மற்ற எபிசோடுகள்
Published:Updated:

 கேபிள் கலாட்டா!

குதூகல `தேவதை'கள்!ரிமோட் ரீட்டா

செம ஜோரா நடந்து முடிஞ்சுடுச்சு சன் டி.வி-யோட ‘சன் குடும்ப விருதுகள்’ நிகழ்ச்சி! `சன்'ல ஒளிபரப்பாகற சீரியல் களுக்கான இயக்கம், கதை, ஹீரோ, ஹீரோ யின்னு பல பிரிவுகளில் விருதுகள்! அதுல, ‘சன் குடும்ப தேவதை’ விருதை வாங்கின அந்த நாலு தேவதைகளுக்கும் வாழ்த்துச் சொல்லப்போனா ரீட்டா!

 கேபிள் கலாட்டா!

‘‘சத்யாவோட காஸ்ட்யூம்ஸுக்கும் தேங்க்ஸ் சொல்லணும்!’’

‘தெய்வமகள்’ சீரியல்ல ‘சத்யா’வா கலக்கிட்டிருக்கும் வாணி போஜன், சந்தோஷத்தில் இருந்து இன்னும் வெளியில வரல! ‘‘ரீட்டா... நான் ஏற்கெனவே மாடலிங் பண்ணிட்டு இருந்தாலும், பப்ளிக்கிட்ட அவ்வளவா ரீச் ஆகல. இப்போ எங்க போனாலும், ‘சத்யா!’னு கொண்டாடுறாங்க. என் மாடலிங் ஃபீல்ட் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை ‘செலிபிரிட்டி மேடம்’னுதான் கூப்பிடறாங்க. இப்போ இந்த ‘தேவதை’ அவார்டு வேற... சந்தோஷத்தோட உச்சத்துல இருக்கேன்!’’

‘‘நன்றி சொல்ல லிஸ்ட் வெச்சிருப்பீங்களே!’’

‘‘நிச்சயமா! விகடன் டெலிவிஸ்டாஸ், சன் டி.வி, அப்புறம் எங்க டைரக்டர் குமரன் சார்... இவங்க எல்லோருக்கும் பிக் பிக் தேங்க்ஸ்! சீரியலில் ஐ லவ் மை காஸ்ட்யூம்ஸ்! ஆரம்பத்துல இருந்தே ‘சத்யா’வோட ஆடைகளை ஒரு டிசைனர் வெச்சு ரெடி செய்து கொடுத்து, அந்த கேரக்டரோட இமேஜை பாந்தமாவும், அழகாகவும் செதுக்குறதுல விகடன் டெலிவிஸ்டாஸ்ல  ரொம்பவே மெனக்கெடுறாங்க.

ஊட்டி, கோத்தகிரி பக்கத்துல இருக்கிற அரவேணுங்கிற சின்ன கிராமம்தான் என் சொந்த ஊர். மாடல் வாணி போஜனைவிட, `தெய்வமகள் சத்யா’தான் அவங்களுக்கு எல்லாம் பெருமையா இருக்கா. என்னோட எல்லா முயற்சிகளிலும் எனக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கிற என் குடும்பத்துக்கும், என் ஊருக்கும் இந்த அவார்டை டெடிகேட் பண்றேன்!’’

ஊட்டி பியூட்டி!

‘‘மனீஷா ரொம்ப கோபக்காரி!’’

‘சக்தி’ சீரியல் நாயகி ‘சக்தி’க்கு கை கொடுத்தா... பொண்ணு பேரு மனீஷா சாட்டர்ஜியாம். சொந்த ஊரு கொல்கத்தாவாம்!

‘‘ஹை ரீட்டா! உன்னை முதல் முறை பார்க்கிறேன்!’’

‘‘எப்படி... கொல்கத்தா பொண்ணு, தமிழ் சீரியல்ல?”

“நான் ஒரு விளம்பர மாடல் ரீட்டா. மலையாளத்துல ‘டிராஃபிக்’னு ஒரு படம். அதோட ஹிந்தி ரீ-மேக்ல நடிச் சிருக்கேன். 2015-ல ரிலீஸ் ஆகுதுன்னு நெனக்கிறேன். அப்படியே எல்லா மொழிகளிலும் முயற்சி செய்துட்டு இருக்கும்போதுதான், ‘சக்தி’ வாய்ப்பு வந்தது. என்னோட ஒரிஜினல் கேரக் டருக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர். மனீஷாகிட்ட யாரும் வாலாட்ட முடியாது. அவ்ளோ கோபக்காரி. ஆனா ‘சக்தி’ ரொம்பப் பாவம். இந்தக் கேரக்டர் மட்டுமில்ல... மொழி, உடைனு எல்லாமே எனக்குப் புதுசு!’’

‘‘தமிழ் சீரியல் உலகின் ‘தேவதை’ ஆகிட்டீங்க போல!’’

“இது என்னோட முதல் சீரியல் ரீட்டா. சொல்லப்போனா, ‘சன் குடும்ப விருதுகள்’ நிகழ்ச்சி, எனக்குக் கண்ணக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்துச்சு. தமிழ் தெரியாததால, எல்லோரோட எக்ஸ்பிரஷனையும் வெச்சு என்ன நடக்குதுனு யூகிச்சிட்டு இருந்தேன். திடீர்னு காதுல என் பேரு விழுந்ததும், நம்ப முடியாம மேடை ஏறினேன். அவார்டை கையில வாங்கின வரை, கொஞ்சம் புரிஞ்சு, கொஞ்சம் புரியாமனு, எப்படி ரியாக்ட் பண்றதுனுகூட தெரியாம தடுமாறினேன். இது, என் கேரியருக்கு பெரிய ஊக்கம்!’’

ரசகுல்லா பொண்ணு!

 கேபிள் கலாட்டா!

‘‘நடிப்பு மெருகேறுது!’’

‘நாதஸ்வரம்’ சீரியல் ‘மலர்’, அதாங்க ஸ்ரீத்திகா உற்சாகமா பேசினாங்க.

‘‘ரீட்டா... போன முறை ‘சிறந்த மருமகள்’ அவார்டு. இந்த முறை ‘தேவதை’ அவார்டு. ஸ்ரீத்திகா ரொம்ப ஹேப்பியா இருக்கா. என்ன ட்ரீட் வேணும் கேளு!’’

‘‘நீங்க நடிக்கிறதே ட்ரீட்தான்!’’

‘‘ரீட்டா... இது டூ த்ரீ ஃபோர் மச்! ஆனாலும், உண்மையாவே நாளாக ஆக என் நடிப்பு மெருகேறிட்டு வர்றதை நானே உணர்றேன். எல்லாம் அனுபவப் பாடம்தான். என் கோ-ஆர்டிஸ்ட்ஸும் டைரக்டர் திருமுருகனும் ரொம்பவே உதவறாங்க. அவங்களோட ஈடுகொடுத்து நடிக்கலைனாலும், என்னோட பெஸ்ட்டை கொடுக்கணும்னு நினைப்பேன்! முன்ன எல்லாம் அழற ஸீன்ல, முகம் எப்படி எக்ஸ்போஸ் ஆகுமோனு தயக்கமா இருக்கும். இப்போவெல்லாம் அழற ஸீன்களுக்கு கிளிசரின் யூஸ் பண்றதே இல்ல!’’

“புரொடியூசருக்கு கிளிசரின் செலவை மிச்சப் படுத்தறீங்களா?!”

“உன் குறும்பு உன்னை விட்டுப் போகாதே. இந்த சீரியல் ஆரம்பிச்சப்போ, காரைக்குடிக்கும் சென்னைக்கும் போயிட்டு வர்றது ரொம்ப கஷ்டமா இருக்கும். எப்போடா சீரியல் முடியும்னு புலம்புவேன். போகப் போக என் வீட்டைவிட, காரைக்குடி இப்போ எனக்கு நெருக்கமாயிடுச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல சீரியல் முடியப் போறதை நினைச்சா, ரொம்பக் கஷ்டமா இருக்கு ரீட்டா! பாரு... கிளிசரின் இல்லாமலே கண்ணீர் வருது!’’

நோ... கேமரா இல்லாம அழக்கூடாது!

 கேபிள் கலாட்டா!

‘‘பிரின்சிபால், வைஸ் பிரின்சிபால், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் எல்லாமே...’’

‘தென்றல்’ சீரியல் ‘துளசி’க்கு ‘ஹாய்!’ சொன்னேன்.

‘‘போன வருஷம் அவார்ட் வாங்கினதால, இந்த வருஷம் இருக்காதுனு நினைச்சேன் ரீட்டா. ஆனா, இந்த வருஷம் ரெண்டு அவார்ட்ஸ்! ‘தென்றல்’ டீமுக்கும் சன் டி.வி-க்கும் நன்றி நன்றி நன்றி!’’னு உற்சாகமானாங்க ஸ்ருதி ராஜ்!

‘‘அஞ்சு வருஷமா ஒரே சீரியல்ல நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு?’’

“ரீட்டா... நீ சொல்லிதான் அஞ்சு வருஷம் ஆனதே தெரியுது! அந்தளவுக்கு என்ஜாய் பண்ணிட்டிருக்கேன். இது என்னோட முதல் சீரியல். சக்சஸ் பேனரான விகடன் டெலிவிஸ்டால், சன் டி.வி-னு, இந்த புராஜெக்டை பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப லக்கி.

கிட்டத்தட்ட ஸ்கூல் மாதிரி இங்க நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். இந்த ஸ்கூலோட பிரின்சிபால், வைஸ் பிரின்சிபால், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் எல்லாமே எங்க டைரக்டர் குமரன் சார்தான். எங்க வீட்டுல எனக்காக சீரியல் பார்க்க ஆரம்பிச்சு, ‘தென்றல்’ உபயத்துல இப்போ நல்லா தமிழ் கத்துக்கிட்டாங்க!’

‘‘சீரியலுக்கு ஃபேர்வெல் நெருங்கிடுச்சு போல..?’’

‘‘ஐயோ, அதை ஞாபகப்படுத்தாதே ரீட்டா. எங்க டீம்ல எல்லோருமே ஒரு ஃபேமிலியாதான் பழகிட்டு வர்றோம். சீனியரா இருந்தாலும், தீபக் பந்தா இல்லாம சகஜமா பழகுவார். ஆடம்ஸ் இருக்கிற இடம் எப்பவும் ஜாலியா இருக்கும். சீரியலில் என் அப்பா, தங்கை, சோறு போடாத சித்தியை எல்லாம் இனி ரொம்ப மிஸ் பண்ணுவேன்!’’

ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸ்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

கலை, பண்பாடு, புராணம், புராதனம்!

‘‘பொதிகை தொலைக்காட்சியில் சனிக் கிழமைதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘புனித பாரதம்’ வினாடி வினா நிகழ்ச்சி சிறப்பாகத் தொகுத்து வழங்கப்படுகிறது. நமது கலை, பண்பாடு, பாரம்பர்யம், புராணம், புராதனம் என அனைத்துப் பகுதிகளையும் அலசி ஆராய்ந்து வழங்கப்படும் இந்நிகழ்ச்சி மிகவும் பயன்தரும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது’’ என்று மனநிறைவோடு பாராட்டுகிறார் கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தில் இருந்து எஸ்.வளர்மதி.

கண் கசியவைத்த ‘கானா குயில்’!

‘‘கலைஞர் டி.வி-யில் வரும் ‘கானா குயில் பாட்டு’ ரசிக்க வைக்கிறது. விளிம்பு நிலை மனிதர்களாய் தாங்கள் ரசித்த அத்தனை விஷயங்களையும் எளிய வார்த்தைகளில் பாடுகிறார்கள். காதல், கொசுக்கடி எனப் பாடுபவர்கள், அண்மையில் திருநங்கைகளின் வாழ்க்கை முறை பற்றி பாடியபோது என் கண்கள் கசிந்துவிட்டன. கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்’’ என்று வேண்டுகோள் வைக்கிறார் ஆடுதுறையில் இருந்து எஸ்.அபிநயா.

‘டாக்டர் டாக்டர்’...  சூப்பர்... சூப்பர்!

‘‘விஜய் டி.வி-யில் சனிக்கிழமைகளில் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் ‘டாக்டர் டாக்டர்’ நிகழ்ச்சி அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. சாதாரணமாக காய்ச்சல், தலைவலி, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகளை எடுத்து, அதற்கான காரணங்களை டாக்டர் குழுவுடன் கலந்து ஆலோசனை வழங்குவதோடு அதற்கான தீர்வுகளையும், எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம், அவற்றிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்கள். ஒரே மேடையில் ஆயுர்வேதம், அலோபதி, சித்தா என அனைத்து துறை மருத்துவர்களின் ஆலோசனையும் வழங்குவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று’’ என்கிறார் சென்னை, மடிப்பாக்கத்தில் இருந்து ரஜினி பாலசுப்ரமணியன்.