்கும் மிகப்பெரிய இடையூறாக இருப்பதுடன் பயமுறுத்தும் செயலாகவும் உள்ளது. வெளிநாடுகளில் நடந்து செல்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வண்டி ஓட்டுகிறார்கள். இங்கே நடக்கவே உரிமை கேட்டுப் போராட வேண்டும் போலிருக்கிறதே! வண்டி ஓட்டுபவர்களே... சற்றே சிந்தியுங்கள்!

- ரஜினி பாலசுப்ரமணியன், மடிப்பாக்கம்